"பாலுறவில் உண்மை வேண்டும்"
பிரின்சி மங்களிகா
எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் வலையில் விழுந்த அப்பாவிப் பெண். போதிய விழிப்புணர்வுகள் இன்றி வேறெவருக்கும் இந்த நோய் தொற்றிவிடக் கூடாது என அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஒரு சமூக சேவகி.
அதற்கென தனியான வீடொன்றையும் வாடகைக்கு பெற்றுள்ளார். எயிட்ஸ் நோயாளர்களுக்கு உகந்த ஆலோசனைகளை வழங்கிவரும் மங்களிகாவை அந்த வாடகை வீட்டில் சந்தித்தேன்.
இந்த நோய் பற்றிய தெளிவு சமுதாயத்தினருக்குத் தேவை என்பதால் பாதிக்கப்பட்ட பலரிடம் தகவல்களை பெற்றுவருவதாகவும் எனது தொழில் பற்றியும் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
மங்களிகா தான் சார்ந்த விடயங்களை இவ்வாறு விளக்குகிறார்.
“நான் பிரின்சி மங்களிகா. ராகமையில் இருக்கிறேன். எனக்கு 49 வயதாகிறது. எனக்கு இரண்டு பெண் பிள்கைள் இருக்கிறார்கள். எனது கணவர் 10 வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
எனது கணவர் எச்ஐவியினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அவரது இறப்பிற்குப் பின்னர் நான் பட்ட வேதனைகளை ஒருசில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து ஒதுக்கி வைத்தனர். ஆசிரியர்கள், நண்பர்கள் யாருமே எனது பிள்ளைகளிடம் நெருங்கி வருவதில்லை. எனது பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்ற அச்சத்தில் அப்பகுதியிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை.
இதைத் தாங்க முடியாமல் எனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்தேன். அன்றிரவு நாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது எமது வீட்டுக்கு அப்பகுதி மக்கள் தீ வைத்தனர். எம்மை அங்கிருந்து அனுப்புவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.
அவ்வாறான பிரச்சினைகளையும் சமாளித்துக்கொண்டேன்.
அதன்பின்னர் எனக்கும் வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கூறினார்கள். நான் பரிசோதனை செய்தபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
எனக்கும் அந்த நோய் தொற்றியிருந்தது.
எனது கணவர் ஜெர்மனியில் தொழில்புரிந்தார். அங்கு அவருக்கு இருந்த கூடாத பாலியல் தொடர்புகளால் இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது.
கணவன்,மனைவி இருவரில் ஒருவர் மட்டும் உண்மையாக இருந்து எதையும் சாதிக்க முடியாது. ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருவருமே உண்மையாக இருக்கவேண்டும்.
எனது விடயத்தில் நான் தவறு செய்யவில்லை. எனது கணவர் செய்த தவறுக்கு நானும் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்கள் பலர் என்னிடம் வந்து ஆலோசனை கேட்கிறார்கள். அவர்கள் தமது இளவயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
என்ன செய்வது? கலாசார மாற்றமும் இதற்குக் காரணம்.
விபசாரம் செய்பவர்களுக்கு மாத்திரமே எயிட்ஸ் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அது தவறானது. கணவர் தொழிலுக்கு சென்ற பின்னர் மாற்று நபர்களிடம் இன்பத்தை அனுபவிக்கும் பெண்கள் பலருக்கு தாம் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது.
அதேபோல் தொழிலகங்களில் வேறு பெண்களுடன் தொடர்பினை வைத்திருக்கும் ஆண்கள் பலருக்கும் இந்த விடயம் தெரியாது.
இதனால் பாதிக்கப்பட்ட எத்தனையோ சிறுவர்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
நான் இந்த சமூகத்திடம் கேட்டுக்கொள்வதும் இதுதான். சிற்றின்பத்தை அனுபவிப்பதற்க முயற்சிக்கிறோம். அதனால் ஏற்படும் இவ்வாறான பின்விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம். ஆதலால் மிகக் கவனமான,பாதுகாப்பான உடலுறவு தேவை”
-இராமானுஜம் நிர்ஷன்
5 comments:
நல்லதொரு சமூக அக்கறையுள்ள பதிவு.
ஒழுக்கமற்ற வாழ்க்கை என குடும்ப அமைப்பை ஏற்படுத்தும் மனித இனம் அதில் இருந்து விலகும் போது அதனைக் கட்டுப்படுத்த இது போன்ற தீராத நோய்கள் ஏற்படுவது இயற்கையின் செயல்பாடுகளான்னு தெரியவில்லை. ஆனால் ஏதும் அறியாதவர்களும் அதனால் பாதிப்பு அடைவது வருத்தம் அளிக்கிறது.
பழிவந்தபோதும் மனந்தளராமல் போராடிய இந்தப் பெண் தான் பாரதி சொன்ன ‘வீரப்பெண்’
பழிவந்தபோதும் மனந்தளராமல் போராடிய இந்தப் பெண் தான் பாரதி சொன்ன ‘வீரப்பெண்’
//மிகக் கவனமான,பாதுகாப்பான உடலுறவு தேவை//
மனைவியைத் தவிர்த்து வேறு பெண்களோடு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லி வந்த நாம், பாதுகாப்பாக வைத்துக்கொள் என்று சொல்லுகிற நிலைமைக்கு இப்போது வந்துவிட்டோம்.
Post a Comment