Todays Date:

மோகம் சுரக்கும் மந்திரம்!

மோகம் சுரக்கும் மந்திரக் கண்களில்
இமைகள் மூடும் சப்தம் கேட்டேன்
காதலின் அந்தம் வரை ருசிக்கத் தூண்டி
வசியப்பட்டுப் போனேன்

கரங்கள் இரண்டும் 
மந்திரக் கோல்கள்
விரல்நுனி பட்டதும் 
விடலையாய் உயிர்க்கிறேன்


தாடை இழுத்துப் பேசும் பொழுதில்
வகுளம் பூவின் 
மருத்துவம் உணர்கிறேன்இதழ்கள் அவிழ்க்கும் 
பெண்மை நீ
முத்தம் குடிக்கும் 
மிருகம் நான்!


அசைவில் இசைதரும் காரிகை நீ
அதை மீட்டத் துடிக்கும் ரசிகன் நான்!


கடந்து செல்கிறாய்
ஆனந்தத்தின் உச்சியில்
தவழ்கிறது மனது


புன்னகை செய்கிறாய்
பண்டிகை போல
கொண்டாடுகிறது மனது


நம் சந்திப்புகளை
பிரதியிட்டு சேமித்திருக்கிறேன்
பிரசவத்துக்காக காத்திருக்கும்
கனவுகளோடு!

வா!
முதுமையின் எல்லைவரை
இளமையாய் காதலிப்போம் 
வா!

அழகிய தேசம் எதுவும்
வேண்டாம் எமக்கு!

நானும் நீயும் என்றாலே - புது
உலகம் தானே நமக்கு!


-இராமானுஜம் நிர்ஷன்-விரிவாக படிக்க ……..

அதிபர் இராஜலிங்கம் அவர்கள் எம் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..!

(மறைந்த அதிபர் இராஜலிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள் நாளை (26.06.2016) அனுட்டிக்கப்படுகிறது)


என்னுடைய வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத மாமனிதர் மதிப்புக்குரிய இராஜலிங்கம் அவர்கள். ஆஜானுபாகுவான உடல்வாகு, கம்பீரமான தோற்றம், நிமிர்ந்த நடையுடன் நிகரற்ற ஆற்றலும் பல்திறனும் தன்னகத்தே கொண்டு எத்தனையோ மாணவர்களை இன்று உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் மரியாதைக்குரிய ஆசான்.

காலம் எத்தனை மாற்றம் கண்டாலும் இராஜலிங்கம் அவர்கள் என்றுமே எம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவருக்கு எமது உள்ளங்களில் அதியுச்ச இடம் இருக்கிறது.

தன்னலம் பாராது அனைவரையும் அணைத்துக்கொண்டு பயணித்த அவருடைய தொலைநோக்க சிந்தனையை இப்போதும் எண்ணி வியக்கிறேன்.

மாதம்பை தமிழ் வித்தியாலயத்தில் அவர் அதிபராக கடமையாற்றியபோது கடைபிடித்த ஒழுக்க விதிகளை ஞாபகத்தில் உள்ளன.

நான்காம் தரத்தில் இறுதியாண்டுப் பரீட்சையில் நான் 999 புள்ளிகளைப் பெற்றபோது மாணவர் மன்றத்தில் என்னை அழைத்து உச்சிமுகர்ந்து பாராட்டினார். அதன் பெறுமதியை எத்தனைகோடி கொடுத்தாலும் மீண்டும் பெற்றுவிட முடியாது.

அதிபர் கொப்பியை முறையாக பேணுவதில் அக்கறையாக இருப்பார். அதன்பெறுமதி தெரியாத சிறுபராயத்தில் அவரை கடிந்துகொண்டதுதான் அதிகம்.

மதிய உணவை மிக அரிதாகவே உட்கொள்வார். அதிகமாக உணவு உட்கொள்ளுதல் உடலுக்கு தீங்கு என அடிக்கடிச் சொல்லுவார்.

மாதம்பை இறப்பர் தொழிற்சாலை சந்தியில் (பிரதான வீதி) உள்ள வடை கடைதான் அப்போதைக்கு அங்கு இருந்த ஒரேயொரு கடை.
பாடசாலை முடிந்தும் எமக்கு படிப்பித்து விட்டு அந்த வடை கடையில் அவித்த மரவள்ளிக் கிழங்கும் இரண்டு வடையும் வாங்கிச் சாப்பிடுவதே அவரது வழமை.

நான்தான் எனது வாகனத்தை (ஒரு சின்ன பிரம்புதான்) எடுத்துக்கொண்டு ஓடோடிச் சென்று வாங்கி வருவேன்.
விடுமுறைக் காலங்களில் கூட வீடு தேடி வந்துவிடுவார். ஒருகோப்பை தேநீருடன் அவர் எமக்கு அள்ளிக்கொடுத்த கல்விச் செல்வத்துக்கு அளவில்லை.

விடுமுறை நாட்களில் மாதம்பையில் ஒவ்வொருவர் வீடாக தேடிச் சென்று பயிற்றுவிப்பார். அதற்காக எம்மிடம் அவர் பெறுபேற்றை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

மாதம்பை பாடசாலையில் அவர் அதிபர் அறையில் இருக்கும்போது திடீரென சென்றுவிட்டால் அவ்வளவுதான். அடியுடன்தான் திரும்பி வர வேண்டும். உள்ளே நுழையும் முன்னர் வலது கையின் ஐந்து விரல்களையும் நேராக நிறுத்தி கையை மடக்கி நெஞ்சுக்கு நேராக வைத்து எக்ஸ்கியுஸ் மீ சேர் என்று சொல்லித்தான் செல்ல வேண்டும்.

மாதம்பையில் இந்தப் பழக்கத்தை அவர் கடுமையாக கடைபிடிக்கச் செய்தார்.

இறக்குவானை பரியோவான் கல்லூரியில் கூட மிகச் சிறப்பாக எம்மை வழிநடத்தினார். யார் யாரெல்லாம் பல்கலைக்கழகங்கள் போவீர்கள்? என்ன பெறுபேறு பெற்றுக்கொள்வீர்கள் என அந்தக்காலத்திலேயே ஆவலைத் தூண்டினார்.

அவரிடம் அடிவாங்கிய நாட்களையெல்லாம் மறக்கவே முடியாது. கன்னத்தில் அறைந்தால் இடிவிழுந்தது போல இருக்கும்.

என்னுடைய எழுத்துக்கள் சீராக மாற்றம் பெறுவதற்கு காரணகர்த்தாவே இராஜலிங்கம் அதிபர்தான்.
விளையாட்டில் அதீத திறமை கொண்டிருந்த அவரிடமிருந்து நாம் நிறையவே கற்றுக்கொண்டோம். கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதல்நிலை பெறுபேற்றை பெற்றபோது அவர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஆனாலும் அன்பை உடனடியாக வெளிக்காட்டாத மனப்பாங்குடன் நடந்துகொள்வார்.

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், மாதம்பை தமிழ் வித்தியாலயம், பரியோவான் கல்லூரி ஆகியவற்றில் அதிபர் இராஜலிங்கம் அவர்களிடம் கற்றவர்கள் அல்லது அவரது வழிகாட்டலில் பயின்றவர்களால் அவரை என்றுமே மறக்க முடியாது.

பரியோவான் கல்லூரியின் 130 ஆவது அகவை நிறைவில் அதிபர் இராஜலிங்கம் அவர்களின் நினைவாக ஒரு திட்டத்தை முன்வைக்கலாம் என எண்ணியிருக்கிறேன்.
அதிபர் இராஜலிங்கம் நினைவு சிறுகதைப் போட்டியொன்றை பாடசாலை மட்டத்தில் நடத்தலாம் என்பதே எனது எண்ணம். அதில் சிறப்பாக எழுத்தாக்கம் புரிந்த மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கலாம் எனவும் நினைத்தேன்.
இது தொடர்பில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளருடன் கதைத்திருக்கிறேன். அதிபருடன் இதுபற்றி உரையாடவில்லை.
அதிபரும் பழைய மாணவர் சங்கமும் அனுமதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இதனை நடத்தக் கூடியதாக இருக்கும்.
அதிபர் இராஜலிங்கம் என்றும் எம் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவுகூருகிறோம்.

-இராமானுஜம் நிர்ஷன்-விரிவாக படிக்க ……..