Todays Date:

குதூகலமான வாழ்க்கைப் பயணத்துக்கு புரிதலுடனான உறவுகளின் அவசியம்


வாழ்க்கை எனும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறோம். மனதிற்குப் பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்க முயற்சிக்கிறோம்.

சந்தோஷமாயினும் சரி துக்கமாயினும் சரி புரிதலுடனான ஓர் உறவின் அல்லது உறவுகளின் அவசியத்தினை மனம் எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும்.

மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய, இன்பங்களில் பங்கெடுத்து துன்பங்களில் தோள்கொடுக்கக்கூடிய, எப்போதும் எம் ஆற்றலை வலுப்படுத்தி குறைகளை நிறைகளாக்கக்கூடிய உறவுகள் கிடைக்கப்பெறுவதானது அதீத சந்தோஷத்தை தரக்கூடியது எனலாம். அந்த உறவுகள், தாய் தந்தை, சகோதரகளாகவோ, உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, தொழில்நிலையானவர்களாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம்,

சிலர் குறைவாக பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல்போகும். மேலும் சிலர் சந்தித்திருக்கவே மாட்டார்கள் ஆனால் மிகச்சரியான புரிதல் இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? ஆம்! புரிந்துணர்வு எனக் குறிப்பிடுகையில் முதல்நிலையில் வைக்கப்படுவது நம்பிக்கை தான். அது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பத்திரம். நம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக இருக்கையில் அங்கு எதுவித சந்தேகங்களுக்கோ அல்லது தவறான நடத்தைகளுக்கோ இடமிருக்காது.

நிறைவான பாசத்தோடான பயணம் அனுமானிக்க முடியாத ஆனந்தத்தை தரவல்லது. ஆனால் அதே பாசம் இடைநடுவில் உடையுமாயின் அதன் வலிகளின் ஆழமும் அதிகம். மனதில் ஏதோ ஒரு உருவற்ற புள்ளியாய் எல்லாசந்தர்ப்பங்களிலும் அந்த வடு வாட்டிக்கொண்டிருக்கும்.

ஆதலால் உறவுகள் தேவைப்படும் அதேவேளை அதற்கேற்ற புரிதல்களும் அவசியமாகிறது.

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அன்பு,விட்டுக்கொடுப்பு ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பை விட சிறந்த ஆயுதம் இல்லை என்பார்கள். எதையும் அன்போடு அனுகும்போது அதன் பிரதிபலனும் அன்பாகவே கிடைப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருப்போம். பரிமாணங்கள் பலவற்றோடு பிறருக்கு கொடுக்கக்கூடிய உயரிய சந்தோஷமான அன்பினை எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பகிர்தல் வேண்டும். அன்பு நிறைந்த தூய உள்ளம் இறைவன் வாழும் திருக்கோயில் என்று சொல்லப்படுவதுண்டு.

அதேபோல் விட்டுக்கொடுப்பதிலும் நிறைவான திருப்தியை காண முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும்போது மனம் இலகுதன்மையை உணரும். இது காலப்போக்கில் சுவையான சம்பவங்களை மனதில் இருத்திக்கொள்ளவும் உதவும். நெருக்கமான உறவுகளை விரிசல் இன்றி பேணுவதற்கு விட்டுக்கொடுப்பு அவசியமாகும்.

நல்ல உறவுகளில் விரிசல் ஏற்படுமாயின் அல்லது விரிசல் ஏற்படுவதற்கான காரணம் தெரியுமாயின் வாய்விட்டுப் பேசுவதே சிறந்தது. தவறான மதிப்பீடுகளிலிருந்து விலகிக்கொள்ளவும் நியாயமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அதிலும் குறிப்பாக கோபங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவருக்குப் புரியும் வகையில் அமைதியாக எடுத்துக்கூற வேண்டும்.

நாம் பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கும்போது அனைத்துமே பச்சையாக தெரிவதுபோல சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது அவ்வாறே தெரியும். ஆதலால் அவற்றிலிருந்து விடுபட வெளிப்படையாக பேசித் தீர்மானிப்பது சிறந்தது.

வியட்நாமியக் கதை ஒன்றை உதாரணமாக குறிப்பிட நினைவுக்கு வருகிறது. ஓர் இராணுவ வீரரும் அவருடைய மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்துவருகின்றனர். நாட்டில் யுத்த நிலைதோன்றப்போவதாக எச்சரித்து அவசரமாக களத்துக்கு திரும்பும்படி வீரருக்கு அழைப்புவருகிறது. அவர் கிளம்பும்போது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். அழுகையுடனும் சோகத்துடனும் இராணுவவீரர் விடைபெறுகிறார். கணவன் நிச்சயமாக வீடுதிரும்பவேண்டும் என மனைவி பிரார்த்தித்துக்கொண்டு காலம் கழிக்கிறாள். மூன்று ஆண்டுகள் ஓடி மறைகின்றன.

போர் முடிவடைந்து இராணுவவீரர் மட்டட்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார். மனைவி விமானநிலையத்தில் குழந்தையோடு சென்று குது}கலத்தோடு வரவேற்கிறாள். வீட்டுக்கு வந்ததும் கணவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை சமைத்து களிப்போடு பரிமாறுகிறாள் மனைவி.

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், குழந்தையைப் பார்த்து “தந்தையுடன் பேசாமல் ஏன் அமைதியாக இருக்கிறாய்?” எனக் கேட்கிறாள். அதற்கு குழந்தையோ “இவர் என் அப்பா இல்லை” என்கிறது. இராணுவ வீரருக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. குழந்தை அப்படி சொன்னதற்காக காரணத்தை வினவுகிறார். அதற்குப் பதிலாக “ என் அப்பா எப்போதும் அம்மாவின் அருகில் இருப்பார். அம்மாவுடன் கடைக்கு வருவார்” எனக் கூறுகிறது குழந்தை.

மனைவி ஆசையுடன் சமைத்துவைத்திருந்த உணவை ஒருபக்கம் து}க்கியெறிந்துவிட்டு கோபத்தில் கண்டபடி மனைவியை திட்டுகிறார் இராணுவ வீரர். அவருடைய சந்தேகம் கற்பனையையும் தாண்டி பயணித்துக்கொண்டிருக்க பல நாட்களாக மனைவியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. இப்படியிருக்கையில் சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொள்கிறாள்.

சில நாட்கள் கழிந்த பின்னர் தன் குழந்தையுடன் அவர் கடைக்கு சென்றுகொண்டிருக்கிறார். அப்போது தந்தையின் நிழலைப் பார்த்து “அதோ அவர்தான் என் அப்பா” என்று கூறுகிறது. அதிர்ச்சியடைந்த இராணுவ வீரர் குழந்தையை அன்பாக விசாரிக்கிறார்.

ஆம்! குழந்தையின் தந்தை போருக்குப் போயிருக்கிறார் என்பதை கூறவிரும்பாத தாய் தன்னுடைய நிழலையே தந்தை என குழந்தைக்கு விளையாட்டுத்தனாக சொல்லிக்கொடுத்திருக்கிறாள். அதை சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த வினை எவ்வளவு பெரிது என்பதை அந்த வீரர் உணர்ந்து அழுகிறார்.

அளவுக்கு மீறிய சந்தேகமும் அதை வெளிப்படையாக பேசாததாலும் இந்த இழப்பு ஏற்பட்டது. குழந்தை சொன்னதைக் கேட்டு மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். இதற்கு மரணம் தான் வழி என்றில்லாமல் மனைவி ஏதோ ஒரு வகையில் கணவனுக்கு விடயத்தை விளக்கியிருக்கலாம்.

ஆக, இவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உறவுகளோடு எதையும் நிதானமாக பேசித் தீர்ப்பது மேலானது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரில் அல்லது பலரில் தங்கிவாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் உணவு, உடை உட்பட அனைத்துத் தேவைகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் உதவி தேவைப்படுகிறது.

உறவுகள் எமக்கு அவசியம். தனியான வாழ்க்கைப் பயணத்தை விட காத்திரமான நல்ல உறவுகளோடு வாழ்க்கையைத் தொடருவது தேகத்துக்கும் இதயத்துக்கும் நிறைவான மகிழ்ச்சியைத் தரும். ஆதலால் உறவுகளில் விரிசல்கள் ஏற்படாவண்ணம் சிறந்தமுறையில் கட்டிக்காத்து ஆனந்தமான பொழுதுகளை அனுபவிப்போம்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

எனக்குள்…அழகோடு கடவுள், காதல், பணமும் சேர்ந்து…

அழகு, கடவுள், காதல், பணம் - இந்தத் தொடருக்கு என்னை அன்போடு அழைத்து பரிசையும் தந்த தம்பி கோபிக்கு நன்றிகள். மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தாக்கியிருக்கிறேன்.

அழகு
அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.

கடவுள்

உயிர் இருக்கிறதா எனக்கேட்டால் ஆமாம் என்கிறோம். காட்ட முடியுமா என்றால்??
ஏதோ ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு கடவுள் என நாம் பெயர்வைத்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் மனிதனுடைய தேடல்கள் வெளி உலகத்தை நோக்கினவாக இருக்கின்றன. வளங்களைக் கொண்டு புதிதாக என்ன செய்யலாம்? ஏதை உற்பத்தியாக்கலாம்? என்றெல்லாம் நினைக்கிறோம்.
ஆனால் அதேபார்வையை உள்நோக்கி செலுத்துவோமானால்…. அங்கும் ஏராளமான வளங்கள் உண்டு. நினைத்துப்பார்க்க முடியாத பலவற்றை சாதிக்கலாம்.
நானும் அதை உணர முற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
“அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.

காதல்

காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது

காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது

காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

பணம்
இந்தக்காலத்தைப் பொருத்தவரையில் குணத்தை விட பணத்துக்கே பலம் அதிகம். “பணம் பத்தும் செய்யும், குணம் என்னத்தச் செய்யும்?” எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.
பணம் ஒரு போதை – சரியாகக் கையாளாவிட்டால் ஆளை மூழ்கடித்துவிடும்.

இந்தத் தொடருக்கு நான் இருவரை அழைக்க விரும்புகிறேன்। ஊடகத்துறையில் சமூகத்துக்காக அக்கறையுடன் துணிந்து செயலாற்றுபவர்கள் குறைவு. அவ்வாறு செயற்படுபவர்களின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியவர் சிவலிங்கம் சிவகுமாரன். தாண்டவத்திற்கு சொந்தக்காரர்.இவருடன் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. சிவகுமாரனின் எழுத்துநடையையும் உலக அறிவையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய ஆக்கங்களை தொடர்ந்தும் வாசித்துவருகிறேன். குறிப்பாக ஆங்கிலத் திரைப்படங்களை தனக்கே உரித்தான பாணியில் விமர்சனம் செய்வார். அன்புக்குரிய சிவா அண்ணாவை தொடருக்கு அழைக்கிறேன்.

பகீ - “ஊரோடி” பக்கத்துக்கு சொந்தக்காரர். தொழில்நுட்பம்,இணையம் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சிவாய்ந்த திறமையாளர். மாயா,வந்தி ஆகியோருடன் இணைந்து 2008 இன் ஆரம்பத்திலிருந்து பதிவர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆவலாக இருந்தவர். நல்ல நண்பர். அதிகம் வேலை காரணமாக அண்மைக்காலமாக பதிவைக் காணவில்லை. ஒருவிடயத்தை பலகோணங்களிலிருந்து பார்க்கக் கூடிய பகீரதனை அழைக்கிறேன்.

விரிவாக படிக்க ……..