Todays Date:

காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள்



செல்லத் தோட்டத்தின் அரச மரச் சந்தியென்றால் பகலில்கூட யாரும் நிற்கப் பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை தண்டிக்கும் மலைச் சாமியின் குடியிடம் அது. ஒவ்வொரு புதுவருடத்திலும் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் மலைச்சாமிக்கு தேயிலை மாலை அணிவித்து குறைதீர்க்க வணங்குவது தோட்ட மக்களின் வழமை.

நேரம் அதிகாலை 2 மணி. மலைச் சாமியின் வாள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தது. உறங்கிக்கொண்டிருக்கும் தேயிலைச்செடிகளுக்கிடையில் சலசலத்து ஓடும் ஓடையின் சத்தம் தவிர எங்குமே மயான அமைதி. மலையிடையில் வரி கீறியதாய் தோட்டத்துக்கு வரும் மண்பாதை உயிர்கொண்டு சத்தமிடுகிறதோ? இல்லை. து}ரத்தே ஒரு வாகனம் விரைவாக வந்துகொண்டிருக்கிறது.

செல்லத்தோட்டம் பற்றிச்சொல்லியாக வேண்டும். குறைகள் எதுவுமின்றி செழிப்புடன் இருந்ததால் செல்வத்தோட்டம் என மக்கள் இட்ட பெயர்தான் பின்னர் பேச்சு வழக்கில் செல்லத்தோட்டமானது. இப்போதெல்லாம் சரியாக கொழுந்து வளர்வதில்லை, சம்பளப்பிரச்சினை, போராட்டம் என சுமைகளுக்கிடையே சுமைதாங்கிகளாய் வாழும் தோட்ட மக்கள் வாடிய முகத்துடனேயே காணப்படுகிறார்கள். வறுமைக்கு எங்கே போய் நிவாரணம் தேடுவது? நாளைய சமயலுக்கும் குழந்தையின் படிப்புக்கும் யாரிடம் கையேந்துவது? என்றெல்லாம் எண்ணவோட்டங்கள் மூளை நரம்புகளைப் பிண்ணிப் பிணைகையில் அதைவிட பிணி ஏது?

உழைக்கும் கைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், இன்றும் தேயிலைக் கிள்ளியே காம்பாய் மாறிய தம் கைகளைப் பார்த்தே விழித்தெழுகிறார்கள்.

உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு என்ன சேதி சொல்ல வாகனம் வந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஐந்து நிமிட இடைநேரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்டது. உள்ளேயிருந்து இறங்கிய இருவர் வாகனத்தின் பின் கதவைத் திறந்து சகோதர மொழியில் பேசியவாறே பெட்டியொன்றை சிரமத்துடன் இறக்கிக் கீழே வைத்தனர். வாயை துணியால் மூடிய ஒரு பெண் உருவம் மலைச்சாமிக்கருகே சென்று மண்டியிட்டுக்கொண்டது.

இரண்டு உருவங்கள் மீண்டும் வாகனத்தில் ஏற வாகனம் உறுமிக்கொண்டு புறப்படத்தாயாரானது. அந்த வெளிச்சத்தில் மலைச்சாமியின் உருவம் தெளிவாகத் தெரிய அருகில் மண்டியிட்டுக்கொண்டிருந்த பெண் பார்வதிதான் என்பது கண்ணுக்குப் பட்டது. பார்வதியின் கண்களில் அணல்பறக்கும் வேகம் தெரிந்தது. தலைவிரிகோலமாய் மலைச்சாமிக்கு முன் மண்டியிட்டிருந்த அவள் வாகனம் புறப்படத்தயாரான போது மண்ணை அள்ளி தலையில் வீசிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.

“ஆசயா வளத்த என் பிள்ளைய பிணமா கொண்டு வந்து போட்டுட்டு போறானுங்களே…
ஐயோ…
கேட்க யாருமே இல்லையா?

மலைச்சாமியே…. என் மகள இப்படிப்பார்க்கவா உனக்கு கொழுந்து மாலை போட்டேன்?
யாருமே இல்லையா? யாராவது வாங்களே…”

மரண ஓலமாய் பார்வதியின் குரல் ஒலிக்க மலையிடுக்கெங்கும் அது எதிரொலித்து மௌனம் கரைத்தது. உயிரை உறையவைக்கும் அழுகைக் குரலுக்கு சற்றேனும் செவிசாய்க்காது திரும்பிச்சென்றது அந்த வாகனம்.

அந்த வெளிச்சத்தில் மின்னியது சவப்பெட்டி.

“போ…
என் மகளைக் கொலை செய்த பாவம் உன்னையெல்லாம் சும்மாவிடாது”

பார்வதியின் கண்ணீர் நிறைந்த கைக்குட்டையை வாகனத்தை நோக்கி வெறித்தனமாக வீசியெறிந்தாள்.

நடுங்கும் குளிரில் முனகியவாறே மெழுகுதிரி ஏந்திய சில உருவங்கள் லயத்திலிருந்து படியிறங்கி வந்துகொண்டிருக்கின்றன. தொடர்ந்தும் குழுகுழுவாக ஆண்களும் பெண்களும் இணைந்து வருகின்றனர். அவர்களில் பார்வதியின் குரல்கேட்டு பதறியடித்துக்கொண்டு வரும் அவள் கணவர் பெரியசாமியும் ஒருவர்.

அவர்களைப் பார்த்த பார்வதியின் அழுகை மேலிட்டது. சவப்பெட்டிக்கருகில் சென்று கதறிக் கதறி அழுகிறாள்.

“சுமதிய அனுப்ப வேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா? அரக்கனுங்களெல்லாம் சேர்ந்து புள்ளைய கொன்டுட்டாங்க.
இப்போ யாரு என் மகள திரும்பத் தருவாங்க?

கணவனைக் கட்டியணைத்ததோடு மயங்கி விழுகிறாள் பார்வதி.

என்ன நடந்ததென்றே தெரியாமல் விழிகளில் நீர் நிறைய சவப்பெட்டியை நெருங்குகிறார் பெரியசாமி. அவர் சவப்பெட்டியைத் திறந்ததும் அரசமரச் சந்தியே அழுகையில் நனைகிறது.

ஆம்! செல்லத்தோட்டத்தின் செல்லப்பிள்ளை என அனைவராலும் ஆதரிக்கப்பட்ட சுமதிதான் பிணமாக இருக்கிறாள். குழந்தைச் சிரிப்பு மாறாதவண்ணம் நீலநிறத்தில் காட்சியளிக்கிறது அவள் முகம். சுமதிக்கு என்ன நடந்தது? கேட்க முடியாத கேள்வியின் அடையாளமாக அனைவரும் விழிபிதுங்கி நிற்க சுமதியின் ஒன்றுமறியா கடைத்தம்பி சவப்பெட்டியைத் தடவிக்கொண்டிருந்தான்.

பெரியசாமி, பார்வதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் தான் சுமதி. பெரியசாமிக்கு நெஞ்சு வருத்தம் இருந்ததால் குடும்பச் சுமை முழுவதும் பார்வதியின் வசம்தான். எத்தனை வேதனைகள் என்றாலும் இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பி கடைக்குட்டியை பிள்ளைமடுவத்தில் சேர்த்து வேலைக்கும் சென்று வந்து சமைத்து, சோறுகொடுத்து குடும்பத்தை கண்ணெனக் காத்துவந்தாள் பார்வதி. மலைச்சாமியின் மண்விபூதி எப்போதும் பார்வதியை இலட்சணமாகக் காட்டும்.

தோட்டத்துக் குழந்தைகளில் சுமதியின் மீது அனைவருமே அதிக பாசம் வைத்திருந்தார்கள். பண்புடனனான நல்ல பழக்கமும் சிரித்த முகத்துடன் பேசுவதுமே இதற்குக் காரணம். பட்டம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு லயன் அறை ஒவ்வொன்றாக சென்று தனது நண்பர் கூட்டத்தை அழைத்து மேல்கணக்கு மலைக்கு சென்று விளையாடுவதும் அம்மாவுக்கு பயந்து ஆறு மணிக்கே ஐயா வீட்டுக்கு அந்தி வகுப்பு செல்வதும் என துடிதுடிப்பாக இருப்பாள் சுமதி.

குழந்தைகள் வளர வறுமையும் கதவைத்தட்டியது.

“பெரியசாமி அண்ணே… உள்ளயா இருக்கீங்க?”

“ஆ… வாங்க தரகர் தம்பி. என்ன இந்தப்பக்கம்? நீங்க வேற தோட்டத்துக்கு போறதா கேள்விப்பட்டேன்”

“ஆமா அண்ணே. நம்மள நம்புறவங்ககிட்ட தானே வாழ முடியும். இப்போதெல்லாம் தொழிலும் ஜமாய்க்குதில்ல. வீட்டில சும்மா இருக்கிறதுக்கு உங்கள பார்க்கலாமேனு வந்தேன்”

பெரியசாமிக்கும் தரகருக்கும் பேச்சு நீண்டுகொண்டு சென்றது.

சிட்டாய் அங்கு விரைந்துவந்த சுமதி தந்தைக்கு தேநீர் கொடுத்துவிட்டு பறந்துசென்றாள்.

அப்போதுதான் சுமதி பற்றிய கதை அங்கு ஆரம்பமானது.

“உங்களுக்கும் சுகமில்ல. பார்வதிக்கு எத்தனை நாளைக்கு தான் குடும்ப பாரத்த சுமக்க முடியும்? சுமதிக்கு இப்ப சரியான வயசு. கொழும்பில நல்ல வீடா பார்த்து, வேலைக்கு விட்டா, அங்கேயே படிச்ச மாதிரியும் இருக்கும், குடும்ப செலவுக்கு காசு வந்தமாதிரியும் இருக்கும்”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் தரகர். வாரத்தில் ஒரு முறையேனும் கசிப்பு குடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டுக்கொண்டிருந்த பெரியசாமிக்கு அது சரியாகப் பட்டது. வஞ்சகப் பேச்சில் முழுமையாக மதிமயங்கிய அவர் இதுபற்றி பார்வதியிடம் பேச குடும்பத்தில் சண்டையே வலுத்தது.

பார்வதிக்கு நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரிக்க கணவரின் வற்புறுத்தலுக்கு இசைந்து தன் ஆசை மகளை கொழும்புக்கு அனுப்பத் தீர்மானிக்கிறாள்.

அந்த வீட்டிலிருந்துகொண்டே கொழும்புப் பாடசாலையில் படிக்க வைப்பதாகவும் முதல் மாத சம்பளம் தனக்கு வேண்டும் எனவும் ஆசைகாட்டி, பேரம்பேசி சுமதியை அழைத்துச்செல்கிறார் தரகர்.

சுமதிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மலைச்சாமியிடம் மன்றாடி தனது குறையை ஒப்புவித்துவிட்டு வீடு திரும்பிய பார்வதிக்கு சுமதியின் நினைவாகவே மூன்று மாதம் கழிகிறது. தலைக்கு மேல் பிரச்சினையென்றாலும் ஒரே தலையணையில் பிள்ளைகளுடன் படுத்துறங்கிய பொழுதுகளில் மனக்குது}கலம் நிறைந்து இன்முகத்தோடான விடியலை இனியொருநாள் அனுபவிக்கக் காத்திருக்கிறாள்.

நான்காவது மாதம் தன் மகளைப் பார்க்க தரகருடன் கொழும்புக்கு செல்கிறாள் பார்வதி. இவ்வளவு பெரிய நகரத்திலா என் மகள் படிக்கிறாள்? வேலை செய்கிறாள் என ஆச்சரிய மகிழ்ச்சியில் செல்லும் பார்வதிக்கு வேதனைச்செய்தி தான் காத்திருக்கிறது.

பலவிதங்களில் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறாள் சுமதி. காலையில் வீட்டுப் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, பாத்திரம் தேய்ப்பது. சமயல் உதவி என ஏகப்பட்ட வேலைகள். இரவில் உரிமையாளருக்கு கால்பிடித்துவிடுவது முதல் ஏராளமான பாலியல் துன்புறுத்தல்கள். இவை அத்தனையையும் சொல்லி பார்வதியின் காலைப்பிடித்து அழுத குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை?

ஒரு வேளை சோறென்றாலும் அள்ளி அணைத்து மடியில் கிடத்தி வளர்த்த மகள் காலனின் வதைக்குள்ளாவது காலத்தின் தண்டனையா? என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டாலும் அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. கொழும்பின் எந்த வீதியும் அவளுக்குத் தெரியாது. கையில் பணம் இல்லை. எவ்வாறு அழைத்துச்செல்வது?

வழியொன்றும் அறியாமல் மகளைத் தனியே விட்டுவிட்டு வீட்டார் கொடுத்த நாலாயிரம் ரூபாவுடன் ஊருக்கு வருகிறாள் பார்வதி.

உணவில்லை. உறக்கமில்லை. மலைக்குச்சென்று கொழுந்து பறிக்கையில் தன் மகளின் மானம் பறிக்கப்பட்ட ஞாபகம். யாரிடம் முறையிடுவது? எப்படி உதவி கேட்பது. கைகொடுக்க கல்வியறிவும் இல்லை. ஊராரிடம் சொல்லி உதவி கேட்கவும் தயங்குகிறது மனம்.

இவ்வாறு ஆறு மாதம் கடந்த பின்னர்தான் திடீர் தந்தி பார்வதியின் கரம் கிட்டியது. கொழும்பின் தனியார் மருத்துவமனையில் மகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவசரமாக வருமாறும் தந்தி சொல்லியது.

சாமி படத்துக்குக் கீழே சேர்த்துவைத்திருந்த பணத்துடன் தரகரையும் அழைத்துக்கொண்டு பார்வதி கொழும்புக்கு செல்கிறாள். அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமதிக்கு பேச்சு வரவில்லை. வார்த்தைக்குப் பதிலாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தேயிலை மலையெங்கும் பட்டம் விட்டு அம்மாவின் பெயரைக்கூறி அது எதிரொலிக்கும் சத்தம் கேட்டு மகிழும் பிஞ்சு, கட்டிலுக்குள் அடங்கியிருந்தாள்.

சுமதி தான் இருந்த வீட்டின் ஒன்பதாம் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் வீட்டார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அங்கிருந்த இருவர் தகவல் கூறினர். கொல்லும் கோபத்தில் வீட்டு உரிமையாளரை கேட்டபோது அவர்கள் திருமண வைபவம் ஒன்றுக்காக சென்றுவிட்டாதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“அ…ம்….மா….”

சுமதி ஏதோ சொல்ல முற்படுகிறாளா? இல்லை அம்மா என்ற சொல்லில் ஆறுதல் தேடுகிறாளா தெரியவில்லை. கருவிழிகள் மேலும் கீழும் சென்று ஏதோ பாஷை சொல்வது மட்டும் புரிகிறது. ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் விடுதலையாகிறாள் சுமதி.

பார்வதியின் அலறல் ஒலியில் நிறைகிறது அறை. இருந்தும் என்ன பயன்? காற்றோடு கலந்துவிட்ட உயிரை எந்தக் குரல்கொடுத்து அழைக்க முடியும்? அவள் சொல்ல முற்பட்ட கண்ணீர் வரிகளை எந்தக் கண்கொண்டு பார்க்க முடியும்?

ஏதோ ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஏமாற்றப்படுகிறோம் என்பது மட்டும் பார்வதியின் சிற்றறிவுக்குத் தெரிகிறது. மாயமாகிவிட்ட தரகருடன் பாரியதொரு பித்தலாட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பததையும் அறிகிறாள். இருந்தும் தன் கையெழுத்தையே தன்னால் எழுத முடியாத பார்வதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்குத் தெரிந்த ஒரே நீதிபதி மலைச்சாமி தான்.

துடிக்கத் துடிக்க கண்கள் அகற்றப்பட்டு அங்கங்கள் அனைத்துமே கூர்க் கோடரியால் வெட்டிச் சிதைப்பது போன்ற உணர்வு பார்வதிக்கு. தன்னால் தனக்கே ஆறுதல் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியசாலியாய் பொம்மை போல ஆகுகிறாள்.

இந்நிலையில் தான் விடிபொழுதில் ஓர் அஸ்தமனச் செய்தி செல்லத்தோட்டத்துக்கு மரண ஓலமாய்க் கேட்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத குறுங்காலத்தில் சுமதியின் சுட்டித்தனங்களும், நிரந்தரப்பிரிவும் தோட்டத்தையே துவர்க்கம் செய்தது.

பொழுதுவிடிந்தது. பார்வதிக்கு இன்னும் விடியவில்லை. மகளின் பெயரை முனுமுனுத்தவாறே தன்னிலை மறந்திருக்கிறாள். இவ்வேளை மீண்டும் ஒரு வாகனம். என்ன செய்தி வரப்போகிறதோ என மரண வீட்டிலும் மக்களின் எதிர்பார்ப்பு.

அதேபோல் மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்ட கார் ஒன்றிலிருந்து மூவர் இறங்குகின்றனர். சுமதி வேலை செய்த வீட்டின் உரிமையாளர், அவர் மனைவியுடன் பொலிஸ் அதிகாரிபோல் தோற்றம் தந்த ஒருவரும் வருகிறார். சுமதியைப் பார்க்கவில்லை. சுமதியின் தாயாரைப் பார்க்க வேண்டும் என குரல்கொடுக்கிறார் பெரியவர்.

கலங்கிய மனதுடன் பழைய நினைவுகளிலிருந்து மீளாத பார்வதி கைத்தாங்கலாக கீழே அழைத்துவரப்படுகிறாள். வந்தவர்கள் ஏதோ சொல்கின்றனர். பார்வதி, பேரலையொன்றில் தாக்கப்பட்டவளாய் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சில நிமிடங்களின் பின்னர் பார்வதியின் கையில் ஒரு பையை கொடுத்துவிட்டு வந்தவர்களுடன் மறைகிறது கார்.

மறுவார்த்தை பேச சக்தியில்லாதவளாய் இருந்த பார்வதிக்கு பையில் இருந்த பதினையாயிரம் பணமும் தெரியவில்லை. அப்போதும் மலைச்சாமி மௌனம் காத்துக்கொண்டிருந்தது.

- இராமானுஜம் நிர்ஷன்

20 comments:

Jeyapalan said...

திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை, ஆனால் தெய்வமே திக்கற்று நிற்கும் போது யாரை சொல்லி என்ன செய்ய.

Paleo God said...

வாழ்த்துக்கள்..:))

வினவு said...

பெற்ற மகளை இப்படி பணக்காரவீடுகளின் ஆண் வக்கிரத்துக்கு பலி கொடுக்கும் பார்வதி போன்ற தாய்மார்கள் இந்தியாவிலும் அதிகம்.
நட்சத்திரப்பொழுதை தேவையுள்ள சமூகப் பர்வையுடன் பகிர முயல்வதற்கு வாழ்த்துக்கள்!

Subankan said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!

M.Rishan Shareef said...

அன்பு நண்பனுக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள். மகிழ்வாக இருக்கிறது நிர்ஷா !

தங்க முகுந்தன் said...

என்ன சொல்வது? உண்மையாக நடந்த கதையா என்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வுக்கும் இதுக்கும் ஏதோ ஒரு ....! இது உண்மையா?
மனம் விரக்தியில் நிற்கிறது நிர்சா! உமக்குத் தெரியும்தானே!
நான் வரட்டா? யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்பது மட்டும் உண்மை!

ஜோதிஜி said...

உங்கள் நட்சத்திர வாரத்தை பார்த்து உள்ளே வந்த போது நிறைய எதிர்பார்த்து வந்தும் ஏமாற்றமாக இருந்தது. காரணம் உங்கள் அறிமுகம் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இன்று மின் அஞ்சலில் வந்த மலையகத் தமிழர்கள் குறித்து படித்த போது (படித்துக்கொண்டுருக்கும் புத்தகங்கள்) என்னுடைய பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவியர் இல்லம் திருப்பூர்

Anonymous said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!

சந்தனமுல்லை said...

மனம் கனத்து போகிறது....நெடுநாளைக்கு மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் பார்வதி்யின் ஓலம்!

நல்ல இடுகை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலையகத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இதில் வரிக்கு வரியுள்ள உண்மையை உணரமுடிகிறது.

இறக்குவானை நிர்ஷன் said...

//செயபால் said...
திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை, ஆனால் தெய்வமே திக்கற்று நிற்கும் போது யாரை சொல்லி என்ன செய்ய.
//

உண்மை தான். இனி யாரிடம் சொல்லியழ?

வருகைக்கு நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

//ஷங்கர்.. said...
வாழ்த்துக்கள்..:))
//

வருகைக்கு நன்றி ஷங்கர்

இறக்குவானை நிர்ஷன் said...

//வினவு said...
பெற்ற மகளை இப்படி பணக்காரவீடுகளின் ஆண் வக்கிரத்துக்கு பலி கொடுக்கும் பார்வதி போன்ற தாய்மார்கள் இந்தியாவிலும் அதிகம்.
நட்சத்திரப்பொழுதை தேவையுள்ள சமூகப் பர்வையுடன் பகிர முயல்வதற்கு வாழ்த்துக்கள்!
//


ஆதரவுக்கு நன்றி. உங்கள் பலத்தோடு இன்னும் பலமடைகிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//Subankan said...
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!
//

//எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பு நண்பனுக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள். மகிழ்வாக இருக்கிறது நிர்ஷா //

நன்றி சுபா, ரிஷனான்.

சில மாதங்களாக வலைப்பக்கம் வரமுடியவில்லை. நினைவில் வைத்திருக்கிறீhகள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//தங்க முகுந்தன் said...
என்ன சொல்வது? உண்மையாக நடந்த கதையா என்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வுக்கும் இதுக்கும் ஏதோ ஒரு ....! இது உண்மையா?
மனம் விரக்தியில் நிற்கிறது நிர்சா! உமக்குத் தெரியும்தானே!
நான் வரட்டா? யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்பது மட்டும் உண்மை!
//

உண்மைச் சம்பவம் தான் அண்ணா.
சுவாரஸ்யத்துக்காக கோர்த்து எழுதியிருக்கிறேன். ஹற்றன் பத்தனையில் நடந்தது.

யாரும் உதவப் பொவதில்லை என்பது தெரியும் தானே?

நீங்கள் வருவதென்றால் முதலில் சந்தோசமைடவது நான்தான்

இறக்குவானை நிர்ஷன் said...

//ஜோதிஜி said...
உங்கள் நட்சத்திர வாரத்தை பார்த்து உள்ளே வந்த போது நிறைய எதிர்பார்த்து வந்தும் ஏமாற்றமாக இருந்தது. காரணம் உங்கள் அறிமுகம் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இன்று மின் அஞ்சலில் வந்த மலையகத் தமிழர்கள் குறித்து படித்த போது (படித்துக்கொண்டுருக்கும் புத்தகங்கள்) என்னுடைய பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவியர் இல்லம் திருப்பூர்
//

வெளிப்படையாக எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் இலங்கையில்.
எனது புதிய மலையகம் வலைப்பதிவில் இட்ட சில இடுகைகளால் அச்சுறுத்தல்கள் பலவற்றை சந்தித்தேன்.
உங்கள் எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது. விரைவில் பல தகவல்களை தருகிறேன்.

நேரமிருந்தால் www.puthiyamalayagam.blogspot.com பக்கம் வாருங்கள்.

அன்பு நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!
//

உங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது.
நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

//சந்தனமுல்லை said...
மனம் கனத்து போகிறது....நெடுநாளைக்கு மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் பார்வதி்யின் ஓலம்!
/

நன்றி.

இது ஓர் உண்மைச் சம்பவம்

இறக்குவானை நிர்ஷன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
மலையகத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இதில் வரிக்கு வரியுள்ள உண்மையை உணரமுடிகிறது
//

நன்றி யோகா

geevanathy said...

அன்பு நண்பனுக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்.