Todays Date:

நிவேதப்ரியா IX

"காதல் கண்ணீராய் பூக்கிறது..!"

அது பௌர்ணமி நாளொன்று!
நிறைந்த நிலவு உலகை ஆட்கொண்டிருக்க என் மனதை மட்டும் மௌனம் ஆக்கிரமத்திருந்தது.
எழுதத் தொடங்கினேன் அவளுக்காக!
எந்த செம்மைப்படுத்தல்களும் இல்லாமல் அவ்வாறே இங்கு பதிவிடுகிறேன்..!

என் உயிருக்கு,
நீ நலமாயிருக்கிறாயா எனக் கேட்க முடியாது? நீயின்றி நான் வெறும் ஜடம் தான்.
நீண்டு நெடிதாகும் இரவுகளில் நிசப்தங்களை சுமப்பதற்குப் பதிலாக உன் நினைவுகளை ஏந்திச் சுகம்காணும் எனக்கு இன்று எழுத நேரம் கிடைத்திருக்கிறது.
எத்தனை நாளைக்குத் தான் புகைப்படத்தில் உன் கண்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது?
எத்தனை நாளைக்குத் தான் நீ தந்த கவிதைகளை எழுத்துக் கோர்த்து வாசிப்பது?

எங்கோ இருந்துகொண்டு நீ என்னை நினைப்பதை அறிந்துகொள்ளும் என் மனதுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது என யோசித்ததுண்டு.

எல்லாம் ஏதோ ஒரு வகை ஈர்ப்பு, வார்த்தைகளில் சொல்ல முடியாது அன்பு, அன்பையும் தாண்டி எங்களை ஆட்படுத்தும் அமானுஷ்யம்!

ம்ம்ம்...

உன்னோடு பேசும்போது நிறைய சொல்ல வேண்டும், என் அன்பையெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனாலும் நீ என்ன நினைப்பாயோ என்ற கேள்வி அதற்கு தடைபோட்டு விடுகிறது.

உயிரே,

இப்போதெல்லாம் என் வேண்டுதல் என்ன தெரியுமா? இறப்பதற்கு முன் உன்னை ஒருமுறை பார்த்து ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும், உன் கரங்களை இறுகப்பற்றியவாறு நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதுதான்.

அலுவலகத்தில் வெள்ளைத் தாள்களை எடுத்து கட்டுரைக்கான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு எழுதி வைத்திருந்த பழைய குறிப்புகளை எடுத்துப் பார்த்தபோது ஒவ்வொரு தாளின் வலதுபக்க மேல் மூலையிலும் உன் பெயர் சிறிதாக எழுதப்பட்டிருக்கிறது.


ஆம்! பல சந்தர்ப்பங்களில் என்னை அறியாமலேயே உன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.

நீயும் நானும் வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் நம் மனதுக்கு இடையிலான இடைவெளியில் காற்று கூட புக முடியாது.

உன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும்போதெல்லாம்- நீ இறுதியாக என்னை அழைத்த வார்த்தைகள் காது மடல்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். 

நீ உச்சரிக்கும்போது மட்டுமே என் பெயரை நான் ரசிக்கிறேன்.

அநேகமான பொழுதுகளில் அந்த இனிமையான குரலை அசைபோட்டபடியே நித்திரையாகியிருக்கிறேன்.

நீலவானம், தென்றல், மழைத்தூரல், வயல்வெளி, ஒற்றையடிப் பாதை, தனிமரம், மூன்றாம் பிறை, மலைமேடு, சிலா விக்கிரகம், படர்ந்த கற்பாறை, மெல்லிசை என மனதுக்கு இதமான எல்லாமே உன்னை நினைவுபடுத்தத் தவறுவதில்லை.

ஒருவரைப்போல ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பார்களாம். ஆனால் உனக்கு நிகர் நீயே தான்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது என் இதயத்தில் தேங்கிக் கிடக்கும் காதல் கண்ணீராய் பூக்கிறது.

என்ன செய்வது? நம் பிரிவை விதியென்று நொந்துகொள்ள நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாய் பிரசவித்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் நதிகள்.

கடலில் சங்கமிப்போம். அது மரணமானாலும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் உயிர்துறக்கும் தருணத்திலும் உன் மடி போதுமெனக்கு, சிரித்துக்கொண்டே இறந்துவிடலாம்..!

-அன்புடன்
உன்னவன்.

விரிவாக படிக்க ……..

இனி எனக்கு தனியுலகம்!

வான்மழைக்குப் பதிலாக பெரும்பாறைகள் விழுந்து என்னைப் பதம்பார்ப்பதுபோல உணர்வு. வலிகளைத் தாங்கித் தாங்கிப் பழகிப்போன எனக்கு இதுவொன்றும் புதிதல்ல.
எனினும் இந்த வலி வித்தியாசமானது.
கண்களை மூடிக்கொள்கிறேன் -
மௌனம் பரந்திருக்கும் இதயத்தில் ஏதோ இனம்புரியாதவொரு அழுத்தம் முழு உடம்பையும் பயமுறுத்துகிறது.
இரத்தம் ஓடும் இடமெல்லாம் அக்கினிப் பாய்ச்சல் போன்று சுடுகிறது.
நான் எதிர்பார்ப்புகளைத் தொலைத்து இரண்டு நாட்களாயிற்று! என் முழுமையான அன்பை கைவிட்டு பல மணிநேரங்களாயிற்று! என் காதல் இப்போது என்னிடத்தில் இல்லை! என் கற்பனைகள் என்னை ஏளனமாய் பார்க்கின்றன!
நான் எப்போதும் தனிமையாக இருந்ததில்லை. அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டு பள்ளிப்பருவ மாணவனைப்போல சந்தோஷமாய் சுற்றித்திரிந்திக்கிருறேன்.
நிழலைப்போல தொடர்ந்தவள் - நம்பிக்கை தந்தவள்- வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியவளை ஆற்று மணலில் கீறிவிட்டு வந்திருக்கிறேன்.
அந்தச் சித்திரமும் அழிந்து இரண்டு நாட்களாயிருக்கும்!
கீழே விழுந்தால் ஏற்படும் வலிக்கும் மனதில் ரணத்தினால் ஏற்படும் வலிக்கும் வித்தியாசம் உண்டு.
நான் இரண்டாவது வலியால் தவிக்கிறேன். இதற்கு காலம் பதில் சொல்லாது. சொல்லவும் முடியாது.
எந்த வலிக்கும் ஒத்தடமாய் இருந்த அவள் அன்பு, அவள் குரல், அந்தச் சிரிப்பொலியை இனி மீட்டுப்பார்க்க முடியுமே தவிர கேட்டு ஆறுதல் கொள்ள முடியாது.
இது மிக தீர்க்கமான பொழுது - என் தனிமையில் அதுவும் கண்களை மூடிக்கொண்டு என் இதயத்தைப் பார்க்கும் தருணம்!
அவள் நினைவுகளால் நிரப்பப்பட்ட இதயம் துடித்துக்கொண்டிருக்கிறதே தவிர இயக்கத்தில் இல்லை.
பொய்யானதை நாம் எப்போதும் நம்புவதில்லை. இந்த உடம்பும் ஒரு பொய்தானே? உடல் கூட உயிர் என்ற ஒன்றோடு எத்தனை காலம் தான் இருக்கும்? அதற்குக் கூட பிரிவு உண்டுதானே?
எல்லாம் மாயை.
அவளைப்போல நானும் இனி மாயையை நம்பப்போவதில்லை.
பிரிவுக்கான அத்தாட்சிப் பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கு நல்லதொரு சான்றிதழ் எனக்கு கிடைத்தாகிவிட்டது.
நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்புக்கும் அரவணைப்புக்கும் இருப்புக்கும் இடம் கிடையாது- இடம் இருக்காது.
அவளையே சுற்றிச்சுற்றி வந்த என் இதயம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறது.
எத்தனையோ வலிகளைச் சுமந்துகொண்டிருக்கும் இதயத்துக்கு ஓய்வுகொடுக்க நானும் ஆசைப்படுகிறேன்.
பழையபடி என் தனிமையோடு பயணிக்கிறேன்..!
இனி எனக்கு தனியுலகம்.
யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் எதுவும் கேட்கப்போவதில்லை. கட்டளைகள் - தண்டனைகள் இனியில்லை.
எங்கோ ஒரு சமூகம் என் சேவைக்காக காத்திருக்கிறது. என் கடமையை நான் செய்யத் துணிகிறேன்.
நான் பொய்யானவன் இல்லை என்பதை அவள் அறிந்துகொள்ள சில காலம் எடுக்கலாம். அது கைகூடி வரும்போது. என் வாழ்க்கை காலாவதியாகியிருக்கும்.
இது - என் எழுத்தின் திறமைய காட்டுவதற்கான, போலியான கடிதம் அல்ல.
என்னைச் சொல்வதற்கான பதிவு மாத்திரமே.
இங்கு யாரும் குற்றவாளிகள் அல்லர்.
இந்தப் பதிவில் யாரும் விளிக்கப்படவில்லை. ஆதலால் பதிலை எதிர்பார்க்கவும் இல்லை

விரிவாக படிக்க ……..