நிவேதப்ரியா VIII
ஆர்ப்பரிப்பான வார்த்தைகள் எதுவுமின்றி மெல்ல மெல்ல எமது உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஒளியிடையே மேகங்களும் அப்படித்தான் நடைபோட்டுக்கொண்டிருந்தன.
அவளுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் தூங்கிப்போனேன்.
அதிகாலையிலும் அவளது அழைப்பு
“என்ன இன்னும் நித்திரையா”
“ஆமாம். தேவி என்னை இறுக அணைத்துக்கொண்டதால் எழ முடியவில்லை”
“என்ன? யார் அந்த தேவி?” (வார்த்தையில் கோபம் தெரிந்தது)
“ம்ம்ம்…அவள் பெயரைச் சொன்னால் கோபிக்கக் கூடாது”
“கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்”
“நித்ரா தேவி”
மெல்லச் சிணுங்கிக் கொண்டாள்.
சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய பொழுது.
அடிக்கடி அவளைச் சந்திக்காமலும் இடையிடையே பேசி இன்னல்தராமலும் நாட்கள் கழிந்தன.
அவளிடமிருந்து நிறைய நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன்.
புத்தகத்துக்கு ஒத்தகருத்து நூல் என சிறுவயதில் படித்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் பக்குவப் பாதைக்குத் திரும்பியவுடன் அதன் உள் அர்த்தங்களைப் புரிந்துகொண்டேன்.
நல்லவிடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான் கூடாத விடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான். ஆனால் நல்ல விடயங்களை மாத்திரம் சொல்பவை நூல்கள்.
அவள் நல்ல விடயங்களை எனக்குச் சொல்லித்தந்தாள்.
ஆசானுக்கு ஒத்த கருத்து குரு என ஆரம்பகாலங்களில் கற்றிருக்கிறேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அதிலும் உள் அர்த்தம் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.
ஆசான் என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என நல்வழி காட்டுபவர். குரு என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்துகாட்டுபவர்.
ஒருவகையில் எனக்கு அவள் குருவாக இருந்தாள்.
எனது பயணம் சரியானதா? இலட்சியத்துக்கான பாதையிலிருந்து விலகியிருக்கிறேனா? யாருக்குத் துன்பம் விளைவித்தேன்? என்ன நல்லது செய்திருக்கிறேன்? என்றெல்லாம் நான் அடிக்கடி தனிமையில் யோசிப்பதுண்டு.
(ஒவ்வொரு நாள் நித்திரைக்கு முன்பும் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்னுடைய குரு எனக்குப் போதித்திருக்கிறார். நான் தினமும் செய்வதில்லை)
அப்படிச் சிந்திக்கையில் ப்ரியாவுடனான உறவு நிரந்தரமாக அமையாது என என் ஆழ்மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.
ஒரு பட்சம் முழுவதும் அவளுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும் என எண்ணினேன்.
(பதினைந்து இமைத்தல்கள் அல்லது பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை – காஷ்டைகள் முப்பது கொண்டது ஒரு கலை – கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம் - முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை – முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் - நாள் பதினைந்து கொண்டது ஒரு பட்சம்)
அவளிடமிருந்து விலகியிருந்த நாட்கள் நான் வாழ்க்கையில் மீட்டுப்பார்க்க விரும்பாதவை.
ஓர் இராஜ யானை தனது வலது முன்னங்காலால் என் இதயத்தை மிதிப்பது போல அடிக்கடி துடிப்பு.
பல்லாயிரம் ஊசிகளால் என் ஒவ்வொரு கலங்களும் துளையிடப்படுவதாய் உணர்வு.
ஆழமாயும் அகலமாயும் இதயம் முழுவதும் இடம்பிடித்து காதலின் அத்தனை அர்த்தங்களையும் என்னுள் விதைத்தவளின் நினைவுகளை ஒரு பட்ச காலத்தில் எப்படிப் புதைப்பது?
இமைக் கூடங்களில் சிறையிருக்கும் ஓரப்பார்வையையும் புன்முறுவலையும் நினைத்தமாத்திரத்தில் எங்கே விடுவிப்பது?
காதுமடல்களில் அடிக்கடி ஒலிக்கும் நளினக்குரலை எப்படி ஒடுக்குவது?
ஆம்..! காலம் பதில்சொல்லும் எனக் காத்திருந்தபோது உண்மையாகவே நாம் பிரிய நேரிட்டது.
(தொடர்ந்து பேசுவேன்…)
விரிவாக படிக்க ……..