Todays Date:

கனவில் எழுதிய கவிதை!



அதுஒரு நிலாப்பொழுது

தனக்கு எட்டிய தூரம்வரை வெண்ணொளிபாய்ச்சி
வெள்ளிமழையில் உலகத்தை நனைத்துக்கொண்டிருந்தது நிலவு.

இரவுதேவதை முழு உலகத்தையுமே ஆட்கொண்டு
மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது.

அந்தி மஞ்சளைக் குழைத்து
மல்லிகை மணத்துடன் செய்யப்பட்ட
தங்கச்சிலையாய் வந்து நிற்கிறாய்.

ஒற்றைப்பார்வையில் இலேசாக இதழ்விரித்து நீ புன்னகை பூக்கையில்
அதனை முழுமையாக உள்வாங்கிய என் உயிர்
இரகசியமாக அதனை உணரத் தொடங்கியது.

தங்கப்பட்டாடை அணிந்த வெள்ளை ரோஜாவாய் கன்னம்சிவக்க நடந்துவந்தாய்.

அருகில் வருகிறாய்.
என் சுவாசம் முழுவதும் உன் வாசம்.

உன் சுவர்ணத்தொடுகைக்காக காத்திருக்கிறேன்.

அழகுதேவதையின் சிங்காரமான கட்டழகு
என் அத்தனை பலத்தையும் கட்டவிழ்த்துப்போட்டது.

ஜன்னல் நிலவொளியில்
வெள்ளித் தகடாய் ஜொலித்த நீ
மின்மினியாய் கண்சிமிட்டிச் செய்த சமிக்ஞைகள்
ஆழ்ந்த இன்பத்துக்கு அத்திவாரமிட்டன.



இந்த பூமியே சிதறிப்போனாலும் உன்னைமட்டும் என்னிலிருந்து விலகாமல்காப்பேன்
என என் மனது உள்மனச்சாட்சியிடம் உறுதிபூண்டுகொண்டது.

மேகத்தை ஒன்றுதிரட்டி செதுக்கிய ஆதர்ஷனச் சித்திரம்போல அருகில் வந்து என்
கண்களைப் பார்க்கிறாய்.

இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!

இரவுவரும்
அதே நிலவும் வரும்
நீ வருவாயா?

-கனவுகளின் வரிகளுடன்
இறக்குவானை நிர்ஷன்

4 comments:

Unknown said...

//இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!//

எல்லா தேவதைகளும் இப்படித்தான் நிர்ஷன். அவர்களது மாயக்கரங்களை வீசி நாம் கைப்பிடிக்க எத்தனிக்கையில் நமக்குச் சொந்தமானது மட்டுமே எஞ்சும்.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா !

ஹேமா said...

கனவோடு ஒரு கவிதை.
நினைவோடுதான் எழுதினீர்களா நிர்ஷன்.இல்லை எழுதினதும் கனவில்தனா!அழகு.

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!//

எல்லா தேவதைகளும் இப்படித்தான் நிர்ஷன். அவர்களது மாயக்கரங்களை வீசி நாம் கைப்பிடிக்க எத்தனிக்கையில் நமக்குச் சொந்தமானது மட்டுமே எஞ்சும்.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா !
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷான்.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
கனவோடு ஒரு கவிதை.
நினைவோடுதான் எழுதினீர்களா நிர்ஷன்.இல்லை எழுதினதும் கனவில்தனா!அழகு.
//
நினைவோடு தான் ஹேமா.
நன்றி.