நினைவுகளின் சுவடுகள்…!
அந்த இடம் எப்படியிருக்கும்? எல்லாவற்றுக்கும் எவ்வாறு முகம்கொடுப்பது? எவ்வாறு சமாளிப்பது? யார் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்?
காய்ச்சல் என்றால்… தலைவலியென்றால்…
இப்படி ஆயிரம் எண்ணவோட்டங்கள் மனதுக்குள்.
அன்று 2002.10.27. உறவினர்கள் நண்பர்களிடம் விடைபெற்று மனதோடு மட்டும் கதைத்துக்கொண்டிருக்கிறேன்.
வெறிச்சோடிக்கிடந்தது வீடு. ஏன் என் மனதும்கூடத் தான். மலையோரப் பகுதி என்பதால் தென்றலின் அரவணைப்பில் எப்போதும் வீடு சில்லிட்டிருக்கும். சோகங்களைக் கூட சுகமாய் அனுபவிக்க வைக்கும் அந்தத் தென்றல் கூட அன்று சூடாய்ப் பட்டது.
அம்மாவின் முகத்தில் இனம்புரியாத சோகம். அடிக்கடி என்னை வந்து பார்ப்பதுமாய் போவதுமாய் இருந்தாள். விடியல் இல்லாத இரவாய் அந்த நாள் இருந்துவிடக்கூடாதா? எனக்கு போகப்பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவதா? பயமாயிருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்ற அபரிதமான எண்ணங்களும் மனதில் உதித்தன.
நிறைந்த கணமான நினைவுகளுடனும் அச்சம் கலந்த ஏக்கத்துடனும் அன்றைய நாள் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. உலகை இருள் ஆட்டிப்படைக்க இருளை நிசப்தம் தன்வப்படுத்தியிருந்தது. எனினும் வீட்டின் கடிகார முள் மட்டும் நிமிடத்துக்கு நிமிடம் நிசப்தத்தைக் களைத்து என் உயிரையும் தட்டிவிட்டுக்கொண்டிருந்தது.
அடிக்கடி எழுந்து பார்த்தபோதெல்லாம். அம்மாவும் என்னருகில்... உறங்காமல்…
அதிகாலை 2.45. அம்மாவின் சுமையான குரல் என்னை எழுப்பிவிட்டது.
அதற்குள் விடிந்துவிட்டதா?
அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாதவனாய் எழுந்துசெல்கிறேன்.
அப்பாவும் ஏதோ யோசித்த வண்ணம் சாலையில் உட்கார்ந்திருக்கிறார்.
கடன்களை முடித்துக் குளித்தபோது கண்ணீர் வழிந்து தண்ணீரோடு கரைந்து சென்றது.
நான் ஆயத்தமாகிவிட்டேன். அப்பா வாங்கித்தந்த உடை என்னை திடகாத்திரமாக காட்டியபோதும் மனது இன்னும் விடலைப் பக்குவத்திலேயே இருந்தது. என்னைத் தேற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தபோது அம்மா கணத்த பையைத் தந்தார். ஒரு மாதத்துக்குத் தேவையான உடை,சவர்க்காரம்,சீப்பு, எண்ணெய், ஊசி என அனைத்துமே இருந்தன.
எனக்குப் பிடித்த கறிவகைகளைச் சொல்லி “பிடிச்ச எல்லாமே சமைச்சு வச்சிருக்கிருக்கிறேன். மத்தியானத்தில் சாப்பிடுங்க” என்று முதல்நாள் இரவுக்குப் பிறகு இரண்டாவது வசனத்தைப் பேசினாள் அம்மா.
எப்படியிருக்க வேண்டும். எப்படிப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். எல்லாவற்றிலும் கவனம் தேவை. மேற்படிப்பு அவசியமானது. கவலைகள் வேண்டாம். பஸ்ஸில் மிதிபலகையில் செல்லவேண்டாம், யாருடனும் சண்டை போடக்கூடாது, கோயிலுக்கு அவசியமாக போக வேண்டும் என ஏகப்பட்ட விடயங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் அம்மா.
கடைக்குப் போகும்போது கூட அம்மா அப்பாவின் காலில் விழுந்துவணங்கிச்செல்லும் வழக்கம் எனக்கு உண்டு. அப்போது ஏற்படாத பதற்றம் அன்று எனக்கிருந்தது. அம்மாவின் பாதங்களில் விழுந்து வணங்கியபோது கண்ணீர் வடிந்தது. சுமார் இரண்டரை நிமிடம் வரை காலடியில் எழமுடியாமல் இருந்தபோது அம்மாவின் நடுங்கிய கரங்களால் என்னைத் தூக்கிகிவிட்டு கட்டியணைத்துக்கொண்டபோது அம்மா அழுத விதம் இன்னும் நினைவில் இருக்கிறது.
ஏன் நான் போகவேண்டும்? வீட்டிலேயே இருந்துவிடலாமே என உள்மனது சொல்ல அதனை அழுகையால் கட்டுப்படுத்தி அம்மாவின் அணைப்பிலிருந்து என்னைத் தவிர்த்து திரும்பியபோது அப்பா என் முகம்பார்க்க முடியாதவராய் அழுதுகொண்டிருந்தார்.
வார்த்தையில்லை. வேகமும் இல்லை. அப்பாவிடம் எப்படி விடைபெற்றேன் என்றே தெரியவில்லை. அதுவரை கதைக்காதவர் "கவனமாய் இருக்கனும் மகன்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிட்டார்.
4.15 மணிக்கு பஸ் புறப்படும்.
அவசரமாய்ச் செல்ல வேண்டும் என்பதால் முற்றத்து மல்லிகைச் செடியிடம் ஒரு பூவைக் கடன் வாங்கி கைக்குள் அடக்கிக்கொண்டு வீட்டை முழுவதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
அம்மா அப்போதும் அழுதுகொண்டிருந்தார்.
அப்பாவுடன் பஸ்நிலையத்துக்கு நடந்துவரும்போது நான் படித்த பரியோவான் பாடசாலை, மாரியம்மன் கோயில்,ரீச்சர் வீடு என எல்லாமே என் பழைய நினைவுகளை மீட்டி விடைகொடுப்பதாய் உணர்கிறேன்.
பஸ் வண்டி புறப்படுகிறது. இருளாய் இருந்த போதும் முடிந்தவரையில் ஊரை முழுமையாக பார்க்க எத்தனித்து அப்பாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவனாய் விடைபெறுகிறேன்.
அம்மாவிடம் பிடித்த சண்டைகள், அப்பாவுடன் கோபப்பட்ட விதம், குறும்பு விளையாட்டு, நண்பர்களின் அரட்டை, பள்ளிக்காலம், கோயில் விழாக்கள், விளையாடியது, விழுந்தது,மேடை நாடகங்கள்,கவிதைப்பரிசு என எல்லாமே ஒருகணம் மனதில் நிறைந்து மறைந்துபோகின்றன.
அப்போதைய பயணமும் வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான் என தேற்றியவாறு நேற்றைய களைப்பில் தூங்கிப்போகிறேன்.
மீண்டும் விழித்தபோது கதிரவனின் உதயம் என் கண்கூசச் செய்தது.
ஆம் ! நான் வேலைக்குப் போகிறேன்.
என் இலட்சியத்துக்காக நான் கொழும்புக்குப் போகிறேன் என்ற உணர்வு அப்போதுதான் என்னைத் தட்டியெழுப்பியது போன்று உணர்ந்தேன். அண்ணா அங்கு இருக்கிறார் என்ற ஆறுதல் என்னை கொழும்பு வரை கூட்டிவந்தது.
-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை
14 comments:
எப்படி இருக்கிறியள் நிர்ஷன்...
தளம் அதிரடியா இருக்கு...
நினைச்சா போய் பாக்க கூடிய மாதிரி இருக்கிற சூழலில் வீட்டை விட்டு பிரிவதே இவ்வளவு கஷ்டமாய் இருந்ததென்றால்......!?
மனதைத் தொட்டது பதிவு.
அன்புடன் அருணா
வணக்கம்
எனக்கும் பழைய ஞாபகங்கள் நினைப்பில் வந்தது . . .
உங்களுக்கு உங்கள் கிராமத்திலிருந்து கொழும்பு வந்தது மட்டும் தான் . . .
ஆனால் எனக்கோ . . .
சிறுவயதில் அளவெட்டி(யாழ்ப்பாணம்) எனும் அழகிய கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தது பின் யாழ் நகரிலிருந்து கொழும்பு வந்தது பின் கடல்கடந்து வந்தது எல்லாம் சங்கிலித்தொடராய் வந்தது . . .
// அப்போதைய பயணமும் வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான் என தேற்றியவாறு நேற்றைய களைப்பில் தூங்கிப்போகிறேன் //
என்பதற்கமையவே நானும்
ஞாபகங்களுடன்
மாயா
//King... said...
நினைச்சா போய் பாக்க கூடிய மாதிரி இருக்கிற சூழலில் வீட்டை விட்டு பிரிவதே இவ்வளவு கஷ்டமாய் இருந்ததென்றால்......!?
//
கிங்... எப்படியிருக்கிறீர்கள்? நலமா? நீண்டநாட்களுக்குப் பிறகு உங்கள் பெயரைப் பார்த்ததும் சந்தோஷமடைகிறேன்.
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிகிறது கிங். என்னதான் செய்வது?
//Aruna said...
மனதைத் தொட்டது பதிவு.
அன்புடன் அருணா
//
நன்றி அருணா.
//மாயா said...
வணக்கம்
எனக்கும் பழைய ஞாபகங்கள் நினைப்பில் வந்தது . . .
உங்களுக்கு உங்கள் கிராமத்திலிருந்து கொழும்பு வந்தது மட்டும் தான் . . .
ஆனால் எனக்கோ . . .
சிறுவயதில் அளவெட்டி(யாழ்ப்பாணம்) எனும் அழகிய கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தது பின் யாழ் நகரிலிருந்து கொழும்பு வந்தது பின் கடல்கடந்து வந்தது எல்லாம் சங்கிலித்தொடராய் வந்தது . . .
// அப்போதைய பயணமும் வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான் என தேற்றியவாறு நேற்றைய களைப்பில் தூங்கிப்போகிறேன் //
என்பதற்கமையவே நானும்
ஞாபகங்களுடன்
மாயா
//
வருகைக்கு நன்றி மாயா. உங்களைப் போன்ற பல யாழ் நண்பர்களின் அனுபவங்களை கேட்டிருக்கிறேன்.
எல்லாம் நன்மைக்கே என்பது மட்டுந்தான் ஆறுதலாக இருக்கும் மாயா.
வணக்கம் நிர்ஷன்.தளம் மிக அருமையாக இருக்கிறது.அழகு.
உங்கள் பழைய பதிவுகள் எல்லாம் அருமையானவைகள்.அவைகளைத் தொலைத்துவிட்டீர்களா?அநியாயம்.
உங்கள் சிறுகதையை 2- 3தடவைகள் இரண்டு நாட்களாக வாசிக்கிறேன்.
மனதின் பிரிவுப் பயணங்களை நினைவு படுத்தி கண்ணை நனைக்கிறது.எத்தனை தடவைகள் நான் பிரிவின் வேதனைகளை அனுபவித்திருக்கிறேன் நிர்ஷன்.
உங்களிடம் முன்பும் சொல்லியிருக்கிறேன்.என் இளமைக்காலம் இரத்தினபுரியில்தான்(டேனாக்கந்த)2003 ல் கடைசியாகப் போய் வந்தேன்.அன்றும் இதே நிலைதான்.இனிமேலும் ஒரு முறை இங்கு வருவேனா!நான் பிறந்து வளர்ந்த வீடு.எனக்காகவே பாதியாய் குறுக்கில் வெட்டப்பட்ட கதவு.பக்கத்து வீட்டுப் பாப்பையா,பாப்பாம்மா,
சின்னபாப்பா,பெரிய்பாப்பா,ஜெயா,காளிகோயில்,நான் அரிவரி படித்த பள்ளிக்கூடம் ம்ம்ம்....அப்போதே அந்த இடத்திலேயே உயிர் போனால் கூடச் சந்தோஷம்தான்.என்றாலும் வாழ்வு நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.நிறையப் பேசிவிட்டேன்.
சந்திப்போம் நிர்ஷன்.தொடருங்கள்.
வாருங்கள் ஹேமா,
பிரிவுகளின் போது இதுதான் வாழ்க்கையின் பாரம் என்பதா என உணர்ந்திருக்கிறோம்.
நீங்கள் இனி எப்போது இலங்கைக்கு வருவீர்கள்.
வந்தால் கட்டாயமாக இறக்குவானை வாருங்கள். நான் அழைத்துச்செல்கிறேன்.
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.
நான் இதனை விட மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தும் கூட ஏனோ "நினைவுகளின் சுவடுகள்" என்னை வெகுவாகக் கனத்தது.
அருமை நிர்ஷன் தொடருங்கள், வாழ்த்துக்கள்.
//களத்துமேடு said...
நான் இதனை விட மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தும் கூட ஏனோ "நினைவுகளின் சுவடுகள்" என்னை வெகுவாகக் கனத்தது.
அருமை நிர்ஷன் தொடருங்கள், வாழ்த்துக்கள்.
//
நன்றி களத்துமேடு.
உங்கள் தளம் பல்வேறு தகவல்களை வெளிக்கொண்டுவருகிறது.
பாராட்டுக்கள்.
வணக்கம் நிர்ஷன் உங்களுடை பதிவு நன்றாக இருக்கின்றது எனக்கும் மிகவும் பிடித்தவிடம் நீங்கள் இதில் சொன்னதில் நீங்கள் வெளியில் போகும் போது அம்மா அப்பா கால்களில் விழுந்து வனங்கி செல்வேன் என்று , அதில் இருந்து உங்களை பற்றி ஒன்று மற்றும் தெரிந்தது நீங்கள் உங்கள் உடைய அம்மா, அப்பா மீது மிகவும் பாசம் உள்ளவராக இருக்க வேண்டும் . ஏன் இந்த விடயம் என்னை பாதித்ததேன்றால் மலையக மக்களிடம் பாசம் என்பது அதிகமாக இருக்கும் இடம் , கொழும்பை பொருத்தவரை இதையேல்லாம் எதிர்பார்க்க முடியாது . அதற்காக கொழும்பில் உள்ளவர்களிடம் பாசம் இல்லையென்று சொல்லவில்லை . அவர்கள் இயந்திர மனிதர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் . என்ன நிர்ஷன் சொல்வது சரிதானே? ... கொழும்பில் வாழும் மனிதர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?...

Post a Comment