Todays Date:

“மண்ணுக்குள் இருக்கும் என்னை அகழ்ந்து கோயில் எழுப்புங்கள்”

இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோருக்கு இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மிகப் பழைமையான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னும் அழியாமல் இருப்பது இறை சக்தி என்றே கணிப்பிட முடியும்.

திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை “கொனா கோவிலய(நந்திக் கோயில்)” என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்கு சான்றாக விளங்குகிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.

இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

இந் நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளதுடன் அவருடைய மகனை வேறு மதத்துக்கு மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலை பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக இன்றுவரை அந்தக் குடும்பத்தினர் கோயிலை பராமரிக்கின்றனர்.

போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.

1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி சலலிஹினி சந்தேசய எனும் காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.
இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு நிலையத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்திருக்கிறார்கள். அந்த ஆலயத்தில் கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கதிர்காமக் கந்தனுக்கு எடுக்கும் பெருவிழாவாக பல்வேறு விழாக்கள் இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் 1980 களில் பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிகால எழுத்தக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்களின் தீர்த்தமாக அந்தக் குளம் இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அதன் பின்னர் இந்த ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இந்த ஆயத்துக்கு அந்த குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.

தற்போதும் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி உள்ளிட்ட ஏனைய அகழ்வுகள் பக்தியுடன் ஆலயத்தில் பேணப்படுகின்றன.


எழுத்தில் ஆதாரபூர்வமாக எதுவும் காணப்படாத போதிலும் அகழ்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகள் இந்த ஆலயத்தின் பழைமையை எடுத்துக்காட்டுகின்றன. பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் காரைநகரைச் சேர்ந்த திருமதி கனகசபை கோயில் திருப்பணிகளை முன்னின்று செய்துவருகிறார்.


ஆலய தலவிருட்சம்

கண்டெடுக்கப்பட்ட அகழ்வுகள்

கண்டெடுக்கப்பட்ட ஆவுடை
நந்தி

சோர்த்துக்கேயரின் தாக்குதல் சித்திரமாக...

கட்டப்பட்டுவரும் ஆலயம்

ஆலயத்தின் தொன்மைத் தன்மை சிதைக்கப்படாதவண்ணம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் இந்த ஆலயத்தின் வரலாறு சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

4 comments:

கானகம் said...

நல்ல விஷயம்.. இதுபோன்ற இலங்கைக் கோவில்கள் பற்றிய தகவல்களை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்ற தளத்துக்கு அனுப்புங்களேன்..


ஜெயக்குமார்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலங்கை வந்தால் தங்களைத் தான்
முதல் சந்திக்க வேண்டும் போல் உள்ளது. பல பழைமைகளை அறியத் தருகிறீர்.
புதிய செய்தியே!

மாதேவி said...

திருநந்தீஸ்வரம் ஆலயம் படங்களுடன் அறியத் தந்ததற்கு நன்றி.

Anonymous said...

அருமையான தகவல். எமக்காக இதை எழுதியதற்கு நன்றிகள்.

நட்சத்திர வாழ்த்துகள் :)