Todays Date:

நிவேதப்ரியா VI

அந்தி மங்கிய வேளையிலும் இளமையாகத் தெரிந்த சூரியன். சாரல் மழை. மனதோடு பேசிய தென்றல்…

வெளிச்சூழல் எத்தனையோ இன்பமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.
மனம் மட்டும் இருளுக்குள் தள்ளப்பட்டதாயும் நரம்புகள் சுருக்கிட்டு அவ்வப்போது வெதும்பிப் புடைப்பதாயும் மாறியிருந்தன.

மாலை 6 மணி.

தூரத்தே தெரியும் கடல். அலையலையாய் குவிந்து கரையை மோதியதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் அந்த அலைகளும் என் மனதைப் போலவே ஒத்திருந்தன.கடலில் முதல் அலை காதலி என்றும் பின்வரும் அலை காதலன் என்றும் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

காதலியை விரட்டிவருமாம் காதலன் அலை. காதலி முன்னால் ஓடிவந்து கரையோடு ஒதுங்கிவிடுமாம். கவலையுற்ற காதலன் அலை கவலையுடன் மனமில்லாமல் திரும்பிச் செல்லுமாம்.

இப்படிச் செல்கிறது கதை.

இராஜராஜசோழனின் கதையில் தீவுப் பெண் பூங்குழலிக்கு கடல் தான் கம்பளம். அந்தக் கடலில் படகுசெலுத்தி எத்தனை ஆனந்தம் கண்டிருப்பாள்? படகில் படுத்தவாறு வானில் பரந்திருந்த நட்சத்திரங்களையும் கடலில் தெரியும் நிலவு முகத்தையும் பார்த்துப்பார்த்தே பசிபோக்கியவள் அவள்….

இதுவும் மனதில் வந்துபோகிறது…

அசையாத பொருளை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அசையும் பொருளை, அதுவும் வித்தியாசமான கோணங்களில் - ஒரு சமயம் தள்ளாடி மறுசமயம் துள்ளியோடிவரும் அலைகளை எத்தனை தடவையும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

இப்படியும் யோசிக்கிறேன்….

வான்மீகி இராமாயணத்தைப் பற்றிப் பேசும் கம்பர் இப்படி அவைக்கு அடங்குகிறார்.

“வான்மீகியால் எழுதப்பட்ட இராமாயணம் ஒரு பரந்த பாற்கடல். அதனை கொஞ்சம் கொஞ்சமாகப் பருக முயலும் சிறுபூனை நான்”

இதுவும் என் எண்ணத்தில் உதிக்கிறது….

இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது சுதாகரித்தவனாய் மணியைப் பார்க்கிறேன். 6.38 ஆகியிருந்தது.

ப்ரியா வரும் நேரம்தான் - எண்ணிச் சிலாகிக்கையில் அங்கே வந்திருந்தாள்.

நிமிர்ந்து பார்க்காத பார்வையும் பேசாத மொழிகளும் அவளைக் கட்டிப்போட்டிருக்க, சலங்கைகளின் ஒருமித்த ஸ்ருதியோடு நடந்து வந்தவளைக் காணுகையில் ஏற்பட்ட கொள்ளை இன்பத்தையும் புத்துணர்ச்சியையும் புதுச் சுவையையும் வார்த்தையால் எப்படி வர்ணிப்பது?

தூரத்தே தெரிந்த கடல் கண்ணிலிருந்து மறைந்தது.

இளவேனிற் காலத்தில் தூய மழைத்துளியெடுத்து பூவிதழ்கொண்டு செதுக்கிய புதுச்சிற்பமாய் அவள் மட்டும் கண்ணுக்குள்ளும் எனக்குள்ளும்…!

ஒரே நேரத்தில் ‘ஹாய்’ சொன்னதிலும் அதே நேரத்தில் ‘நலமா’ என்றதிலும் நமக்குள் இருந்த ஒற்றுமை எண்ணங்கள் கொட்டியதை அவளும் உணராமலில்லை.

நா கூச பேசத்தொடங்கி - ஆரம்பம் முதல் - அந்த நாளின் அந்திநேரம் வரை நடந்ததெல்லாம் பேசினோம்.

பார்க்கப் பார்க்க கண்ணில் சுவை கொட்டும் அவள் இனிமையானவள்.


“வலிநிறைந்த சுவடுகளைச் சுமந்தவனாய்
நான் உன் முன்….

கண்களுக்குள் என்னைப் பார்க்கிறேன்

நீ இமைத்து மூடுகிறாய்..!

என் வலிகளுக்கு

அதைவிட ஒத்தடம் ஏது?”

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..