Todays Date:

நிவேதப்ரியா IV

அன்று காலை 7.30. அவளைச் சந்திப்பேன் என சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. எதிரே வந்துகொண்டிருந்தாள்.

எப்போதோ பார்த்த ஞாபகம். அவள்தானா என்ற சந்தேகம். நேரே வந்தவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலாய் என்னைக் கடந்துபோனாள்.

ஆமாம்.
ப்ரியாதான். ப்ரியாவே தான். வருடங்கள் பல கடந்ததால் என்னைச் சரியாய் நினைவில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வெகுநேரம் எடுக்கவில்லை.

ஒரு தொலைபேசி அழைப்பினூடாக அவள் தான் என்பதை அறிந்துகொண்டேன்.

எனக்குள் உள்ள மொத்த அன்பையும் சேர்த்து ஆரோகணித்திருந்த ப்ரியாவைக் கண்டதில் உள்ளம் கொள்ளை இன்பத்தில் மிதக்கத் தொடங்கியது.

அவளைப் பார்த்த தேவ கணங்களில் இமைக்க மறந்துபோன கண்களுக்குள் ஆழமாய் ஊன்றிவிட்ட ஆனந்தம் உச்சங்கால் வரை ஆணிவேராய் அகழ்ந்துபோனதாய் உணர்வு.

அன்றைய நிசப்தமற்ற இரவில் வானத்துக்குக் கைவிரித்து சத்தமாய் நிலவுக்கு செய்தி சொல்லவேண்டும் போலிருந்தது. முதலிரண்டு ஜாமங்கள் முழுவதும் காலைப்பொழுதில் என்னைக் கபலீகரப்படுத்தியவளின் ஆக்கிரமிப்பும் ஆட்படுத்தல்களும்…நான் எங்கோ இழுத்துச்செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அங்கு வண்ணத்துப் பூச்சிகள் குடில் அமைத்து எனக்கு இடம்கொடுக்க அதில் மல்லிகை மஞ்சத்துப் படுக்கை.

எங்கோ கலந்துவிட்ட குழல் இசையோடு இளந் தென்றலின் உரசல், இடையிடையே என்பெயரை அழுத்தமாய் உச்சரிக்கும் உன் குரல்…

ஜன்னல் வெளியெங்கும் நட்சத்திர பயணம் அந்த மெல்லிய குரலுக்கு அவையும் அடங்கிப்போயின போலும்!

திடீரென வண்ணத்துப் பூச்சிகள் குடில் களைத்துப் பறக்கின்றன. அங்கே வெண் தேவதைகளுக்கு மத்தியில் …
விழிகளிலிருந்து விடுவிக்கப்படாத உன் உருவம்!

ஆம்!
கற்பனை தான்.

அவள் நினைவுகளால் இயல்பாகவே தாழிட்டுக்கொண்ட இமைக்கதவுகளை மெல்லத் திறக்கிறேன்.

“ப்ரியா,
பள்ளிக் காலத்தில் பலருடன் நீ பேசிக்கொண்டிருப்பாய். நான் எனக்குள் உன்னை நிரப்பிக்கொண்டிருப்பேன்.

உனக்கும் எனக்குமான சங்கேதங்களையும் தாண்டி வளர்ந்தது காதல். அறிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லவும் விரும்பவில்லை.

இரகசியங்களோடு துளிர்ந்த காதல் மரணத்தின் இறுதி மூச்சோடு மாண்டுபோகட்டும்.”

வெளியில் சொல்லமுடியாமல் மனதுக்குள் உதிர்ந்துபோன வசனங்கள் இவை.

சந்திப்பேன்.
நிச்சயமாக சந்திப்பேன்.

வெற்றுக் காகிதப் பைக்குள் காரணமே தெரியாமல் தங்கியிருக்கும் காற்று போல் ஏதோ ஒன்று எனக்குள் இருக்கிறது. காட்சிப்படுத்தல்களுக்குள் அடங்காத உருவமோ உருவகமோ படுத்த முடியாமல் இருப்பதை அவளிடம் ஒப்புவிப்பேன்.

அனுமானிக்க முடியாதளவு அன்புவைத்து அனுமதி கேட்காமல் உன்னை என்னுள் தங்க வைத்தமைக்காக நீ தூற்றப்போகும் அந்த நாளுக்காக காத்திருப்பேன்.

உன் தூற்றுதல்களையும் நான் சேமித்துவைத்து நினைத்துக் கரைந்துபோவேனோ என அப்போதும் என்மனம் சொல்லியது.

நிஜங்களை அறுத்துவிட முடியும். எங்கே போடுவது? மீண்டும் மனதுக்குள்ளா?

(தொடர்ந்தும் பேசுவேன்…)

3 comments:

கவி அழகன் said...

நல்லா எழுதி இருக்குது

Anonymous said...

“நிஜங்களை அறுத்துவிட முடியும். எங்கே போடுவது? மீண்டும் மனதுக்குள்ளா?” அழகான வரிகள்.

Unknown said...

Expecting the 5th episode soooooon. Plzzzzzzzz