"வேலை இல்லாதவேளை"
என் கறுப்புவானத்தை
ஊடறுக்கும்
வலிக்கும் தென்றல்!
மனவெளியெங்கும்
நெருப்பு சுவாசம்!
கறைபடிந்த பார்வைக்கோலங்களில்
குழிநிறைந்த தடயங்கள்!
தொட்டதெல்லாம் பட்டுப்போவதாய்
எண்ணங்கள்
விட்டுப்போகாமல் தொடரும்
துன்பங்கள்
இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்
உதவிக்கு அழைப்பதாயெண்ணி
தொலைபேசியை
புறக்கணிப்பவர்கள்
மறுபக்கம்
"வேலை இல்லையாமே"
கிண்டல் பேச்சுடன்
இன்னொரு கூட்டம்
"எப்படி இருந்தாய்?"
இறந்ததை
நினைவூட்டும்
எதிர்வீட்டின் சாட்டம்
"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்
“சனி நேரம்
கூடாத காலம்”
எதிர்பார்ப்புகளை சிதைக்கும்
வார்த்தைகளும் தாராளம்
மறுவேளை உணவுக்கு
மண்டியிட முடியாமல்
தடுக்கும்
தன்மானம்
“நம்பவைத்துக் கழுத்தறுத்தானே”
- ஈசனைத்தூற்றியழும்
மனோபாவம்
வேலை இல்லாதவேளை -
உணர்தலுடன்
ஒரு புரிதல்
இல்லாதவொன்றுக்கு
எல்லாவற்றையும்
காணிக்கைபடுத்திப்பார்த்திருக்கிறேன்
காலச்சுவடு
காயங்களை
ஆற்றுப்படுத்தும்வரை..!
-ஆர்.நிர்ஷன்