Todays Date:

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.

வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர்.


ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என்றெல்லாம் வாக்கு கேட்டவர்கள் பதவி மோகத்துக்காக பிரிந்து நிற்கின்றமை வாக்களித்த மக்களிடையே பெருங்கவலையை உண்டுபண்ணியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி இருந்தது. ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதிலும் உட்கட்சிகளிடையே முரண்பாடு காணப்பட்டது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது.

அதற்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள், கூட்டமைப்பினரா இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளமையும் ஒவ்வொரு கட்சியும் கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்காமல் தன்னிச்சையாக இயங்கும் நிலைமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமையை அங்கத்துவ கட்சிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தமையையும் சில கட்சிகள் விரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமான பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வை வட மாகாண சபைக்குத் தெரிவான 9 உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.

இவ்வாறு நடக்கும் என்று தமிழ் மக்கள் சற்றேனும் நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வே இடம்பெற்றது.

அமைச்சு தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தாம் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் பதவியேற்பு நிகழ்வை நிரகரித்திருந்த உறுப்பினர்கள், 14 ஆம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளின் பிரகாரம், கூட்டமைப்பின் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கமைய பதவிப்பிரமாண நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.

எனினும் அவரது வேண்டுகோளையும் மீறி அதேநாள் காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோன்று புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் யாழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டு மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக பிரிவின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுவதை தமிழ் மக்கள் கவலையுடன் நோக்குகிறார்கள்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன.

அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது.

கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை குறுகிய காலத்தில் பேசித் தீர்மானிக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.


கூட்டமைப்பினர் கட்சி ரீதியாக பிளவுபடும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் மக்களையே பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து கூச்சலிடும் இனவாத விஷமிகளுக்கும் இந்த விடயம் சாதகமாகிவிடும்.

அதுமட்டுமல்ல கூட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை விரும்பாத சக்திகள் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி அக்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்ய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இடமுண்டு.

தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கு தமிழ்த் தலைமைகளிடையே நீண்டகாலமாக காணப்படும் ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும் அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடமை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் இன்னுமொரு வரலாற்றுத் தவறு இடம்பெற்று எதிர்காலத்தில் ஏக்கங்கள் மாத்திரமே மிஞ்சும் நிலை உருவாகக் கூடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய தமிழ்த் தலைமைகளின் பெயர் கறை படிந்த கறுப்புப் புள்ளியாய் மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

'நடா' என்றொரு ஆளுமை



அது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி. வீரகேசரியின் பிரதம ஆசிரியருக்கு நேரடியாக கடிதம் ஒன்றை வரைந்திருந்தேன்.

பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எனது இலட்சியம், சிறு பராயம் முதல் எழுத்துத் துறையில் உள்ள ஆர்வம் என்பவற்றைக் குறிப்பிட்டு நான் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றையும் இணைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்தது. பெண் ஒருவரின் குரல். வீரகேசரியிலிருந்து பேசுவதாகவும் ஆசிரியர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் அந்தக் குரல் கூறியது.

அதன் பிரகாரம் வீரகேசரியின் வாயிலில் சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து ஆசிரிய பீடத்துக்கு வந்தேன்.

மெலிந்த கறுத்த உடல்வாகுடன் அமர்ந்திருந்தார் ஆசிரியர். அவர்தான் நடா சேர் என்பது எனக்குத் தெரியாது.

அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் மேசையின் மீதிருந்தது. ஏதோ கிறுக்கல்களுடன் இருந்த தாள்களை உற்றுப்பார்த்தவண்ணம் இருந்தார்.
நான் வந்ததும் அமரச் சொல்லிவிட்டு அவருடைய வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் எழுதத் தொடங்கும்போதுதான் தெரிந்தது அந்தக் கிறுக்கல்கள்தான் அவருடைய கையெழுத்து என்று..

மேசையின் ஓரத்தில் இருந்த சுருட்டை எடுத்து மேசையின் கீழே வைத்துவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.

"தம்பி, உங்களுடைய கட்டுரைகளை வாசித்தேன். நாலு கட்டுரைகளை எழுதிவிட்டு பத்திரிகையாளனாக வர வேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் இதை தொழிலாக இங்கே செய்துகொண்டிருக்கிறோம்"

வார்த்தைகளில் கடும் தொனி தெரிந்தது.

நான் அமைதியாகவே இருந்தேன். மீண்டும் பேசத் தொடங்கினார்.
எந்த பாடசாலை, கல்வித் தகைமைகள் எல்லாவற்றையும் கேட்டார். அருகில் இருந்த சிங்கள பத்திரிகையொன்றை கொடுத்து வாசிக்கச் சொன்னார். வாசித்தேன்.

"இங்கே 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் கொடுப்பார்கள். ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருந்து வேறு செலவுகளையும் பார்ப்பதற்கு இந்த வருமானம் போதாது. ஆத்ம திருப்திக்காக வந்து வேலை செய்தாலும் சாப்பிடுவதற்கு பணம் இல்லையென்றால் என்ன செய்வது?

ம்ம்... என்ன சொல்கிறீர்கள் தம்பி?

என்ன 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளமா? இது எந்த வகையில் எனக்குப் போதும்? என மனதில் நினைத்துக்கொண்டேன்.

'உங்களுடைய அப்பா பிரதம குமாஸ்தாவாக தொழில் புரிவதாக கூறினீர்கள் தானே? அந்த வேலையை நீங்கள் செய்யலாமே?

நானும் இப்படித்தான் ஆர்வம் காரணமாக வேலை செய்கிறேனே தவிர இங்கே பணம் சம்பாதிக்க முடியாது.

சரி - இன்னும் 6 மாதங்களின் பின்னர் வாருங்கள். நீங்கள் ரொம்ப சிறு பையனைப் போல தெரிகிறீர்கள். ஆதலால் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வோம்.

அதன்பின்னரும் இதே மன நிலையில் இருந்தால் நிச்சயமாக இங்கே இணைந்துகொள்ளலாம்.

தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய சிங்கராஜ வனம் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எழுத்து நடையில் நிறைய மாற்றம் வேண்டும். எப்போதுமே சுருக்கமாக, எல்லோருக்கும் விளங்கும் வகையில் எழுதுங்கள். தமிழில் எழுதுவதை கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். தேவையான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தும் கலையை வளர்த்துக்கொண்டாலே போதும்.

மிகுதியை பிறகு பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டு மேசைக்குக் கீழிருந்த சுருட்டை எடுத்தார்.
நான் எழுந்து செல்லத் தயாரான போது மீண்டும் அழைத்து என்னுடைய பெயரைக் கேட்டார்.

நான் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரிய பீடத்தில் இணைந்தேன். அப்போது வார வெளியீட்டின் ஆசிரியராக வி.தேவராஜ் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

பிறகு நடா சேரை நான் நீண்ட காலமாக சந்திக்கவில்லை. எனக்கு வேலைகள் பலவற்றை கற்றுக்கொடுத்த சிவலிங்கம் சிவகுமாரன் நடா சேரைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒருமுறை சுடரொளி பத்திரிகை நிறுவனத்துக்கு புத்திரசிகாமணி ஐயாவை சந்திக்கச் சென்ற போது அங்கே இருந்தார் நடா சேர்.

ஆம் அவர் சிறியதொரு அறையில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். சுடரொளியின் ஆசிரியபீட ஆலோசகராக அவர் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

மீண்டும் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

செய்தி என்றால் என்ன? எவ்வாறு செப்பனிடுவது? புதிதாக துறைக்குள் வருபவர்கள் விடும் தவறுகள் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை பேசினார்.
ஊடக துறையில் உள்ள வெட்டுக் குத்து, எப்படி சமாளிப்பது என்பவற்றையும் சிரித்துக்கொண்டே சொன்னார்.

தம்பி ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்.

பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தன்னுடைய செய்தியாளரை அரசியல் நிகழ்ச்சியொன்றுக்கு செய்தி சேகரிப்புக்காக அனுப்பினாராம்.

நிகழ்வில் யார் யார் வருவார்கள், யார்,யார் பேசுவதை நன்றாக அவதானித்து எழுதிக்கொள்ள வேண்டும், நிகழ்ச்சி தொடர்பாக எவ்வெந்த விடயங்களை கவனிக்க வேண்டும், நேரத்தை எப்படி குறித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்பினாராம்.

ஆர்வத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சில மணி நேரங்களுக்குள் பரபரப்பாக ஆசிரியரிடம் ஓடி வந்தாராம்.

சேர், நீங்கள் சொல்லிக்கொடுத்தது போல் என்னால் செய்தி சேகரிக்க முடியவில்லை என்றாராம்.

அதற்கு ஆசிரியர் ஏன் என்று வினவினாராம்.

சேர் நான் நிகழ்ச்சி பற்றிய செய்தி சேகரிக்கத்தான் சென்றேன். அங்கு குண்டு வெடித்துவிட்டது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று நீங்கள் சொல்லித்தரவில்லை. ஆதலால் பயத்தோடு ஓடிவந்துவிட்டேன் என்றாராம் செய்தியாளர்.

செய்தி சேகரிப்பதற்காக களத்துக்கு சென்றுவிட்டால் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். சிறு சிறு விடயங்கள் கூட நமக்கு உதவக் கூடும். இங்கே நான் கதையில் சொன்னது போல இருக்காதீர்கள் என்றார்.

அப்போது அவருடைய முகத்தில் சிறு புன்முறுவலும் இருந்தது.
ஆற்றலும் பண்பும் மிக்கவர்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பிறகு ஊடகவியல் கல்லூரியில் ஒருநாள் அவரை சந்தித்தேன். கதைக்கக் கிடைக்கவில்லை.

நடா சேர் போன்ற முன்னோரின் கடுமையான உழைப்பு, தூர நோக்கு, தமிழர் செல்நெறியை சிறப்பாக பேணியமை போன்றவை தான் இன்றும் நாம் ஊடகவியலாளர்களாக நின்று நிலைக்க காரணமாயிருக்கிறது.

நடா சேர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். உண்மையில் தமிழ் ஊடகத்துறைக்கு எப்போதுமே ஈடு செய்ய முடியாத இழப்பு இது.

நடா சேர் - உங்களோடு பழகிய பொழுதுகளை நான் பெருமையாக நினைக்கிறேன்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் பெயரும் சொல்லித்தந்த அறிவுரைகளும் எப்போதும் எம் மனதில் நிலைத்து நிற்கும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

#VOPL2013: அனைவருக்கும் நன்றி

இலங்கையில் தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி எமது கிரிக்கெட் போட்டியின் வாயிலாக சாத்தியமாகியது. உண்மையில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் கடந்த சனிக்கிழமையும் உள்வாங்கப்பட்டுக்கொண்டது.

பதிவர்கள் என்றால் கண்டதையும் கேட்டதையும் எழுதித் தீர்க்கும் வேலையற்றவர்கள் என ஆரம்ப காலங்களில் பலராலும் நாம் பார்க்கப்பட்டு வந்தோம். காலம் செல்லச் செல்ல இணைய வெளியில் பதிவர்களின் வருகையும் அவர்களால் முன்வைக்கப்பட்ட காத்திரமான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகவியலின் தாக்கம், அசாத்திய வளர்ச்சி காரணமாக இணைய எழுத்துலகின் தவிர்க்க முடியாத பங்காளர்களாக மாற்றமடைந்தார்கள்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு, சந்திப்புகள், போட்டிகள் என அடிக்கடி நடத்தப்பட்டாலும் கூட இலங்கையில் ஏனோ அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தான் அன்புக்குரிய சகோதரர் புருஜோத்தமன் டுவிட்டரில் வீரகேசரியோடு கிரிக்கெட் விளையாடலாமே என அன்பான அழைப்பினை விடுத்திருந்தார். அதனை சகோதரர் மயூரன் பெரியும் ஆமோதித்திருந்தார்.
சரி முயற்சித்துப்பார்க்கலாம் என அப்போது பதிலளித்திருந்தேன்.

அதற்குப் பின்னர் எமது செய்திக்குழுவோடு சிறு கலந்துரையாடலுக்குப் பின்னர் முகாமைத்துவத்துடன் பேசிய போது உடனே அனுமதி கிடைத்தது. முழுச் செலவையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்ற இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் அடுத்த கட்ட நகர்விற்கு தயாரானோம்.

கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு கோரினோம். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் எமது விதிமுறைகளுக்கு அமைவாக பதிவர்களை இணைத்துக்கொண்டோம்.

ஒரு சில பதிவர்கள் எம்மோடு முரண்பட்டுக்கொண்டார்கள். நாம் யாழ்ப்பாணத்தில் போட்டி வைக்கவில்லை என்றும் பிரதேசவாதம் பார்ப்பதாகவும் சமூக இணையங்களில் எழுதினார்கள்.

நான் அவற்றுக்கு தனிப்பட்ட ரீதியில் பதில் அளித்திருந்தேன்.

அதன்பிறகு மூன்று அணிகளுக்கும் பெயர்களை வைத்தோம். அதன்போது சிலர் பெயர்கள் பொருத்தமற்றவை என எழுதினார்கள்.

இலங்கையில் பேஸ்புக்,டுவிட்டர்,யுடியுப் ஆகிய தளங்களையே அதிகமானோர் உபயோகிப்பதால் நாம் அதற்கேற்றவாறு பெயர் வைத்தோம் என்று சொல்லியும் அதை அவர்கள் கேட்கவில்லை.

அதில் கவலையான விடயம் என்னவென்றால் என்னோடு நெருங்கிப் பழகுபவர்களும் எமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைதான்.
தொடர்ச்சியாக நாம் எமது உள்ளக சந்திப்புகளை மேற்கொண்டோம். காத்திரமான திட்டமொன்றை தீட்டினோம்.

போட்டிக்கான ஏற்பாடு, விண்ணப்பதாரர்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பினை ஏற்படுத்தல் போன்ற பிரதான பொறுப்புகளை தம்பி கவிந்தன் நேர்த்தியாக முடித்துக்கொண்டிருந்தார்.

மறுபுறம் வெளிவேலைகள், திட்டமிடல்கள் அனைத்தும் தினேஷ் பொறுப்பாக நின்று கவனித்துக்கொண்டார். உள்ளக விடயங்கள், செய்தியாக்கம், விளம்பரம் ஆகிய விடயங்களை தம்பிமார்களான லூசியும் சின்ன பிரசன்னாவும், தர்ஷனும் கவனித்துக்கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய பொறுப்பில் கவனமாக இருந்ததால் எனக்கு வேலை இருக்கவில்லை.

போட்டிக்கான திகதியை நிர்ணயித்து நாள் நெருங்க நெருங்க எமக்குள் பயமும் தொற்றிக்கொண்டது.

போட்டிக்கு முதல்நாள் மழை...தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது. எமக்கு பதிவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமே இருந்தன. எனினும் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என நாம் தீர்மானித்திருந்தோம்.
எமது ஏற்பாட்டுக்குழுவுடன் சின்ன கலந்துரையாடலுக்கு அழைத்து அவரவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைத்தோம்.

அடுத்தநாள் விடியல்.. காலை 4 மணி. மழை வருமோ என்ற அச்சத்தில் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டிருந்த எனக்கு அதிகாலையிலேயே விழுந்தது இடி.

ஆம்..அவிசாவளையில் அடை மழை. இறைவனை நொந்துகொண்டு பிரசன்னாவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

தம்பி கொழும்பில் மழையா?
இலேசான தூரல் அண்ணா.. என்ன செய்வோம்?
பார்க்கலாம் என்று அழைப்பினை துண்டித்தேன்.

அடுத்ததாக நாம் போட்டி நடத்தும் மலே மைதானத்துக்கு அருகில் வசிக்கும் தினேஷ{க்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

மூன்று மணியளவில் மழை பெய்தது. இப்போது மழை இல்லை. நீங்கள் தைரியமாக வாருங்கள். கடவுள் எம் பக்கம்தான் என்றார்.

கொட்டும் மழையிலும் காலை 4.40 மணிக்கு பஸ் எடுத்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். விடியவில்லை, இலேசான தூரல் இருந்தது.

லூசியஸ், தர்ஷன், பிரசன்னா, சுகிர்தனுடன் மைதானத்துக்கு சென்று வேலைகளை கவனித்தோம்.

போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த கவிந்தன் அலுவலகத்தில் இருந்து செய்தி தரவேற்றங்களை கவனித்துக்கொண்டார்.

மழை வரும் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தபோதிலும் பின்னர் மாற்றமடைந்தது.

அதிக வெயிலும் இல்லை, மழையும் இல்லை. போட்டி திட்டமிட்டபடி நேர்த்தியாக நடைபெற்ற முடிந்தது.

வீரகேசரி இணையத்தளத்தின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பானவன் என்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களான ருசெய்க், வினோத், விநோதன், சுபா, ஷாரா, கமல், கஜன், ரிசாத், சுகிதரன், சுவேன், பிரஷாந்தன் ஆகியோர் திறம்பட தத்தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார்கள்.

இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்போடும் நாம் வெற்றிகண்டோம்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள். ஒருசிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தராத போதிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

சிரமம் பாராது வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமக்குத் தெரியாமல் ஏதாவது குறைகள் இடம்பெற்றிருக்கலாம் எனினும் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாவண்ணம் சிறப்பாக செயற்படுவோம் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் ஏற்பாடு செய்த பதிவர் ஒன்றுகூடலில் பெண் வலைப்பதிவாளர்களை இணைத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் அவர்களுக்காகவும் நாம் செயற்பட எண்ணியுள்ளோம். அத்தோடு அடுத்த வரும் இவ்வாறானதொரு போட்டியை வெளி மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் எண்ணம் கொண்டுள்ளேன்.

காலநிலை உட்பட அனைத்து விடயங்களுமே எமக்கு சாதகமாக அமைந்திருந்தது. இறைவனுக்கு நன்றி. ஏற்பாட்டுக்கு அனுமதியளித்து எம்மை வழிநடத்திய நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு நன்றி.
வெற்றிகரமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளும் வணக்கங்களும்.

-அன்புடன்
இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!




ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.

ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.

கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.

சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.

சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.



சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?

சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?

இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?

குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?

சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?

ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.

வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். 


நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.

எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..