Todays Date:

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.

வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர்.


ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என்றெல்லாம் வாக்கு கேட்டவர்கள் பதவி மோகத்துக்காக பிரிந்து நிற்கின்றமை வாக்களித்த மக்களிடையே பெருங்கவலையை உண்டுபண்ணியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி இருந்தது. ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதிலும் உட்கட்சிகளிடையே முரண்பாடு காணப்பட்டது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது.

அதற்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள், கூட்டமைப்பினரா இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளமையும் ஒவ்வொரு கட்சியும் கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்காமல் தன்னிச்சையாக இயங்கும் நிலைமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமையை அங்கத்துவ கட்சிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தமையையும் சில கட்சிகள் விரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமான பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வை வட மாகாண சபைக்குத் தெரிவான 9 உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.

இவ்வாறு நடக்கும் என்று தமிழ் மக்கள் சற்றேனும் நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வே இடம்பெற்றது.

அமைச்சு தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தாம் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் பதவியேற்பு நிகழ்வை நிரகரித்திருந்த உறுப்பினர்கள், 14 ஆம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளின் பிரகாரம், கூட்டமைப்பின் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கமைய பதவிப்பிரமாண நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.

எனினும் அவரது வேண்டுகோளையும் மீறி அதேநாள் காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோன்று புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் யாழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டு மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக பிரிவின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுவதை தமிழ் மக்கள் கவலையுடன் நோக்குகிறார்கள்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன.

அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது.

கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை குறுகிய காலத்தில் பேசித் தீர்மானிக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.


கூட்டமைப்பினர் கட்சி ரீதியாக பிளவுபடும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் மக்களையே பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து கூச்சலிடும் இனவாத விஷமிகளுக்கும் இந்த விடயம் சாதகமாகிவிடும்.

அதுமட்டுமல்ல கூட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை விரும்பாத சக்திகள் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி அக்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்ய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இடமுண்டு.

தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கு தமிழ்த் தலைமைகளிடையே நீண்டகாலமாக காணப்படும் ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும் அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடமை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் இன்னுமொரு வரலாற்றுத் தவறு இடம்பெற்று எதிர்காலத்தில் ஏக்கங்கள் மாத்திரமே மிஞ்சும் நிலை உருவாகக் கூடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய தமிழ்த் தலைமைகளின் பெயர் கறை படிந்த கறுப்புப் புள்ளியாய் மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

1 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்