Todays Date:

அடைமழை – வெறும்வீதி – நீ – நான்



மென்காற்றோடான வாசம்

இந்த வழியில்தான்
சென்றிருக்கிறாய்

வழியிடையெங்கும்
உன் விழிபார்த்த இடமெல்லாம்
விழியொளியில் மெய்மறந்து
சலனமில்லாமல்
அடங்கிப்போயிருக்கின்றன

கால்பதித்த சுவடுகளில்
இனிப்புச்சுவை தேடி
எறும்பூறி மார்பதைக்கின்றன

மணல்வெளியில் சிதறிய
உன் ஒற்றைப்பூவைச் சுற்றித்தான்
எத்தனை வண்ணத்துப்பூச்சுகள்

சலங்கை ஒலிக்குள்
சவீகரித்துப்போனதாய்
சத்தமில்லாமல் விழுகிறது
மழைத்துளி

என் கன்னங்கள் மட்டுமல்ல
அந்தப் பெருநிலமே
நனைகிறது

இதயத்துக்கு உரம் தந்தவளால்
முழு உடலும் ஈரமாகிறது

அடைமழையில்
கண்ணீருக்கான அடையாளங்கள்
காணாமல்போகின்றன
இந்தமழையும்
உன் சிரிப்பும் ஒன்றுதான்

கரைந்துபோகும் உன் சுவடுகளை
கடன் கேட்டா இனிப்பெறமுடியும்?
எனக்கான உன் தற்காலிக
அன்பைப் போலத்தான் இவையும்

உன் முன்னால் நின்று
பேசியதைவிட
உன்னோடு பேசியவை அதிகம்

ஏன்
இந்த பாழ்வீதியில்நின்றுகூட
உன்னோடு நடக்கும்
மௌன ஏகுதல்களுக்கு
ஆதாரம் ஏது?

இந்த வீதி
மழை
மணம்
சுவடுகள்
எல்லாவற்றையும் விட்டுச்செல்கிறேன்…
நீ சென்ற வழிக்கு நேரெதிராக!

நான் நீ இணைந்ததானதைத் தவிர்த்து
எனக்கானவளில்லாத உன்
எதையுமே நான்
எடுத்துச்செல்வதில்லை

மரணம் துரத்தினாலும் - உன்
மடியில் இறக்கும் வேண்டுதல்
இனி என்
பட்டியலில் இல்லை!



- ஆர்.நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

இயற்கையும் காதல்கொள்ளும்..!




சூரியக் காதலன்
எங்கேயென
மின்மினிகளை ஏவித்
தேடுகிறாள் பூமிப்பெண்

காரிருளில்
கண்ணுக்கெட்டாத்தூரம் சென்று
கண்ணயர்ந்துவிட்டானோ என
தென்றலையும்
தூதனுப்புகிறாள்

“எங்கே போனாலும்
அள்ளியணைக்க
வரத்தானே வேண்டும்
அப்போது கிள்ளி இழுத்து
கோபம் தீர்க்கிறேன்”

என
அவனை எதிர்பார்த்தே
நிசப்தமாய் நினைவிழந்து
தூங்குகிறாள்

கழிகிறது நேரம்…

மறுபொழுதில்….

தன்னவளை ஆக்கிரமித்த
பனித்துளிகளை
இமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு
தூங்கும் பெண்ணை
துயிலெழுப்புகிறான் ஆதவன்…

காதலனைக் கண்ட களிப்பில்
கோபம் மறந்து
குதூகலித்து
வாரியணைக்க முற்படுகையில்

அந்தோ…..

நொடிப்பொழுதில் முந்திக்கொண்ட
முகிலவன்
முன்னதாய் முத்தமிடுகிறான்…

முத்தத்தின் தகப்பில்
உணர்வுகள் உயிர்க்க
மிதம்கொண்டு மௌனித்து
மேனிசிவக்கிறாள் அவள்…
உச்சிமுதல் சிவந்ததில்
வானம் நிறந்து நிறைகிறது

ஓ…
காதலர்களின்
புணர்தலைக் கண்ட சேவல்
கூவிக்கூவி கூட்டம் கூட்டுகிறது
விடயம் அறிந்த
விண்மீன்கள்
வெட்கத்தில் மறைய
சல்லாபம் காண
கூடுவிட்டுப் பறக்கின்றன
பறவைகள்

மீள்நினைவுடன் மீண்டெழுகிறாள்
நாணத்தோடவள்...

எப்போதும் என்னோடிருவென
காதலனுக்கு உத்தரவிட்டபடி!

-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

எனது சினிமா : சங்கிலித்தொடர்

ஒப்பீட்டு ரீதியில் தற்காலத்தில் சினிமாவின் மீது மக்கள் கொண்டுள்ள பிடிப்பு அதிகம் எனலாம். காத்திரமான சினிமா படைப்புகள் காலத்தால் தோற்றுவிடுவதில்லை.பல் அங்கங்களிலும் சினிமா, வாழ்வோடும் சரி மனதோடும் சரி மாற்றங்களை ஏற்படுத்துவதாய் உள்ளது.
எனக்கும் அதேபோல் தான்.சினிமா படைப்பாளிகள், நடிகர்கள் போல் பேசவேண்டும் உடுக்க வேண்டும் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் மனதளவில் பலவற்றை நேசித்து மகிழ்ந்து அழுதிருக்கிறேன்.
சினிமா பற்றிய பலவற்றை எழுதத்தூண்டி இந்தச் சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு என்னை அன்பாய் அழைத்த என் அன்பு நண்பர்கள் நம்ம வந்தியத்தேவனுக்கும் நம்ம மாயாவுக்கும் எனது இதயநன்றிகள்।

01। எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சொல்வதற்கு சரியாக நினைவில் இல்லை. முதன் முதலாக பார்த்த படம் என்ன என்பதும் நினைவுக்கெட்டியவரையில் இல்லை. ஆனால் நாயகன் படம் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.
எமது ஊரில் திரையரங்கு இல்லை।டீவி டெக் கொண்டுதான் படம் காட்டுவார்கள் (நம்ம சொல்ற படம்காட்றது இல்லப்பா). 1990 களில் ஒரு வீட்டில் டெக் இருக்கிறதென்றால் அவர் பெரிய மனிதர் தான். நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டார்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படம் அந்த டெக் உரிமையாளரின் வீட்டில் ஓடும்.
அங்கு அனுப்புவதற்கு எனது பெற்றோர் விரும்பாததால் இடைக்கிடை வாடகைகொடுத்து அந்த டெக்கினை வாங்கி படம் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த படம் தான் நாயகன். கமலும் குழந்தைகளும் மழையில் நனைந்து பாடும் பாடல் நெஞ்சைவிட்டகலாதது. கமலஹாசனின் நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்ததால் அவரது படத்தைத் தவிர ஏனைய படங்களை பார்க்க நான் கொஞ்சம்கூட விருப்பமில்லாதவனாக இருந்தேன். மழை பெய்யும் காலங்களில் பேனை மை உடலில் ஊற்றிக்கொண்டு (தென்பாண்டிச் சீமையில பாடல்…) கமலைப் போன்று நடிக்க முற்பட்டுத் தோற்றுப்போனதும் உண்டு. சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் இவரும் மனிதப்பிறப்புதானா என வியந்த சிறுவயதுக்காலமும் உண்டு.

எமது வீட்டிலும் டெக் வாங்கிய பின்னர் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன், மைக்கேல் மதன காம ராஜன், தளபதி, தங்க மகன்,குணா, மூன்றாம்பிறை, மௌனராகம், பயணங்கள் முடிவதில்லை, கேளடி கண்மணி,சலங்கை ஒலி, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் பார்த்தது நினைவிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் படங்கள் பார்க்கத் தொடங்கிய பின்னர் அண்ணாமலை பாடல்மெட்டுகளும், பிரபுவின் சின்னத்தம்பி மெட்டுகளும் காதுமடல்களில் உரசுவதுபோன்ற உணர்வுகளும் உதடுகளின் முனுமுனுப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டிலும் டெக் வாங்கியவுடன் இரவு பகல் என அப்பகுதி மக்கள் வந்துபோவதும் அடிக்கடி படம்பார்ப்பதும் வாடிக்கையானது. ஆனாலும் குறிப்பிட்ட சில படங்களைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. பெற்றோரின் கண்டிப்பும் இதற்குக் காரணம்.

०२।கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
கடைசியாக தாம்தூம் பார்த்தேன். இணையங்களில் விமர்சனங்கள் வாசித்திருந்தாலும் பாடல்களுக்காகவும் பாடல்காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கத் தோன்றியது. திரையும் காட்சியிடலும் எனது துறைசார்ந்தவை என்பதால் காட்சிகளை கமராக்கள் உள்வாங்கிய விதம் அமைப்பு என்பவற்றை நான் அதிகம் கவனிப்பதுண்டு. அந்த வகையில் ஏராளமான காட்சிகளை மனதுக்குள் இருத்திக்கொண்டேன்.

०३.கடைசியாக அரங்கில் அன்றி பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
இறக்குவானை வீட்டுக்கு சென்றிருந்தபோது கமலின் தசவதாரம் பார்த்தேன். இலங்கையின் "இருக்கிறம்" சஞ்சிகையில் வெளியான தசவதாரமும் பத்துப்பிழைகளும் என்ற விமர்சனக் கட்டுரையில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு விடைகாணுவதற்காக அந்தப்படத்தை பார்த்தேன். பத்துப்பாத்திரங்கள் ஏற்று நடித்துப் பிரமாண்டம் என கமல் காட்டுவதாகவும் அதிகமான பாத்திரங்கள் கதையோடு ஒத்துவராததாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மேலும் பல காரசாரமான வாதங்கள் கமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இவை எல்லா விமர்சனங்களையும் விட கமலின் நடிப்பும் இளமைத் தோற்றமும் வியப்பில் ஆழ்த்தியதுடன் உலக நாயகன் மதங்களை சரியாகக் கையாண்டு ஈற்றுத்தீர்வு தரும் விதமும் அருமையாக இருந்தது.

०४.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
காதலுக்கு மரியாதை. காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். சில வேளைகளில் அப்போதைய விடலைப்பருவமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

०५।உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்?
அரசியலோடு தொடர்பில்லையெனினும் அரசியலும் ஒரு காரணம் என சொல்லக்கூடிய ஈழத்திலிருந்து இராமேஸ்வரத்துக்கு சென்று தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் பற்றிக் கதைகூறிய இராமேஸ்வரம்.
பாடல்வரிகளில் எம்மவர்களின் கண்ணீரை வரிகளாக்கியதுபோன்ற உணர்வு. தாய்நிலத்தை பிரிந்து உறவு,நெருக்கங்களை துறந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்க்கும் நம்சமூகத்துடன் தொடர்புடையதான பாடலும் படமும்.

"எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா॥?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா? "

இந்தப்பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ பாரமாயும் உணர்வின் ஈர உணர்வுகளை தொட்டுச்செல்வதாயும் இருக்கும். குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் அமைந்த சிறுமியின் குரல்.

०६.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஆமாம். வாரஇறுதி நாட்களில் சினிமா இணையப்பக்கங்களில் நுனிப்புல்மேய்வதுண்டு. புதிய படங்களில் இயக்குநர்,இசையமைப்பாளர் விபரங்களைத் தேடும் ஆவல் அப்போதைப்போன்று இப்போதும் உண்டு. புதிய படங்கள் பற்றி ஒவ்வொருவரின் பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் எனது பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் வாசித்துக் கணக்கிட்டுக்கொள்வேன்.

०६.தமிழ் சினிமா இசை?
இசைப்புயலின் ரசிகன் நான். அலுவலகத்தில்கூட இவரது பாடல்களை தான் அதிகம் நேசிப்பேன். தனிமையில் இருக்கும்பொழுதுகளில் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இசையை மட்டும் (பின்னணிக் குரல் தவிர்த்து) கேட்பது வழக்கம். குறிப்பாக மார்கழிப்பூவே, என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய், ஓ பட்டர் ஃப்ளை ( இன்னும் உண்டு) அதிகம் பிடிக்கும்.
வேறு இசை அல்பங்களை தழுவி நமது இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல் என அடிக்கடி செய்திகள் வரும்போது அவற்றையும் விட்டுவைக்காமல் படித்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

०७.தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? ஆதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தி,ஆங்கிலத் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. வீட்டில் நேரம்கிடைக்கும்போது. ஓம்காரா படம் அரசியலின் அந்தரங்கங்களை வெளிக்கொணருவதாக இருந்தது.இந்தப்படத்தைப் பார்த்து மிக அதிகமாக யோசித்தது நினைவிருக்கிறது.
பேய்க்கதைகள்,பழங்கால யுத்தம் தொடர்புடைய ஆங்கிலப்படங்களை விடிய விடிய பார்ப்பதும் உண்டு. டிரகன் ஹார்ட், த ஷெடோ போன்றவற்றை விரும்பி ரசித்தேன் (இன்னும் உண்டு).

०८.தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
மேடை நாடகங்களைப் போன்றளவு தமிழ் சினிமாவுடன் எனக்கு நேரடித் தொடர்பு எதுவும் இல்லை( அதனால் மற்றைய கேள்விகளுக்கு பதிலும் என்னிடத்தில் இல்லை)

१०।தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எமது தாய்மொழியை தனித்துவமாக பேணும் சினிமா தொடர்ந்தும் நிலைக்குமானால் சிறந்தது. சந்ததியினருக்கு தவறான வழிகாட்டுதல்களை அளிக்கும் எந்தவொரு சினிமாவும் தன்துறைக்கோ சமுதாயத்துக்கோ பங்குவகித்து நிலைக்கப்போவதில்லை. பின்னிலையான கலாசாரத்தலுவல்கள் தவிர்க்கப்பட்டு வளரும் சினிமா உயர்தரத்தைப் பெறும். இன்றுமட்டுமல்ல எதிர்காலத்திலும்.
சினிமா குறிப்பிடத்தக்களவு வாழ்க்கையின் சிறுபுள்ளியளவாயினும் இணைந்துள்ளது எனலாம்। சினிமா பற்றிய எதுவுமே இல்லையென்றால் என்னைப்பொருத்தவரையில் பெரிதான மாற்றம் இல்லாவிடினும் கவலை உண்டு. எனினும் காலமாற்றம் மாற்றிவிடக்கூடும்.


இந்த சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு நான் அழைக்கும் என் அன்பு நண்பர்கள்:
ஊரோடி பகீ
லோஷன்
சிவலிங்கம் சிவகுமாரன்
ஹொங்கொங் ஈழவன் எச்.கே.அருண்
ஹேமா
மாரி மகேந்திரன்

விரிவாக படிக்க ……..

இந்தப் பசுவுக்கு என்ன நடந்திருக்கும் என யாராவது சொல்ல முடியுமா?

விரிவாக படிக்க ……..

அதிகம் கோபம் கொள்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்


அளவுக்கு அதிகமான கோபத்தால் சில சந்தர்ப்பங்களில் முக்கியமான பலவற்றை இழந்திருப்போம்.அல்லது கோபத்தை தவிர்க்க முடியாமல் எம்மை நாமே துன்புறுத்திக்கொண்டிருப்போம்.
இவற்றைத் தவிர்க்க சில வழிகள்:

01. கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுங்கள்- சூழ்நிலையைத் தவிர்க்கும்போது கோபம் தணியும்

02. ஒரு கப் தண்ணீர் அருந்துங்கள் - குளிர்மையான தண்ணீர் மாற்றத்தை ஏற்படுத்தும்

03. கண்ணாடியைப் பாருங்கள். உங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு ஆறுதல் அடைவீர்கள்

04. ஆறுதலாக கண்மூடி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் - ஆழமான சுவாசம் ஆசுவாசப்படுத்தும்

05. மென்மையான இசை கேளுங்கள் - இசை கோபத்தைக் குறைத்து சாந்தப்படுத்தும்

06. கண்ணை மூடி உங்களுக்குப் பிடித்த பெரியோரின் முதுமொழி ஒன்றை மனதுக்குள் சொல்லுங்கள் - மனம் மாற வழிவகுக்கும்

07. இயற்கை அழகுடனான இடம் அருகில் இருந்தால் அங்கு உங்கள் தனிமையை போக்குங்கள் - இயற்கை சாந்தத்துக்கு நல்ல மருந்து

08. கோபத்துக்கான அடிப்படைக் காரணத்தையும் அதற்கான தீர்வினையும் மனச்சாட்சியுடன் கதையுங்கள் - நியாயம், கோபத்தை அடக்க நல்ல தீர்வு தரும்


இன்னும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்....

விரிவாக படிக்க ……..