Todays Date:

#VOPL2013: அனைவருக்கும் நன்றி

இலங்கையில் தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி எமது கிரிக்கெட் போட்டியின் வாயிலாக சாத்தியமாகியது. உண்மையில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் கடந்த சனிக்கிழமையும் உள்வாங்கப்பட்டுக்கொண்டது.

பதிவர்கள் என்றால் கண்டதையும் கேட்டதையும் எழுதித் தீர்க்கும் வேலையற்றவர்கள் என ஆரம்ப காலங்களில் பலராலும் நாம் பார்க்கப்பட்டு வந்தோம். காலம் செல்லச் செல்ல இணைய வெளியில் பதிவர்களின் வருகையும் அவர்களால் முன்வைக்கப்பட்ட காத்திரமான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகவியலின் தாக்கம், அசாத்திய வளர்ச்சி காரணமாக இணைய எழுத்துலகின் தவிர்க்க முடியாத பங்காளர்களாக மாற்றமடைந்தார்கள்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு, சந்திப்புகள், போட்டிகள் என அடிக்கடி நடத்தப்பட்டாலும் கூட இலங்கையில் ஏனோ அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தான் அன்புக்குரிய சகோதரர் புருஜோத்தமன் டுவிட்டரில் வீரகேசரியோடு கிரிக்கெட் விளையாடலாமே என அன்பான அழைப்பினை விடுத்திருந்தார். அதனை சகோதரர் மயூரன் பெரியும் ஆமோதித்திருந்தார்.
சரி முயற்சித்துப்பார்க்கலாம் என அப்போது பதிலளித்திருந்தேன்.

அதற்குப் பின்னர் எமது செய்திக்குழுவோடு சிறு கலந்துரையாடலுக்குப் பின்னர் முகாமைத்துவத்துடன் பேசிய போது உடனே அனுமதி கிடைத்தது. முழுச் செலவையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்ற இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் அடுத்த கட்ட நகர்விற்கு தயாரானோம்.

கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு கோரினோம். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் எமது விதிமுறைகளுக்கு அமைவாக பதிவர்களை இணைத்துக்கொண்டோம்.

ஒரு சில பதிவர்கள் எம்மோடு முரண்பட்டுக்கொண்டார்கள். நாம் யாழ்ப்பாணத்தில் போட்டி வைக்கவில்லை என்றும் பிரதேசவாதம் பார்ப்பதாகவும் சமூக இணையங்களில் எழுதினார்கள்.

நான் அவற்றுக்கு தனிப்பட்ட ரீதியில் பதில் அளித்திருந்தேன்.

அதன்பிறகு மூன்று அணிகளுக்கும் பெயர்களை வைத்தோம். அதன்போது சிலர் பெயர்கள் பொருத்தமற்றவை என எழுதினார்கள்.

இலங்கையில் பேஸ்புக்,டுவிட்டர்,யுடியுப் ஆகிய தளங்களையே அதிகமானோர் உபயோகிப்பதால் நாம் அதற்கேற்றவாறு பெயர் வைத்தோம் என்று சொல்லியும் அதை அவர்கள் கேட்கவில்லை.

அதில் கவலையான விடயம் என்னவென்றால் என்னோடு நெருங்கிப் பழகுபவர்களும் எமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைதான்.
தொடர்ச்சியாக நாம் எமது உள்ளக சந்திப்புகளை மேற்கொண்டோம். காத்திரமான திட்டமொன்றை தீட்டினோம்.

போட்டிக்கான ஏற்பாடு, விண்ணப்பதாரர்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பினை ஏற்படுத்தல் போன்ற பிரதான பொறுப்புகளை தம்பி கவிந்தன் நேர்த்தியாக முடித்துக்கொண்டிருந்தார்.

மறுபுறம் வெளிவேலைகள், திட்டமிடல்கள் அனைத்தும் தினேஷ் பொறுப்பாக நின்று கவனித்துக்கொண்டார். உள்ளக விடயங்கள், செய்தியாக்கம், விளம்பரம் ஆகிய விடயங்களை தம்பிமார்களான லூசியும் சின்ன பிரசன்னாவும், தர்ஷனும் கவனித்துக்கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய பொறுப்பில் கவனமாக இருந்ததால் எனக்கு வேலை இருக்கவில்லை.

போட்டிக்கான திகதியை நிர்ணயித்து நாள் நெருங்க நெருங்க எமக்குள் பயமும் தொற்றிக்கொண்டது.

போட்டிக்கு முதல்நாள் மழை...தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது. எமக்கு பதிவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமே இருந்தன. எனினும் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என நாம் தீர்மானித்திருந்தோம்.
எமது ஏற்பாட்டுக்குழுவுடன் சின்ன கலந்துரையாடலுக்கு அழைத்து அவரவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைத்தோம்.

அடுத்தநாள் விடியல்.. காலை 4 மணி. மழை வருமோ என்ற அச்சத்தில் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டிருந்த எனக்கு அதிகாலையிலேயே விழுந்தது இடி.

ஆம்..அவிசாவளையில் அடை மழை. இறைவனை நொந்துகொண்டு பிரசன்னாவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

தம்பி கொழும்பில் மழையா?
இலேசான தூரல் அண்ணா.. என்ன செய்வோம்?
பார்க்கலாம் என்று அழைப்பினை துண்டித்தேன்.

அடுத்ததாக நாம் போட்டி நடத்தும் மலே மைதானத்துக்கு அருகில் வசிக்கும் தினேஷ{க்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.

மூன்று மணியளவில் மழை பெய்தது. இப்போது மழை இல்லை. நீங்கள் தைரியமாக வாருங்கள். கடவுள் எம் பக்கம்தான் என்றார்.

கொட்டும் மழையிலும் காலை 4.40 மணிக்கு பஸ் எடுத்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். விடியவில்லை, இலேசான தூரல் இருந்தது.

லூசியஸ், தர்ஷன், பிரசன்னா, சுகிர்தனுடன் மைதானத்துக்கு சென்று வேலைகளை கவனித்தோம்.

போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த கவிந்தன் அலுவலகத்தில் இருந்து செய்தி தரவேற்றங்களை கவனித்துக்கொண்டார்.

மழை வரும் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தபோதிலும் பின்னர் மாற்றமடைந்தது.

அதிக வெயிலும் இல்லை, மழையும் இல்லை. போட்டி திட்டமிட்டபடி நேர்த்தியாக நடைபெற்ற முடிந்தது.

வீரகேசரி இணையத்தளத்தின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பானவன் என்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களான ருசெய்க், வினோத், விநோதன், சுபா, ஷாரா, கமல், கஜன், ரிசாத், சுகிதரன், சுவேன், பிரஷாந்தன் ஆகியோர் திறம்பட தத்தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார்கள்.

இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்போடும் நாம் வெற்றிகண்டோம்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள். ஒருசிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தராத போதிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

சிரமம் பாராது வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமக்குத் தெரியாமல் ஏதாவது குறைகள் இடம்பெற்றிருக்கலாம் எனினும் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாவண்ணம் சிறப்பாக செயற்படுவோம் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் ஏற்பாடு செய்த பதிவர் ஒன்றுகூடலில் பெண் வலைப்பதிவாளர்களை இணைத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் அவர்களுக்காகவும் நாம் செயற்பட எண்ணியுள்ளோம். அத்தோடு அடுத்த வரும் இவ்வாறானதொரு போட்டியை வெளி மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் எண்ணம் கொண்டுள்ளேன்.

காலநிலை உட்பட அனைத்து விடயங்களுமே எமக்கு சாதகமாக அமைந்திருந்தது. இறைவனுக்கு நன்றி. ஏற்பாட்டுக்கு அனுமதியளித்து எம்மை வழிநடத்திய நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு நன்றி.
வெற்றிகரமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளும் வணக்கங்களும்.

-அன்புடன்
இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!




ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.

ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.

கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.

சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.

சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.



சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?

சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?

இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?

குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?

சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?

ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.

வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். 


நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.

எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

'நண்பன்' ஒரு பார்வை

சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நண்பன்| திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஷங்கர் என்ற பிரமாண்டத்தின் இயக்கம், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, ஹரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி ஆகிய திறமைசாலிகளின் பங்களிப்பு, ஹிந்தியில் மாபெரும் வெற்றியைத் தந்த 3 இடியட்ஸின் ரீமேக் ஆகியன சினியுலகை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு இட்டுச்சென்றிருந்தன.

அமைதியாக ஆரம்பமாகிறது படம். திரையில் விஜய், இலியானா, ஷங்கரின் பெயர்கள் தெரியும்போது ரசிகர்களின் கூச்சல் அரங்கை அதிர வைக்கிறது.

தமிழகத்தின் முதற்தர பொறியியல் கல்லூரியில் ஜீவா (சேவல்கொடி செந்தில்), ஸ்ரீகாந்த்(வெங்கட் இராமகிருஷ்ணன்) நண்பர்களாகின்றனர். இவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்து படிக்கும் விஜய் (பஞ்சவன் பாரிவேந்தன்) மூன்றாவது நண்பராக இணைந்து கொள்கிறார். கல்லூரியின் அதிபர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரது மகள் இலியானா (ரியா–வைத்தியர்).

கல்லூரியில் அவ்வப்போது இடம்பெறும் குறும்புச் செயல்கள், சில சோகம் நிறைந்த காட்சிகள், விஜய் - இலியானா சந்திப்பு என கலகலப்பாக நகர்கிறது கதை.

எல்லாம் நன்மைக்கே| என்ற கருப்பொருளை தன்னகத்தே கொண்டு அதனை தன் நண்பர்களுக்கு மத்தியிலும் விதைக்கிறார் விஜய். கல்லூரி அதிபரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டு தூற்றப்பட்டாலும் முதல்நிலை மாணவன் என்ற பெயரை விஜையே தன்வசப்படுத்திக் கொள்கிறார்.

பட்டம் பெற்ற பின்னர் யாருக்கும் சொல்லாமல் நண்பர்களைப் பிரிந்து செல்கிறார் விஜய்.
நண்பனைத் தேடிச் செல்லும் ஜீவா, ஸ்ரீகாந்த் விஜையை கண்டுபிடித்தார்களா? விஜய் - இலியானாவின் காதல் என்னவானது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது திரைக்கதை.

ரீமேக் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஹிந்திப் படத்திலிருந்து விலகி விடாமலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வும் சுவாரஸ்யம் குறையாமல் கதையமைத்ததில் ஷங்கருக்கு ஒரு 'சபாஷ்' போடலாம்.

கதையின் ஆரம்பம் கல்லூரிக் கால குறும்புகளோடு நகர்கிறது. தமிழுக்கு ஏற்றாற் போல் சத்யராஜ் ஓரிரு இடங்களில் தனக்குரிய தனித்துவத்தை நிரூபிக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த் முழுமையாக கதையுடன் ஒன்றிப்போகிறார்கள். ஸ்ரீகாந்த் தனது ஆசையைப் பெற்றோரிடம் விளக்கும்போது வெளிப்படுத்தும் அளவான நடிப்புத் திறனை பாராட்டத்தான் வேண்டும். அதேபோன்று ஜீவா தனது தந்தையின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையில் தெரிந்துகொண்டதும் கண் கலங்கும் காட்சி திரையரங்கை மௌனமாக்குகிறது.

ஸ்ரீவத்சன் (சைலன்சர்) எனும் கதாப்பாத்திரத்தில் சத்யன் கச்சிதமாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். (இனி வாய்ப்புகள் அதிகரிக்க இடமுண்டு). விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் இணைந்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்து.

இலியானா! அடடா... இந்த இடையை இவ்வளவு நாள் திரையில் பார்க்கவில்லையே என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியவராக ஜொலிக்கிறார். எனினும் ஒருசில இடங்களில் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்த முயன்று தோற்றுப்போவதாகத்தான் தோன்றுகிறது.
வேறொருவருக்கு பட்டம் பெற்றுக்கொடுப்பதற்காக அவரது பெயரில் கல்வி கற்பதற்காக வந்தவரே விஜய் என்பதை நண்பர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தோன்றும். (3 இடியட்ஸ் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாது).

அந்தக் கட்டத்தில் கௌரவ வேடமேற்கும் எஸ்.ஜே.சூர்யாவும் தன் பங்குக்குத் திறமையைக் காட்டியிருக்கிறார்.

இலியானாவின் சகோதரிக்குப் பிரசவம் பார்க்கும் காட்சிகள் பரபரப்பையும் சோகத்தையும் உண்டுபண்ணுகின்றன. இப்படியொரு காட்சி அவசியம்தானா எனவும் சிந்திக்கத் தோன்றும். ஏனென்றால், ''நீதான் பிரசவம் பார்க்க வேண்டும்' என இலியானா கூறியதும் அலறுகிறார் சகோதரி. அது மரண ஓலமாய் ஒலித்து மனதைக் கீறுகிறது.

பாடல்களில், 'என் பிரண்டப் போல யாரு மச்சான்....' மற்றும் 'அஸ்கு லஸ்கா ....' பாடலும் மனதில் நிறைகின்றன. ஏனைய பாடல்களும் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றே சொல்லலாம்.
சரி, விஜய் என்ற தளபதியைப் பற்றிப் பார்த்தால், 

அடிதடி சண்டைகள் எதுவுமில்லாமல் அடக்கமாக வலம் வருகிறார். படம் முழுவதும் விஜையைச் சுற்றியே நகர்கிறது. வழமையான உதட்டோரச் சிரிப்பு ஓரிரு இடங்களில் வெளிப்படுகிறது. போதைக் காட்சியில் இயல்பான நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்தமை தெரிகிறது. அதேபோன்று ஒரு சில இடங்களில் கல்லூரி மாணவனாக பொருந்தாமல் போனாலும் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வழமையான விஜய் படங்களை விட மாறுபட்டிருக்கிறது.

ஷங்கர் என்ற சிற்பி நல்ல கதாப்பாத்திரங்களுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஷங்கரின் இதுவரையான படங்களைப் பார்த்து ரசித்து மாற்றங்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ரீமேக் படம் புதிதாக எதுவுமின்றி வெளிவந்துள்ளமை கவலையை உண்டுபண்ணிருக்கலாம். ஆயினும் பாடல் காட்சிகளில் தன் தனித்தன்மையைக் கொண்டுவந்திருக்கிறார்.

ஹிந்தியில் 3 இடியட்ஸ் பார்த்தவர்களுக்கு நண்பன் கொஞ்சம் பழையதாகத் தெரிந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கிறது. ஏனெனில் கதையின் நகர்விலும் சுவாரஸ்யத்திலும் எதிர்பார்ப்பிலும் எந்தக் குறையையும் ஷங்கர் வைக்கவில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

ஒரு நீண்ட பயணத்தின் கதை

“எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்” என்கிறார் துறவி இந்திரானந்த.

தெற்கிலிருந்து வடக்குக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வுகூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன.

“நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வருகிறேன். உலகத்தில் எது உண்மையானது, எது நிரந்தரமானது என்பதை அறிந்துகொண்ட போதுதான் துறவறத்தின் மகிமை புரிந்தது.

1974ஆம் ஆண்டு முழுமையாகத் துறவறம் பூண்டு 1981ஆம் ஆண்டுமுதல் தனிமையில் தியானம் செய்துவருகிறேன். யால, குமன போன்ற காடுகளிலும் ஆற்றுக்கரைகளிலும் தியானம் செய்தேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நாகதீபத்தை அடையவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வழியில் யாழ்ப்பாணத்தின் வணக்கஸ்தலங்களைப் பார்க்கவேண்டும் என எண்ணினேன். சில வேளைகளில் இது கடவுளின் கட்டளையாகக் கூட இருக்கலாம்.

கால்நடையாக வரும்போது இயற்கையின் பாதிப்புகள் நிறைய இருந்தன. எனினும் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தம்புளை காட்டுவழியே நான் தனியாக வரும்பொழுது கடவுளை மட்டுமே துணைக்கு அழைத்துக்கொண்டேன். பௌத்த விகாரைகளிலும், இந்துக் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பள்ளிவாயில்களிலும் தங்கினேன். சில நாட்கள் சுடுகாடுகளிலும் தங்கியிருந்தேன். என்னைத் தீய சக்திகள் அண்டாதவண்ணம் தியானம் செய்தேன்” என சாந்தமாகக் கூறுகையில் அவருடைய கண்களில் பயணத்தின் அபாயம் தெரிந்தது.

“நான் புறப்படும்போது கையில் பணம் இருக்கவில்லை. வழியெங்கும் பிச்சை எடுத்து உண்டு வந்தேன்.

கால்நடையாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைய இரண்டரை மாதங்கள் சென்றன. வள்ளிபுரம், செல்வச் சந்திநிதி, நல்லூர் உட்பட அனைத்துக் கோயில்களுக்கும் யாத்திரை மேற்கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்டது யாழ்ப்பாணம். புதுமையான பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. தெற்கிலுள்ளவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து அறிவதில்லை. அத்துடன் இங்குள்ள ஒவ்வொரு வணக்கஸ்தலங்களும் அபூர்வ சக்தியுடையன. அதனை என்னால் உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்து மக்கள் பண்பாடு தெரிந்தவர்கள். என்னோடு அன்பாகப் பேசிப் பழகினார்கள். அவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் அமையவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என சாந்தமாகக் கூறி முடித்தார்.

கையில் பிச்சைப் பாத்திரத்துடனும் கமண்டலத்துடனும் அதிகம் பேசாதவராய் இருந்த அந்தத் துறவி தன் மனதில் தோன்றிய மேலும் சில விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். அவை ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தன.

“2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு பேரழிவொன்று ஏற்படும். அது ஏதோ ஒரு சக்தியால் நிகழும். என்னால் அதை ஊகிக்க முடிகிறது.

கடும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்கள். நான்கு இடங்களில் எரிமலைகள் உருவாகும். அது மேலும் அழிவை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட துர்விடயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அதன் பிறகு 700 ஆண்டுகள் நாட்டுக்கு நல்லதாக அமையும். எனினும் பெண்கள் ஆட்சியாகவே இருக்கும். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் விகிதாசரம் குறையும்.



அந்த 700 ஆண்டுகள் கழிந்த பின்னர் தர்மத்துடன் ஆட்சியமைக்கக் கூடிய மன்னன் ஒருவன் வருவான். அவனுடைய ஆட்சியில் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வார்கள். என்னுடைய தியான சக்தியினால் நான் கண்ட விடயங்கள் இவை. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நான் கூறியிருக்கிறேன்” எனக் கூறி எமக்கு நன்றி தெரிவித்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..