Todays Date:

காவியத்தின் தேவதை!



நீண்ட இரவின்

மத்திமத்தில்
நிலவும்
நிழலும்
மழையும்…

ஏகாந்தத்தில்
உன்னை
ஏந்திக் காத்திருக்கிறேன்

சிற்றெறும்பு வீழ்ந்து
இலையதிரும் ஓசை
என்னை
இயங்கச் செய்கிறது

என் மனதின்
திறக்கப்படாத காப்பகம்
மெல்ல விரிகிறது

உனக்கு நினைவிருக்கிறதா?

பதின்ம வயதுகளில்
அழகைச் சுமந்த
நீயும்
வேட்கை நிறைந்த
நானும்…

நீ
கண்களால் அபிநயிப்பாய்
நான்
இமைக்க மறந்து
பார்த்திருப்பேன்!

நீண்ட மௌனத்தின்பின்
முதல் வார்த்தை
உதிர்ப்பாய்
நான்
முழுவதுமாய் தாங்கி
சேமித்திருப்பேன்!

நாம்
பேசாத பொழுதுகளில்
பரிமாறிய வார்த்தைகள்
இப்போதும்
இனிக்கின்றன!

அவை - நம்
மனதின்
மையங்களை இணைத்த
மந்திரச் சொற்கள்!

காதல் பாடல்களில்
கற்பனையாகியிருந்தோம்!

சில சந்திப்பு
பல கதை
சிறுதூர நடைகளில்
நாமாகிப்போனோம்!

உன்
நினைவுக் கடலில்
திமில்போல்
மிதந்திருக்கிறேன்!

இன்னுமின்னும்
வாழவேண்டுமென்ற
ஆவலைத் தந்தது - உன்
காதல்!

என் காவியத்தின்
தேவதையாய் - உன்னை
ஆராதித்திருக்கிறேன்!

உன்னை
அள்ளிக் கொள்ளவே -
என் உடல்
உயிர் தாங்குகிறது போலும்!

என் வாழ்க்கையின்
கிழக்கு நீ
இங்கே அஸ்தமனத்துக்கு
இடமில்லை!

வா!
இந்த இரவில்
இந்த நிலவில்
இந்த மழையில்
ஒருவராகியிருப்போம்!

-இராமானுஜம் நிர்ஷன் -

0 comments: