Todays Date:

நிவேதப்ரியா (02)

"சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது. சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்"

------------------------------------------------------------


1996.

நான் இயற்கையை முழுமையாக ரசிக்கத் தொடங்கிய காலம் । இயற்கைக்கும் மனிதனுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை தனிமையில் பலதடவைகள் சிந்தித்திருக்கிறேன்.

நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பதை தோண்டித் தோண்டிப் பார்த்த ஆவல்மிக்க அந்திநேரங்களை மறக்க முடியாது.

அதிகாலைச் சூரியன், சில்லென்ற காற்று, காட்டுச் சேவலின்கூவல், வீட்டுக்கு நேரேயிருந்த மலைமுகடு, அங்கு ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட காட்டு மரங்கள், புறாக்கூடு, உச்சியிலிருந்து பார்த்தால் தெரியும் அம்மன்கோயில், புல்வெளியற்ற மைதானம், தென்னைமரத்தடி, நிலாச்சாரல் என இன்னும் எத்தனையோ ஆலாபனைகள் என்னை இயற்கையின் மடியோடு கண்ணிமைக்கச் செய்திருந்தன.

மனிதனுக்கு பெருஞ்செல்வத்தையும் பேரமைதியையும் தருவதில் இயற்கை தவிர்ந்த பெருங்கொடை வேறெதுவும் இல்லை.

காலம் தள்ளிப்போய் முதல் பருவங்களை கடந்தபோதுதான் அறிந்தேன். இந்த இயற்கைக்கும் “பெண்” என்ற படைப்புக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்பதை.

அதுவும் பள்ளிப்பருவத்தில்…

பெண்ணுக்குள் பெருஞ் செல்வம் அடங்கியிருக்கிறது. அதைக்கொண்டு அவளால் பேரமைதியைத் தரமுடியும்.

1997.

“பிரியா”
பள்ளியில் அவளுக்குத்தான் முதலிடம். அவளருகில் நிற்பதற்குக் கூட போட்டிபோட்ட நாட்கள்…. திறமையும் ஆளுமையும் கடவுள்கொடுத்த கொடை.
அதற்கும் மேலாக…. அவள் அழகு!

மேல்நெற்றியும் அதன்மேல் படர்ந்து களைந்த முடியும் அவள் அழகை மேலும் அழகுபடுத்தின.
அப்போதிலிருந்தே அவள் கண்கள் ஒரு கவிதை।
தன் நயனங்கள் ஒவ்வொன்றிலும் நுட்பம் இருப்பதாய் உணர்த்தும் நிலைக்கு அவளே சாட்சியும் அத்தாட்சியும்।

அவள் பார்வையின் வீச்சு, என் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது। உதடுகள்பேசுகையில் அதன் அர்த்தங்களை கண்களால் சொல்லும் அதிசயத் திறன் அவளுக்கு।

பிரியாவின் அசைவுகளும் ரசனைமிக்கன. வெறுமையுற்ற பொழுதுகளில் அவளை கவிதையாகக் கீறி மனதில் செதுக்கிக்கொண்டேன்.

சிற்பம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் நடனம்தான் முதலில் பிறந்தது என்பது வழக்கு. முற்காலங்களில் பெண்களின் நர்த்தனங்களை ஒவ்வொரு வடிவமாகவும் நிலையாகவும் ஓவியமாக வரைந்துகொள்வோர் அதனைப் பார்த்து சிற்பங்களை செதுக்கியதாக கூறப்படுவதுண்டு.

சிற்பங்களின் நுட்பங்கள் எழுதப்படாத காலங்களில் இவ்வாறிருந்ததாக சிவகாமியின் சபதம் கூறுகிறது। சிவகாமியின் நடனத் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயனச் சிற்பியார் ஒவ்வொரு பரிணாமங்களில், பல்வேறு விதமாக சிவகாமியை ஆடச்சொல்லி பார்த்துக்கொண்டிருப்பாராம். பின்னர் தனக்கு பிடித்த அசைவில் நிற்கச் சொல்லி அதை சித்திரமாகக் கீறி பின் அதை சிற்பமாக வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அசைவுகளால் வசியச்செய்யும் அவள், அவளுக்கே தெரியாமல் என்னுள் சிற்பமாகிக்கொண்டிருந்தாள்.

"வானம் அந்திப்படும்பொழுதிலும்
உன் வருகை எனக்கு விடியலைத் தருகிறது

எதேச்சையாகக்கூட பார்க்கமாட்டாயா?
காதல் விமோசனத்துக்காக எத்தனை நாள் காத்திருப்பது?

இந்த விடலை நினைவுகள் விதையாக்கப்படுமானால்
வளர்ந்த பின் விருட்சத்தை எப்படி வீழ்த்துவாய்?

காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"

இவை,அவள் நினைவுகளால் என்குள் பிரவித்தவை.

அவள்மீது காதல் கொள்ளவில்லை. மாறாக ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்குள் இருப்பதாயும்
அது அன்பின் நிலைகள் எல்லாவற்றையும் தாண்டியதாயும் உணர்ந்தேன்.

அமைதியில் அமைதி இருக்கிறதென்பார்கள். தியானத்துக்காக கடவுள் சிலைகளை பார்த்திருப்பதன் யதார்த்தம் இதுதான். அமைதியிலிருந்துதான் அமைதி கிடைக்கிறது என ஓஷோ சொல்லியிருக்கிறார்.
"இல்லாததிலிருந்து உள்ளது தோன்றாது. உள்ளதிலிருந்து தான் உள்ளது தோன்றும்" என்கிறது சித்தாந்தம். அவள் அமைதியிலிருந்து எனக்கும் அமைதி பிறந்தது.

அவள் அதிகமாகப் பார்த்த இடம் அவளுடைய பெருவிரலாகத் தான் இருக்க முடியும்.

மனதின் மையப்புள்ளிகளை அறியமுடியவதில்லை. ஆழமான சோகத்திலும் அளவுக்கதிகமான சந்தோஷத்திலும் நிறைவாக மனம் களித்திருக்கும் வேளையில் எந்தச் செயல்கள் செய்தாலும் அந்த சோகமோ சந்தோஷமோ மனதின் ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து நம்மை வளப்படுத்துவதாய் உணர்ந்திருப்போம். அது அதிகமாய் உணரப்படுவதற்கு சிரமமானது.

அவளைப் பார்த்த பல பொழுதுகளில் அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நான் வாழ்ந்த காலங்கள்.
(தொடர்ந்து பேசுவேன்)

விரிவாக படிக்க ……..

“நிவேதப்ரியா” (01)


பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை. சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட, பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான் -

நிவேதன் எழுதத் தொடங்கிய வரிகள் இவை...

நிவேதன் - கொஞ்சம் அறிவோடு பேசுவதற்காகவே படைக்கப்பட்டவன் என பலர் சொல்வதுண்டு. நிவேதம் என்பதற்கு படைத்தல்,கொடுத்தல் என தமிழில் பொருளுண்டு. இது ஓர் உன்னதமான சொல்.
மனிதனுக்கு படைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் உணவு, சாப்பாடு என்கிறோம். அதனையே கடவுளுக்கு செய்தால் அதனை நிவேதனம் என்கிறோம்.
நிவேதனும் அவ்வாறுதான். படித்தது கொஞ்சமாயினும் கொடுத்தது அதிகம். அதாவது உழைப்பாளி. அப்படியென்றால் பிறருடைய சந்தோசத்துக்காக எதையும் செய்யக்கூடிய உழைப்பாளி.

நிவேதனுக்கு வயது 25. எழுத்தாளன்.

சோகங்களை, யாரிடமும் சொல்லமுடியாத வேதனைகளை எழுத்தில் வடித்து கிழித்துவிடுவது அவனுடைய வழக்கம். அப்படி அவன் எழுதிக் கிழித்தது ஏராளம்.

பண்டைய கிரேக்கர்கள் இவ்வாறானதொரு முறையை கையாண்டதாக கூறுவதுண்டு. அதாவது தமது பிரச்சினைகளை எழுதிக் கிழித்து ஆற்றிலோ அல்லது இனி தேடினாலும் அந்தக் கிழிஞ்சல்களை அண்டமுடியாத இடத்தில் போட்டுவிடுவர். அப்போது அந்த வேதனைகள் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போதும் பல சமயத்தவர்கள் நேர்த்திக் கடன் என செய்வதில் உள்ள உள்ளாந்த அர்த்தமும் இதுதான் எனத் தெரிகிறது.

பிரியா - இவள் மனைவியாகிவிடமாட்டாளா என ஏங்கிய கூட்டம் ஏராளம். மானிறம், கருவிழிகள், ஒருபுறம் குழிவிழும் மெத்தென்ற கன்னம், பலமடங்கு பள்ளத்தில் விழுந்தாலும் நேர்த்தி மாறாத காட்டாற்றுக்கூந்தல், மெல்லிடை, மேகமேனி என அவள் ஒரு காவியமாகத் திகழ்ந்தாள்.
உதயகாலப் பொழுதொன்றில் வெண்தேவதைகள் இணைந்து செதுக்கிய சிற்பம்போலானவளுக்கு அறிவும் திறமையும் ஆழமாய் நிறைந்திருந்தன. சிந்தனை, பேச்சு, நடத்தை அனைத்திலும் அவள் பாங்கும் பாணியும் தனியானவை. (நிவேதனின் எழுத்துகளில் பிரியா வரையப்பட்டிருக்கிறாள் என்பதற்காக இங்கு அதிகம் தரப்படவில்லை)

ஆண், பெண் என்றாலே அநேகர் பார்வையில் முதலில் தெரிவது “காதல்” என்பதுதான். இவர்கள் இருவரும் எப்படித் தொடர்புபடுகிறார்கள்? எவ்வாறு வாழ்வோட்டத்தில் கலக்கிறார்கள்? இதற்கும் சோக சம்பவங்களை கிழித்துவிடுவதற்கும் என்ன தொடர்பு? – நிவேதனின் வரிகள் தொடர்கின்றன…

பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை। சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான்.

சுகம் தான் வேதனைகளாக பரிணாமம் கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை எந்தச் சோகத்தையும் இவ்வளவு நேர்த்தியாக எழுதி நான் கிழித்ததில்லை. ஆனால் இதனை நிறைமனதோடு எழுதுகிறேன். ஏனென்றால் காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு பற்றி மனதுக்குள் ஊன்றிப்போனதை என் எழுத்துக்களால் மீட்டெடுக்கிறேன். மறக்க முடியாத பாழ்ய நினைவுகளுக்குள் மங்காத நினைவுகளாய் இன்னும் தொடரும் பலவற்றை கோர்த்துவிடுகிறேன். இங்குவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பிரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆனால்…. இதுவும் கிழிக்கப்படவேண்டியது.

(தொடர்ந்தும் பேசுவான்)

விரிவாக படிக்க ……..

"வேலை இல்லாதவேளை"


என் கறுப்புவானத்தை
ஊடறுக்கும்
வலிக்கும் தென்றல்!

மனவெளியெங்கும்
நெருப்பு சுவாசம்!

கறைபடிந்த பார்வைக்கோலங்களில்
குழிநிறைந்த தடயங்கள்!

தொட்டதெல்லாம் பட்டுப்போவதாய்
எண்ணங்கள்
விட்டுப்போகாமல் தொடரும்
துன்பங்கள்

இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்

உதவிக்கு அழைப்பதாயெண்ணி
தொலைபேசியை
புறக்கணிப்பவர்கள்
மறுபக்கம்

"வேலை இல்லையாமே"
கிண்டல் பேச்சுடன்
இன்னொரு கூட்டம்

"எப்படி இருந்தாய்?"
இறந்ததை
நினைவூட்டும்
எதிர்வீட்டின் சாட்டம்

"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்

“சனி நேரம்
கூடாத காலம்”
எதிர்பார்ப்புகளை சிதைக்கும்
வார்த்தைகளும் தாராளம்

மறுவேளை உணவுக்கு
மண்டியிட முடியாமல்
தடுக்கும்
தன்மானம்

“நம்பவைத்துக் கழுத்தறுத்தானே”
- ஈசனைத்தூற்றியழும்
மனோபாவம்

வேலை இல்லாதவேளை -
உணர்தலுடன்
ஒரு புரிதல்

இல்லாதவொன்றுக்கு
எல்லாவற்றையும்
காணிக்கைபடுத்திப்பார்த்திருக்கிறேன்
காலச்சுவடு
காயங்களை
ஆற்றுப்படுத்தும்வரை..!

-ஆர்.நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

விரிவாக படிக்க ……..