Todays Date:

ஒரு நீண்ட பயணத்தின் கதை

“எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்” என்கிறார் துறவி இந்திரானந்த.

தெற்கிலிருந்து வடக்குக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வுகூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன.

“நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வருகிறேன். உலகத்தில் எது உண்மையானது, எது நிரந்தரமானது என்பதை அறிந்துகொண்ட போதுதான் துறவறத்தின் மகிமை புரிந்தது.

1974ஆம் ஆண்டு முழுமையாகத் துறவறம் பூண்டு 1981ஆம் ஆண்டுமுதல் தனிமையில் தியானம் செய்துவருகிறேன். யால, குமன போன்ற காடுகளிலும் ஆற்றுக்கரைகளிலும் தியானம் செய்தேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நாகதீபத்தை அடையவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வழியில் யாழ்ப்பாணத்தின் வணக்கஸ்தலங்களைப் பார்க்கவேண்டும் என எண்ணினேன். சில வேளைகளில் இது கடவுளின் கட்டளையாகக் கூட இருக்கலாம்.

கால்நடையாக வரும்போது இயற்கையின் பாதிப்புகள் நிறைய இருந்தன. எனினும் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தம்புளை காட்டுவழியே நான் தனியாக வரும்பொழுது கடவுளை மட்டுமே துணைக்கு அழைத்துக்கொண்டேன். பௌத்த விகாரைகளிலும், இந்துக் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பள்ளிவாயில்களிலும் தங்கினேன். சில நாட்கள் சுடுகாடுகளிலும் தங்கியிருந்தேன். என்னைத் தீய சக்திகள் அண்டாதவண்ணம் தியானம் செய்தேன்” என சாந்தமாகக் கூறுகையில் அவருடைய கண்களில் பயணத்தின் அபாயம் தெரிந்தது.

“நான் புறப்படும்போது கையில் பணம் இருக்கவில்லை. வழியெங்கும் பிச்சை எடுத்து உண்டு வந்தேன்.

கால்நடையாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைய இரண்டரை மாதங்கள் சென்றன. வள்ளிபுரம், செல்வச் சந்திநிதி, நல்லூர் உட்பட அனைத்துக் கோயில்களுக்கும் யாத்திரை மேற்கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்டது யாழ்ப்பாணம். புதுமையான பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. தெற்கிலுள்ளவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து அறிவதில்லை. அத்துடன் இங்குள்ள ஒவ்வொரு வணக்கஸ்தலங்களும் அபூர்வ சக்தியுடையன. அதனை என்னால் உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்து மக்கள் பண்பாடு தெரிந்தவர்கள். என்னோடு அன்பாகப் பேசிப் பழகினார்கள். அவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் அமையவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என சாந்தமாகக் கூறி முடித்தார்.

கையில் பிச்சைப் பாத்திரத்துடனும் கமண்டலத்துடனும் அதிகம் பேசாதவராய் இருந்த அந்தத் துறவி தன் மனதில் தோன்றிய மேலும் சில விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். அவை ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தன.

“2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு பேரழிவொன்று ஏற்படும். அது ஏதோ ஒரு சக்தியால் நிகழும். என்னால் அதை ஊகிக்க முடிகிறது.

கடும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்கள். நான்கு இடங்களில் எரிமலைகள் உருவாகும். அது மேலும் அழிவை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட துர்விடயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அதன் பிறகு 700 ஆண்டுகள் நாட்டுக்கு நல்லதாக அமையும். எனினும் பெண்கள் ஆட்சியாகவே இருக்கும். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் விகிதாசரம் குறையும்.



அந்த 700 ஆண்டுகள் கழிந்த பின்னர் தர்மத்துடன் ஆட்சியமைக்கக் கூடிய மன்னன் ஒருவன் வருவான். அவனுடைய ஆட்சியில் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வார்கள். என்னுடைய தியான சக்தியினால் நான் கண்ட விடயங்கள் இவை. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நான் கூறியிருக்கிறேன்” எனக் கூறி எமக்கு நன்றி தெரிவித்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார்.

-இராமானுஜம் நிர்ஷன்

0 comments: