Todays Date:

விக்கிலீக்ஸ் விவகாரத்தில் தமிழ் அமைப்புக்களின் மௌனம் மக்களுக்குக் கூறும் தகவல் என்ன?

அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்கிலீக்ஸ் இலங்கை குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் சர்வதேசத்தின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் அவசியம் என ஏற்கனவே விக்கிலீக்ஸ் மூலம் தகவல் கசிந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்பினையும் மீறி வடகொரியாவிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றைவிட கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

இலங்கையில் யுத்த காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளும் அரசியல் பிரமுகர்கள் சிலரின் மரணத்தின் திரைமறைவுகளும் வெளிக்கொண்டுவரப்பட்டன.

ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகிக்கும் முக்கியமாக தமிழ் அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கியதாகக் கூறப்படும் அமைப்புகளின் செயற்பாடுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

அதில் முக்கியமானவை வருமாறு,

01. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணை இராணுவக் குழுக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டமை- அதற்காக ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை

02. யாழ். குடாநாட்டில் எந்த அச்சமுமின்றி துணை இராணுவக் குழுக்கள் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை

03. விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டோரை கடத்தியமை – சில சந்தர்ப்பங்களில் கொலை செய்தமை

04. துணை இராணுவக் குழுக்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கியமை

05. தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிக்க பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியமை

06. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளின் பின்னணியில் துணை இராணுவக் குழுக்கள்

07. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களை முதலில் துணை இராணுவக் குழுக்கள் பெற்றுக்கொள்ளவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டமை

08. துணை இராணுவக் குழுக்கள் முகாம்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை

- இவையே இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட விடயங்களில் முக்கியமானவை.

அமெரிக்க தூதுவரால் அனுப்பப்பட்ட இத்தகவல்கள் எந்த ஆதாரத்துடன் பெறப்பட்டவை என்பது அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படவில்லை.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பிட்ட அமைப்புகள் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

இரு நாடுகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இராஜதந்திர ரீதியில் அணுகப்படும் என இலங்கையின் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.

இரகசிய தகவல்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸிடம் தனது கண்டனத்தை வெளியிட்டார்.

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் அரச தரப்பினரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

எனினும் அந்த அறிக்கையில் துணை இராணுவக் குழுக்கள் என வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அமைப்புகளிடமிருந்தும் இதுவரை எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை.

ஆக, இவர்களின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா? எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.

யுத்த காலத்திலும் அது நிறைவடைந்த பின்னரும் கொழும்பிலும் வடக்கு – கிழக்கு பகுதிகளிலும் ஏராளமானோர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். மேலும் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

போர் என்ற வடு ஒருபுறம் வாட்டிவதைக்க மறுபுறம் இவ்வாறான இன்னல்களால் தமிழ்பேசும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக தமிழ் அமைப்புக்களால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரம் குறித்தான விடயங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பல மடங்கு சிந்திக்க வைத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இராஜதந்திர தகவல் பரிமாற்றங்கள் வெளிப்படையான மதிப்பீடுகளேயன்றி அவை நாட்டின் கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என அமெரிக்கா கூறியிருந்தது.

எனினும் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உண்டு என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உணர வேண்டும். உணர்வார்களா?

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் 'Cyber Crime'

பேஸ்புக் சமூக வலைப்பின்னலானது உலகநாடுகளில் அடைந்துவரும் வளர்ச்சியைப்போல இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது.


ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுவரும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடிவதில்லை.

ஆம்! பேஸ்புக்கானது பிரபலமடைந்துவரும் அதேநேரம் கடவுச்சொல்லை வேட்டையாடும் களமாகவும் மாறிவருகிறது என்கிறார்கள் இணையப் பயன்பாட்டாளர்கள்.

பல்வேறு பெயர்களில் அறிமுகமாகும் இணையத் திருடர்கள் புதிய கணக்குகளை உருவாக்கியும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் தனிப்பட்ட நபரின் இரகசியங்களை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நடவடிக்கை இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு இத்தகவலை உறுதி செய்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (
ICTA) கீழ் இயங்கும் இக்குழு இணையத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இணைத்தில் திருட்டுச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கினூடாக இவ்வாறு பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்பில் இக்குழுவுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரிக்குத் தெரிவிக்கிறார்.

உண்மைச் சம்பவம்

இது இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவமொன்று,

சுகத் என்ற இளைஞர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் அதனை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கையில் கவிந்த்ரா என்ற பெண் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்புமடல் விடுத்துள்ளார்.

மற்றுமொரு இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிச்சியில் கவிந்த்ராவை இணைத்துக்கொண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக்கொண்டுள்ளார்.

சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற கவிந்த்ராவின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற்காகக் காத்திருந்த வேளை அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது.

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (
Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் கவிந்த்ரா. அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் சுகத்தின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.

ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப்பக்கத்தில் பதிவு செய்தார் சுகத்.

அதன்பின்னர் கவிந்த்ராவைக் காணவில்லை. சுகத்தின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை.

சுகத்தின் நண்பர் ஒருவர் கூறியதன் பிரகாரம்இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இதுதான் " உங்கள் கடவுச்சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் நவீனுடன் தொடர்பினை ஏற்படுத்தி பணம் செலுத்துங்கள்".

இந்தத் தகவலின் பின்னர் சுகத் பாதுகாப்புக்காக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவைத் தொடர்புகொண்டுள்ளார்.
இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்களும் பணம் செலுத்தியவர்களும் இலங்கையில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

சுகத்தைப் போன்றவர்கள் மட்டுமன்றி பேஸ்புக்கில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ரொஷான் சந்திரகுப்தா.

தன்னைத் திருமணம் முடிக்கத் தவறிய ஆண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இளம்பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ள விடயம், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களை கேளிக்கையாக்கிய சம்பவம், கடவுச்சொல்லைத் திருடி பேஸ்புக் புகைப்படத் தொகுப்பில் நீலப்படங்களை இணைத்துவிட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நாம் இங்கு உதாரணமாகக் கூறலாம்.


இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

1. அடையாளம் தெரியாத நபர்களின் வேண்டுகோள் மடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

2. நீங்கள் அறிந்திராத நபர்களிடமிருந்துவரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களை சொடுக்கிப் பர்வையிடாதீர்கள்.

3. சமூக வலைப்பின்னல்களில் திடீரெனத் தோன்றும் தொடுப்புகளை அகற்றிவிடுங்கள்.

4. உங்களுக்கென உள்ள சொந்தத் தகவல்களை தரவேற்றம் செய்யாதீர்கள்

இவை அடிப்படையான சில விடயங்களேயன்றி உங்கள் மின்னஞ்சல் கணக்காயினும் பேஸ்புக் அல்லது மாற்றுக் கணக்குகளாயினும் பொது இடங்களில் உபயோகப்படுத்துதலிலும் ஏனைய பாதுகாப்புகளிலும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக் கணக்குகளில் வேட்டையாடும் நபர்களைத் தவிர வலைப்பதிவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட இணையப் பாவனைப் பக்கங்களை முடக்குவதிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நடைமுறை உலகில் இணையம் தொடர்பான எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் திருட்டுச் செயல்களையும் 'சைபர் க்ரைம்(Cyber Crime)' என அழைக்கிறார்கள்.

அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை உலகுக்கு எடுத்துக்காட்டிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தற்போதைய நடவடிக்கைகளை அடுத்து இச்சொல் இணையப் பாவனையாளர்களிடையே மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

ஆகையால் இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அவ்வாறானதொரு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேர்ந்தால்
slcert@slcert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு தொடர்புகொண்டு உதவி கோர முடியும்.

இலங்கையைப் பொருத்தவரையில் கடவுச்சொல் திருட்டு மற்றும் ஏனைய முறைகேடான விடயங்கள் குறித்து அனைவருமே தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.

நிகழ்கால உலகில் இளம்பராயத்தினர் இணைய உலகிற்குள் வெகுசீக்கரமாகவே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் இணையத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

ஆக, எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கரங்களிலேயே தங்கியுள்ளது. உலகமயமாக்கலிலும் தொடர்பாடலிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரியதொரு மாற்றத்தைக் கண்டுவரும் இணையத்தின் அபார வளர்ச்சியின் போக்கில் எமது பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுகொள்ள வேண்டும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..