Todays Date:
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

காதலின் ஆட்சி!

ஓயாத கடலுக்கு அருகில்
பேசாத மொழிகளோடு
நாம்!

கரையோரம் நின்றிருக்கிறாய்
பாதங்களை
நுரைகளால் அர்ச்சிக்கின்றன
அலைகள்!

இப்போது பூத்தது போல
எப்போதும்
மலர்ந்திருக்கிறாய்

அதிர்ஷ்டக்க் காற்று…
மோகம் கொண்டு
கூந்தலை
முகர்ந்து
கலைத்துவிடுகிறது

உன் புன்னகையால்
பிரகாசிக்கிறது – என்
முகம்

மெல்லத் துளிர்கிறது
தாபம் - அதை
சொல்லத் துடிக்கிறது
ஆவல்

வார்த்தைகள் கரைந்து
மிஞ்சுகிறது
மௌனம்

உன் மொத்தக் காதலும் - என்
ஜீவனில்
இழையோடுகிறது

நீலவானம்
நீள்வெளிக்கு மத்தியில்
தனியொருத்தியாய்
என்னை ஆள்கிறாய்

அஞ்ஞாதங்களைத் தகர்த்தி
உன்னிடம்
அபயம் வர
பிரியப்படுகிறேன்

உன் பார்வையை ஏந்தி
புன்னகையைப் பருக
தவமிருக்க வேண்டுமடி
கண்மணி!

-இராமானுஜம் நிர்ஷன்-
08.12.2017

விரிவாக படிக்க ……..

வா.. நெஞ்சத்தின் அக்கிராசனத்துக்கு!

கிளைகள்
குடைபிடிக்க
கீழே
சாய்ந்திருக்கிறாய்

மலர் விழுந்த சோகம்
மரத்துக்கு!

காணும் பொழுதில்
துருவப் பனியாய்
உறைகிறேன்!

பற்றிப் படர்கிறது
காதல்
மெல்லப் பனிகிறது
மோகம்

உருவாகி
கருவாகி
துளிர்க்கிறது தாகம்!

அலைபோல் புருவம்
நாணம் சுரக்கும்!
கருவிழி அசையும்
காந்தம் பிறக்கும்!

அள்ளிக் கொள்கையில்
வினைச்சொல்
உதிரும்!

கண்களின்
கபளீகரத்தை காண்கையில்
உளிதட்டுகிறது
இதயம்!

அணைந்து பிணைந்து
மேவிக் கணையாகி
காதல் பருகுவோம்
வா!

பருகிச் சுவைத்து
மூர்ச்சை இழுத்து
முடிவிலி காண்போம்
வா!

மொத்தமாய் கவர
வித்தைகள் புரிய

தொடுகையில் உணர
நெடுமையாய் ஆள

சத்தம் தவிர்த்து
பித்தம் நிறைக்க

தேவதை உன்னை
காதலோடு அழைக்கிறேன்
என் நெஞ்சத்தின்
அக்கிராசனத்துக்கு!

-இராமானுஜம் நிர்ஷன்-

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா IX

"காதல் கண்ணீராய் பூக்கிறது..!"

அது பௌர்ணமி நாளொன்று!
நிறைந்த நிலவு உலகை ஆட்கொண்டிருக்க என் மனதை மட்டும் மௌனம் ஆக்கிரமத்திருந்தது.
எழுதத் தொடங்கினேன் அவளுக்காக!
எந்த செம்மைப்படுத்தல்களும் இல்லாமல் அவ்வாறே இங்கு பதிவிடுகிறேன்..!

என் உயிருக்கு,
நீ நலமாயிருக்கிறாயா எனக் கேட்க முடியாது? நீயின்றி நான் வெறும் ஜடம் தான்.
நீண்டு நெடிதாகும் இரவுகளில் நிசப்தங்களை சுமப்பதற்குப் பதிலாக உன் நினைவுகளை ஏந்திச் சுகம்காணும் எனக்கு இன்று எழுத நேரம் கிடைத்திருக்கிறது.
எத்தனை நாளைக்குத் தான் புகைப்படத்தில் உன் கண்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது?
எத்தனை நாளைக்குத் தான் நீ தந்த கவிதைகளை எழுத்துக் கோர்த்து வாசிப்பது?

எங்கோ இருந்துகொண்டு நீ என்னை நினைப்பதை அறிந்துகொள்ளும் என் மனதுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது என யோசித்ததுண்டு.

எல்லாம் ஏதோ ஒரு வகை ஈர்ப்பு, வார்த்தைகளில் சொல்ல முடியாது அன்பு, அன்பையும் தாண்டி எங்களை ஆட்படுத்தும் அமானுஷ்யம்!

ம்ம்ம்...

உன்னோடு பேசும்போது நிறைய சொல்ல வேண்டும், என் அன்பையெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனாலும் நீ என்ன நினைப்பாயோ என்ற கேள்வி அதற்கு தடைபோட்டு விடுகிறது.

உயிரே,

இப்போதெல்லாம் என் வேண்டுதல் என்ன தெரியுமா? இறப்பதற்கு முன் உன்னை ஒருமுறை பார்த்து ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும், உன் கரங்களை இறுகப்பற்றியவாறு நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதுதான்.

அலுவலகத்தில் வெள்ளைத் தாள்களை எடுத்து கட்டுரைக்கான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு எழுதி வைத்திருந்த பழைய குறிப்புகளை எடுத்துப் பார்த்தபோது ஒவ்வொரு தாளின் வலதுபக்க மேல் மூலையிலும் உன் பெயர் சிறிதாக எழுதப்பட்டிருக்கிறது.


ஆம்! பல சந்தர்ப்பங்களில் என்னை அறியாமலேயே உன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.

நீயும் நானும் வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் நம் மனதுக்கு இடையிலான இடைவெளியில் காற்று கூட புக முடியாது.

உன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும்போதெல்லாம்- நீ இறுதியாக என்னை அழைத்த வார்த்தைகள் காது மடல்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். 

நீ உச்சரிக்கும்போது மட்டுமே என் பெயரை நான் ரசிக்கிறேன்.

அநேகமான பொழுதுகளில் அந்த இனிமையான குரலை அசைபோட்டபடியே நித்திரையாகியிருக்கிறேன்.

நீலவானம், தென்றல், மழைத்தூரல், வயல்வெளி, ஒற்றையடிப் பாதை, தனிமரம், மூன்றாம் பிறை, மலைமேடு, சிலா விக்கிரகம், படர்ந்த கற்பாறை, மெல்லிசை என மனதுக்கு இதமான எல்லாமே உன்னை நினைவுபடுத்தத் தவறுவதில்லை.

ஒருவரைப்போல ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பார்களாம். ஆனால் உனக்கு நிகர் நீயே தான்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது என் இதயத்தில் தேங்கிக் கிடக்கும் காதல் கண்ணீராய் பூக்கிறது.

என்ன செய்வது? நம் பிரிவை விதியென்று நொந்துகொள்ள நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாய் பிரசவித்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் நதிகள்.

கடலில் சங்கமிப்போம். அது மரணமானாலும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் உயிர்துறக்கும் தருணத்திலும் உன் மடி போதுமெனக்கு, சிரித்துக்கொண்டே இறந்துவிடலாம்..!

-அன்புடன்
உன்னவன்.

விரிவாக படிக்க ……..

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

விரிவாக படிக்க ……..

எனக்குள்…அழகோடு கடவுள், காதல், பணமும் சேர்ந்து…

அழகு, கடவுள், காதல், பணம் - இந்தத் தொடருக்கு என்னை அன்போடு அழைத்து பரிசையும் தந்த தம்பி கோபிக்கு நன்றிகள். மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தாக்கியிருக்கிறேன்.

அழகு
அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.

கடவுள்

உயிர் இருக்கிறதா எனக்கேட்டால் ஆமாம் என்கிறோம். காட்ட முடியுமா என்றால்??
ஏதோ ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு கடவுள் என நாம் பெயர்வைத்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் மனிதனுடைய தேடல்கள் வெளி உலகத்தை நோக்கினவாக இருக்கின்றன. வளங்களைக் கொண்டு புதிதாக என்ன செய்யலாம்? ஏதை உற்பத்தியாக்கலாம்? என்றெல்லாம் நினைக்கிறோம்.
ஆனால் அதேபார்வையை உள்நோக்கி செலுத்துவோமானால்…. அங்கும் ஏராளமான வளங்கள் உண்டு. நினைத்துப்பார்க்க முடியாத பலவற்றை சாதிக்கலாம்.
நானும் அதை உணர முற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
“அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.

காதல்

காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது

காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது

காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

பணம்
இந்தக்காலத்தைப் பொருத்தவரையில் குணத்தை விட பணத்துக்கே பலம் அதிகம். “பணம் பத்தும் செய்யும், குணம் என்னத்தச் செய்யும்?” எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.
பணம் ஒரு போதை – சரியாகக் கையாளாவிட்டால் ஆளை மூழ்கடித்துவிடும்.

இந்தத் தொடருக்கு நான் இருவரை அழைக்க விரும்புகிறேன்। ஊடகத்துறையில் சமூகத்துக்காக அக்கறையுடன் துணிந்து செயலாற்றுபவர்கள் குறைவு. அவ்வாறு செயற்படுபவர்களின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியவர் சிவலிங்கம் சிவகுமாரன். தாண்டவத்திற்கு சொந்தக்காரர்.இவருடன் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. சிவகுமாரனின் எழுத்துநடையையும் உலக அறிவையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய ஆக்கங்களை தொடர்ந்தும் வாசித்துவருகிறேன். குறிப்பாக ஆங்கிலத் திரைப்படங்களை தனக்கே உரித்தான பாணியில் விமர்சனம் செய்வார். அன்புக்குரிய சிவா அண்ணாவை தொடருக்கு அழைக்கிறேன்.

பகீ - “ஊரோடி” பக்கத்துக்கு சொந்தக்காரர். தொழில்நுட்பம்,இணையம் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சிவாய்ந்த திறமையாளர். மாயா,வந்தி ஆகியோருடன் இணைந்து 2008 இன் ஆரம்பத்திலிருந்து பதிவர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆவலாக இருந்தவர். நல்ல நண்பர். அதிகம் வேலை காரணமாக அண்மைக்காலமாக பதிவைக் காணவில்லை. ஒருவிடயத்தை பலகோணங்களிலிருந்து பார்க்கக் கூடிய பகீரதனை அழைக்கிறேன்.

விரிவாக படிக்க ……..

“நிவேதப்ரியா” (01)


பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை. சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட, பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான் -

நிவேதன் எழுதத் தொடங்கிய வரிகள் இவை...

நிவேதன் - கொஞ்சம் அறிவோடு பேசுவதற்காகவே படைக்கப்பட்டவன் என பலர் சொல்வதுண்டு. நிவேதம் என்பதற்கு படைத்தல்,கொடுத்தல் என தமிழில் பொருளுண்டு. இது ஓர் உன்னதமான சொல்.
மனிதனுக்கு படைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் உணவு, சாப்பாடு என்கிறோம். அதனையே கடவுளுக்கு செய்தால் அதனை நிவேதனம் என்கிறோம்.
நிவேதனும் அவ்வாறுதான். படித்தது கொஞ்சமாயினும் கொடுத்தது அதிகம். அதாவது உழைப்பாளி. அப்படியென்றால் பிறருடைய சந்தோசத்துக்காக எதையும் செய்யக்கூடிய உழைப்பாளி.

நிவேதனுக்கு வயது 25. எழுத்தாளன்.

சோகங்களை, யாரிடமும் சொல்லமுடியாத வேதனைகளை எழுத்தில் வடித்து கிழித்துவிடுவது அவனுடைய வழக்கம். அப்படி அவன் எழுதிக் கிழித்தது ஏராளம்.

பண்டைய கிரேக்கர்கள் இவ்வாறானதொரு முறையை கையாண்டதாக கூறுவதுண்டு. அதாவது தமது பிரச்சினைகளை எழுதிக் கிழித்து ஆற்றிலோ அல்லது இனி தேடினாலும் அந்தக் கிழிஞ்சல்களை அண்டமுடியாத இடத்தில் போட்டுவிடுவர். அப்போது அந்த வேதனைகள் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போதும் பல சமயத்தவர்கள் நேர்த்திக் கடன் என செய்வதில் உள்ள உள்ளாந்த அர்த்தமும் இதுதான் எனத் தெரிகிறது.

பிரியா - இவள் மனைவியாகிவிடமாட்டாளா என ஏங்கிய கூட்டம் ஏராளம். மானிறம், கருவிழிகள், ஒருபுறம் குழிவிழும் மெத்தென்ற கன்னம், பலமடங்கு பள்ளத்தில் விழுந்தாலும் நேர்த்தி மாறாத காட்டாற்றுக்கூந்தல், மெல்லிடை, மேகமேனி என அவள் ஒரு காவியமாகத் திகழ்ந்தாள்.
உதயகாலப் பொழுதொன்றில் வெண்தேவதைகள் இணைந்து செதுக்கிய சிற்பம்போலானவளுக்கு அறிவும் திறமையும் ஆழமாய் நிறைந்திருந்தன. சிந்தனை, பேச்சு, நடத்தை அனைத்திலும் அவள் பாங்கும் பாணியும் தனியானவை. (நிவேதனின் எழுத்துகளில் பிரியா வரையப்பட்டிருக்கிறாள் என்பதற்காக இங்கு அதிகம் தரப்படவில்லை)

ஆண், பெண் என்றாலே அநேகர் பார்வையில் முதலில் தெரிவது “காதல்” என்பதுதான். இவர்கள் இருவரும் எப்படித் தொடர்புபடுகிறார்கள்? எவ்வாறு வாழ்வோட்டத்தில் கலக்கிறார்கள்? இதற்கும் சோக சம்பவங்களை கிழித்துவிடுவதற்கும் என்ன தொடர்பு? – நிவேதனின் வரிகள் தொடர்கின்றன…

பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை। சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான்.

சுகம் தான் வேதனைகளாக பரிணாமம் கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை எந்தச் சோகத்தையும் இவ்வளவு நேர்த்தியாக எழுதி நான் கிழித்ததில்லை. ஆனால் இதனை நிறைமனதோடு எழுதுகிறேன். ஏனென்றால் காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு பற்றி மனதுக்குள் ஊன்றிப்போனதை என் எழுத்துக்களால் மீட்டெடுக்கிறேன். மறக்க முடியாத பாழ்ய நினைவுகளுக்குள் மங்காத நினைவுகளாய் இன்னும் தொடரும் பலவற்றை கோர்த்துவிடுகிறேன். இங்குவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பிரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆனால்…. இதுவும் கிழிக்கப்படவேண்டியது.

(தொடர்ந்தும் பேசுவான்)

விரிவாக படிக்க ……..

விரிவாக படிக்க ……..

'அன்பு' எத்தனை மகத்தானது?















































விரிவாக படிக்க ……..

இயற்கையும் காதல்கொள்ளும்..!




சூரியக் காதலன்
எங்கேயென
மின்மினிகளை ஏவித்
தேடுகிறாள் பூமிப்பெண்

காரிருளில்
கண்ணுக்கெட்டாத்தூரம் சென்று
கண்ணயர்ந்துவிட்டானோ என
தென்றலையும்
தூதனுப்புகிறாள்

“எங்கே போனாலும்
அள்ளியணைக்க
வரத்தானே வேண்டும்
அப்போது கிள்ளி இழுத்து
கோபம் தீர்க்கிறேன்”

என
அவனை எதிர்பார்த்தே
நிசப்தமாய் நினைவிழந்து
தூங்குகிறாள்

கழிகிறது நேரம்…

மறுபொழுதில்….

தன்னவளை ஆக்கிரமித்த
பனித்துளிகளை
இமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு
தூங்கும் பெண்ணை
துயிலெழுப்புகிறான் ஆதவன்…

காதலனைக் கண்ட களிப்பில்
கோபம் மறந்து
குதூகலித்து
வாரியணைக்க முற்படுகையில்

அந்தோ…..

நொடிப்பொழுதில் முந்திக்கொண்ட
முகிலவன்
முன்னதாய் முத்தமிடுகிறான்…

முத்தத்தின் தகப்பில்
உணர்வுகள் உயிர்க்க
மிதம்கொண்டு மௌனித்து
மேனிசிவக்கிறாள் அவள்…
உச்சிமுதல் சிவந்ததில்
வானம் நிறந்து நிறைகிறது

ஓ…
காதலர்களின்
புணர்தலைக் கண்ட சேவல்
கூவிக்கூவி கூட்டம் கூட்டுகிறது
விடயம் அறிந்த
விண்மீன்கள்
வெட்கத்தில் மறைய
சல்லாபம் காண
கூடுவிட்டுப் பறக்கின்றன
பறவைகள்

மீள்நினைவுடன் மீண்டெழுகிறாள்
நாணத்தோடவள்...

எப்போதும் என்னோடிருவென
காதலனுக்கு உத்தரவிட்டபடி!

-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

உனக்கான இருப்பு !



உனக்கான
உனக்கேயான
இருப்பும் இடமும்
ஒளியூட்டப்படாமல் இருக்கிறது !

உன்
பிரிவினூடான
ஒவ்வொரு பயணங்களிலும்
அழத்துடித்து
அடங்கிப்போகும்
என்
மனதையும் மையங்களையும் …

உன்
களிப்புகளுக்கிடையில்
உறைந்து ஊனமாகும்
என்
எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும் …

உன்
மென்மொழிகளில்
மௌனம் காக்கும்
என்
ஊமை நினைவுகளின்
அடையாளங்களையும்
ஆத்மார்த்தங்களையும் …


தவிர்க்கவே எண்ணி
தருணம் பார்த்து
தவறாமல் காத்து நின்ற
பொழுதுகளையும்
இருத்தலையும் …

இமைக்கூடங்களில்
சிறையிருக்கும்
கடைசிப் பார்வையையும்
உணர்பாசத்தையும் …

வார்த்தை கோர்த்து
எழுதித் திரித்து
உனக்கான என் இருப்பில்
வைத்திருக்கிறேன் !

தனியறையில்
தவம்கிடக்கின்றன
என் கவிதைகள்
காலத்தோடான அத்தனை நினைவுகளையும்
ஏந்திச் சுமந்தபடி !

ஒன்றும் வேண்டாம்
உன்
கண்களின் வெளிச்சம் கொடு !

அந்த இருட்டறையில்
நீள் வெளியாய் நிறைந்திருக்கும்
வெண்காகிதங்களில்
உன்
பெயர்மட்டும் ஜொலிக்கப்பார்க்க
ஆசை எனக்கு !


-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை

விரிவாக படிக்க ……..