Todays Date:

நிவேதப்ரியா (०३)

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்।

--------------------------------------------------------------------------------------------------------
ஆமாம்!
யாருக்கும் சொல்லாமல் அவளை படிக்கத் தொடங்கினேன். தோழியரோடு சிரிப்பதை ரசிக்கத் தொடங்கினேன். என்னைப்போலவே அவளுக்கும் தனிமை ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்றாய் இருந்த பொழுதுகளில் அவள் அசைவுகளை மட்டும் தனியாக பிரதியெடுத்துக்கொண்டது மனம்.

அதெப்படி? எந்தவகையில் அவள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்? ஏன் நான் இப்படி காரணம் புரியாமல் அவள்மீது ஈர்ப்புக்கொள்கிறேன்?

அவளுக்கேயுரிய திறமை பெருஞ்செல்வம். அவள் அமைதி மற்றோர் மனதிலும் பேரமைதியை ஏற்படுத்துகிறாள்… உண்மையில் இயற்கையோடு உற்றுநோக்கி அதனை, ஒப்புவித்த முதல் பெண் பிரியா.

பொறுமை தான் நான் அவளிடத்தில் வியந்த முதல் குணம், நடத்தையிலும் பழக்கத்திலும் தூய்மையாக இருந்தாள், அவள் படிப்பும் ஈடுபாடும் உயர்வை நோக்கியதாகவே இருந்தன, மற்றோருக்கு உதவுவதிலும் பங்குகொள்வதிலும் பரந்த மனதை நிறைவாகத் தன்னகத்திருந்தாள், தீய நோக்கத்தோடு நெருங்குவோரை நொடிப்பொழுதில் மாற்றியமைத்தாள்.

நிலம் - பொறுமை
நீர் – தூய்மை
ஆகாயம் - உயர்வான சிந்தனைகள்
காற்று – பரந்த மனம்
தீ – தீயவற்றை அழித்தல்

(பெண்கள் பஞ்சபூதங்களுக்கும் ஒப்பானவர்கள் என சொல்லப்படுவதன் ஆத்மார்த்தம் இதுதான். இப்போதுள்ள எத்தனை பெண்களுக்கு இவற்றின் அர்த்தம் தெரியும்?)

அவள் அனைத்திலும் நிறைவானவள். ஏதோ ஓர் உறவுநிலையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை அவதானித்து அல்லது அவளோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பதை நான் அப்போதே முடிவுசெய்தேன்.
அவள் திரும்பிப்பார்ப்பாள் என செய்த குறும்புகள் ஏமாற்றத்தை தந்தன.

சாதாரண கற்பனையில் அனுமானிக்க முடியாதவளாயிருந்த அவளை என் சுயநலனுக்காகவன்றி விபரிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன்.

கறுப்பு வேலி
நிலையாமை நிலையானது என்பார்கள்। உண்மை தான்। இத்தனை நாளும் மனதோடு மணமாக இருந்தவள் எங்கோ மாயமாகியிருந்தாள்.

அடைமழையிலும் கதிர் வருமென காத்திருந்த மொட்டின் மீது இடிவிழுந்ததாய் மனம் சிதறிப்போனது.

இனிமேல் சந்திக்க முடியாது என்பதையும் கேட்டு அறிந்தபோது எனது வலிகளின் தாக்கத்தை வரிகளில் கூறிவிட முடியாது.

ஆகாய உயரத்துக்கு இருந்த பெருமலையொன்று அக்கினிச் சுவாலையாய் எரிந்து என்னை அணைத்துக்கொண்டது போல…

காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. எனக்கும் அவளுக்குமிடையிலான இடைவெளி பெருகாமலும் குறையாமலும் எனக்குள். ஆனால் அவள்???

எங்கோ சென்றிருந்த அவளை எப்படியோ கண்டுபிடித்த போது பாலைவனத்துக் கள்ளிச்செடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்வது போலிருந்தது எனக்கு.

அவள்... என்னை விட்டு வெகுதூரம் போயிருந்தாள். நினைக்கமுடியாதளவுக்குப் போயிருந்தாள்.
அவளுக்குள் ஏராளமான திறமைகள் கொட்டிக்கிடந்ததாய் ஏற்கனவே கூறியிருந்தேன். அவற்றை சரியாகப் பிரயோகித்திருந்தாள் போலும்.

காலம் சரியான மருந்து என்பார்கள். அந்தக் காலம்தான் அப்போது அவளுக்குள் காதலையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால்….

அது என்னோடல்ல….

என் காதலைச் சொல்லாதது எத்தனை தவறு? எனக்குள் பிரசவித்து முளைத்து பூத்துக் குலுங்கி,பூப்பெய்தி மணம் பரப்பிய காதலை எந்தத் தொட்டிலில் கொட்டுவது?
உயிரின் ஆழம்வரை ஆணிவேராய் ஆக்கிரமித்து உணர்வுகளுக்குள் வேர்பரப்பியிருந்த காதலை எந்தக் கத்தி கொண்டு அறுப்பது?

“முடியாது” என முரண்பிடிக்கும் மனதின் கொடூர வெப்பத்தை தாங்க முடியாத காதல்கனங்கள் கண்ணீராய் உருமாறி காணாமல் போயின.

அப்போது நிகழ்ந்தது எதிர்பாராத அவளுடைய சந்திப்பு. பத்து வருடங்களுக்குப் பிறகு….

(தொடர்ந்தும் பேசுவேன்)

9 comments:

Nimal said...

நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து.... தொடர்ந்து வாசிக்கிறேன்...

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி நிமல்.

உங்கள் ஆதரவும் வருகையும் சந்தோஷமளிக்கிறது.

கவிக்கிழவன் said...

அருமை அருமை தொடர்ந்து பேசுங்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி கவி.
உங்கள் ஆதரவோடு தொடரும்.

Anonymous said...

ohh so emotional... நிஜமா?

இறக்குவானை நிர்ஷன் said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...

ohh so emotional... நிஜமா?//

வேணாம். ஏன் இந்த கொல வெறி.

வருகைக்கு நன்றி தூயா.

Anonymous said...

KB,

Un Eluthukal eppothum pramatham than.

Unnai sutri nadapavai ellamey inimaiyana sambavangalai than arambikindrana. anal mudivil avai maratha vaduvai tharuvathagave ullathu.

கவி said...

சிறந்த எழுத்தாளனுக்கு கிடைக்கும் ஒரே வெகுமதி அவனுக்கு இருக்கும் வாசகர்களும் அவர்களின் விமர்சனங்களும் தான், அவைகளை ஏற்க மறுக்கும் எழுத்தாளன் முதலில் தான் தன்னை பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்

இறக்குவானை நிர்ஷன் said...

// கவி said...

சிறந்த எழுத்தாளனுக்கு கிடைக்கும் ஒரே வெகுமதி அவனுக்கு இருக்கும் வாசகர்களும் அவர்களின் விமர்சனங்களும் தான், அவைகளை ஏற்க மறுக்கும் எழுத்தாளன் முதலில் தான் தன்னை பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்//

வருகைக்கு நன்றி கவி.

ஆனால் உங்கள் கருத்து என்னோடு தொடர்புபட்டதுதானா அல்லது இந்த தொடருடன் சம்பந்தப்பட்டதுதானா என்பது எனக்கு விளங்கவில்லை. இது எனக்கான பின்னு}ட்டமா? இல்லை....???