Todays Date:

நிவேதப்ரியா (V)

ஆமாம்..! அவளை அடைய முடியாது என்று தெரிந்தும் மனம் ஏன் இப்படி தூண்டில் புழுவாய் துடித்துப்போகிறது என பல சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.

மணவறையில் சந்திக்க முடியாத அவளை மனவறையில் வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன என தனிமையில் சிந்தித்ததுண்டு.

விதைக்கப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்ட காதல் என்னுடையது. ஆழமான அன்பினைக் கொண்டு தனியறை சமைத்து நினைவுகளோடு வாழும் நிந்திக்கப்பட்ட உயிர் என்னுடையது.

சடப்பொருள் என்றால் திரைகொண்டு மறைக்க முடியும். சுவாசத்தில் கலந்து ஜீவனின் அத்தனை அந்தரங்ககளையும் சூழ்ந்து நரம்புகளெங்கும் விரிந்து மனதில் புடைத்துக் கிடக்கும் காதலை எங்ஙனம் மறைப்பது?

மொட்டை மாடித் தனிமையில் விடைகிடைக்குமா என சிந்திக்கத் தொடங்கினேன்.

அவளிடமிருந்து விலகிச் செல்வதுதான் சரியான முடிவு என்பதை ஆழ்மனது தீர்மானித்தது.

அதற்காக என் காதலை புதைத்துவிடத் தீர்மானித்து விடியலுக்காக காத்திருந்தேன்.

அப்போதைய மனதின் கீறல்கள் இவை.

ஓர் உண்மை வாசகம்



கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்

மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…

பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…

உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….

இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது

மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்

கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்

கோடி பூக்களோடு
நீ – என் வானில்

பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு

‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’



விடிந்தது அவள் அழைப்போடு..!

நினைவுகளோடு உறங்குவதும் காலையில் கைத் தொலைபேசியில் அவள் பெயர் பார்த்து ஹலோ சொல்லுவதும்….

ஆக… எத்தனை நாளைக்கு துடித்துத் துடித்து என்னையே நான் துண்டாடுவது?

காதலை காலனுக்கு அர்ப்பணித்து அன்புக்கு விடைகொடுக்கும் நேரத்தை அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு…பன்னிரு வருடங்களுக்குப் பிறகு…

எந்த வார்த்தையும் நேரடியாகப் பேசியதில்லை. எந்தச் சந்தர்ப்பதிலும் எமது பார்வைகள் சில நொடிகளுக்கு மேல் நீடித்துக்கொண்டதில்லை.

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?

பிஞ்சுக் குழந்தைக்கு பேச்சுக் கற்றுக்கொடுப்பது போல்… மனம் அல்லாடித் தள்ளாடியது.

இடம்,நேரத்தை தீர்மானித்து ஒருவாரத்தின் பின்னர் சந்திப்புக்கான விடியலும் விடிகிறது.

குளிர்ச்சியான சூரியன், மென்மைத் தென்றல், காரணமின்றிய முறுவல், நேரத்துக்கு நேரம் இதயத் துடிப்பில் மாற்றம்….என அத்தனையும் என்னை இறுகக் கட்டிப்போட்டன.

தலையணை மந்திரம்போல் அவள் ஒருவார்த்தையில் நான் கட்டுண்டுவிட்டால்….?

அதென்ன தலையணை மந்திரம் எனக் கேட்கிறீர்களா?

குடும்பத் தலைவன் எப்போதும் வேலைப்பளுவில் தான் இருப்பான். காலையில் சம்பிரதாய முறைப்படியான தொழில். மாலையில் வீடு. இரவில் மறுநாளைக்கான சிந்தனை…. இப்படி அவனது சிந்தனைகள் ஆழமாக மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

குடும்பத் தலைவிக்கு ஏதாவது தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதனை கணவரிடம் வெளிப்படையாகச் சொல்லச் சிரமப்படுவாள்(அந்தக்காலத்துப் பெண்). ஏதாவது முக்கியமான தேவை இருக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் தந்திரமான மந்திரம் தான் இந்தத் தலையணை மந்திரம்.

அதாவது கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது. இருவருமே ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பார்கள். அப்போது மனைவியின் மீது அதீத அன்பினையும் பிணைப்பினையும் கணவன் கொண்டிருப்பான்(ஆய்விலும் நிரூபிக்கப்பட்டது).

உடலுறவின் பின்னர் தன் கணவனை தலையணையோடு வாரியணைத்து தனது தேவையை சொல்லுவாளாம் மனைவி. அந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் சொன்னாலும் கணவன் தலையாட்டுவானாம்.

அதுதான் தலையணை மந்திரம். அது பலிக்கும் என்பது உண்மை எனச் சொல்கிறார்கள். எழுத்தாளர் சுஜாதா பல சந்தர்ப்பங்களில் இதைச் சொல்லியிருப்பார்.

(தொடர்ந்தும் பேசுவேன்)

விரிவாக படிக்க ……..