Todays Date:

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!




ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.

ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.

கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.

சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.

சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.



சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?

சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?

இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?

குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?

சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?

ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.

வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். 


நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.

எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

0 comments: