காதல் ஓவியம்






(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)
சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொண்டுவரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
ஆலயங்களில் பூஜை செய்யும் ஆசாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?
மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?
ஒரு பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.
கொழும்பில் பெரிதாகப் பிரபலமில்லாத ஆனால் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது.
உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.
“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி…..
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?
சமப்ரப….
நிர்விக்னம்
இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ.
குருமே தேவ
நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ
சர்வ கார்யேஷ் ஷர்வதா”
சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.
ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?
எனக் கேட்கத் தோன்றும்.
இளம் பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.
என்ன செய்வது? கடவுளே பொறுத்துக்கொண்டிருக்கும் போது நாம் எம்மாத்திரம் என விலகிவிடுவேன்.
ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.
நாட்டிலும் நியாயமில்லை.வீட்டிலும் நியாயமில்லை. எனக் கோயிலுக்கு செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் தான் என்ன?


நந்தி



நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…
ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ
கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா
எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா
பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா
உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா
இத்தனைக்கும் மத்தியில்…
நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…
மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!
-இராமானுஜம் நிர்ஷன்
(தங்கை துர்காவின் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவிட்டுள்ளேன்)
nirshan கவிதை, சிறுமி, தனிமை, பள்ளிப் பாடம், மலையகம், வாத்தியார் comments (5)