கமலினி மீண்டும் பிறப்பாள்!
அந்தச் செய்தி - என்
இமைக்கதவுகளை தாழிடச் செய்து
கண்ணீருக்கு வழிவிட்டது!
ஆயிரம் அசுரபலம்கொண்ட
களிறுகளால் குற்றுயிராய்
கிடத்தப்பட்டதுபோல
காரிருள் சூழ்ந்த
பெருவெளியொன்றில்
விளையாட்டுக்குக் கூட
எழுந்து பறக்க முடியாத
ஊனப்பறவையாய் நான்!
ஆயாசமாகிப்போன
உடலைச் சுமந்துகொண்டு
நினைவுகளோடு பயணிக்கிறேன்..!
தமிழை ஆவர்த்தனமாய்
பேசும் அழகு
அவளுக்கு!
இயல் - உயிர்
இசை - மூச்சு
நாடகம் - மெய்
அவளுக்கு!
இலகுமொழியில்
மழலை கொஞ்சும் பண்பு
அவளுக்கு!
எப்போதும் பூத்திருக்கும்
மலர் வதனம்
அவளுக்கு!
காலம்
எத்தனைக் கொடுமையானது?
கலையோடு வாழ்ந்த
கமலத்தை உதிரச் செய்தது!
காலன்
எவ்வளவு பொல்லாதவன்?
பாசத்தோடு பழகியவளுக்கு
பாசக்கயிறெறிந்தான்!
பிரம்ம கமலமல்ல அவள்
ஆண்டுக்கொருமுறை பூப்பதற்கு!
இது
பேரிடைவெளி!
நினைவுகளைக் கொண்டே
நிரப்பமுடியும்
அவள் கலைநளினங்களை
எண்ணிச் சிலாகித்த
மனதில் மௌனம் பரந்திருக்கிறது!
அவள்
அமைதியாய் உறங்குகிறாள்..!
ஆயிரம் கலைக்கனவுகளை
ஆயிரம் கலைக்கனவுகளை
அடைகாத்தபடி!
இறைவா - என்
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்!
அவள் மீண்டும்
பிறக்க வேண்டும் - என்ற
பிரார்த்தனைகளோடு!
ஆம்!
கமலினி - மீண்டும் பிறப்பாள்!
-இராமானுஜம் நிர்ஷன்
(நன்றி வீரகேசரி -11.04.2015)
(நன்றி வீரகேசரி -11.04.2015)