கூட்டு ஒப்பந்தம்: தடைகளை தகர்க்க இளைஞர்கள் முன் வர வேண்டும்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், தொழில்நலன் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் பற்றி இப்போது மிக அரிதாகவே பேசப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரபரப்பாக பேசப்படுவதும் நல்லதோ கெட்டதோ அதன் பின்னர் அமைதியாகிவிடுவதும் வழமையாகிவிட்டது.
மனித வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரச்சினைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதன் ஊடாகவே சாதகமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
அதனை விடுத்து பிரச்சினை சார்ந்த அனைவரும் அமைதியாக இருப்பதானது மாற்றுத் தரப்பினருக்கு வலுவூட்டுவதாகவே அமையும்.
கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் பேசுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஊடகங்களால் தேடப்படும் விடயமாக மாறும். அதன் பின்னர் என்னவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
எனினும் அது சரியா, பிழையா என்பதற்கு அப்பால் அனைவரும் ஒருமித்த மனநிலைக்கு வரவேண்டியது அவசியமாகும். அதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஒவ்வொரு தனித்தனி தொழிலாளரும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
அவ்வாறு விழிப்புணர்வூட்டும் செயற்பாடானது இதுவரை நடைபெறாமை கவலைக்குரியதே.
கூட்டு ஒப்பந்தமானது ஒன்றரை வருடங்களுக்கு அதிகமாக காலதாமதப்படுத்தப்பட்ட போது அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வகையில் ஏனையோர் மீது குற்றம் சுமத்திவந்தனர்.
ஆயிரம் ரூபா சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுத்தர முடியாது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இற்கு தெரியாத விடயமல்ல. இத்தனை காலம் தொழிற்சங்கம் நடத்தி கூட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டு வந்த அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
அரசியல் இலாபத்துக்காக தேர்தல் நலனுக்காக ஆயிரம் ரூபா பெற்றுத்தருவோம் எனக் கூறிவிட்டார். அதுவே அவருக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது.
சாதாரண தொழிலார்கள் தானே எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனப்பாங்கு ஈற்றில் சஞ்சலத்தை ஏற்படும் விதமாக மாறியது.
அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்க பலத்தில் இருந்தாலும் தற்காலிக கொடுப்பனவையே பெற்றுக்கொடுக்க முடிந்தது.
தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுவதாக இருந்தாலும் கூட முறையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமானால் நியாயமான தொகையை பெற்றுக்கொடுத்திருக்க முடியும்.
இங்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தானே ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக சொன்னார்கள், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என நழுவிச்செல்லும் மனப்பாங்குடனேயே கூட்டணியினர் செயற்பட்டிருந்தார்கள்.
ஆக, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பிலிருந்தும் அறிக்கை வந்தனவே தவிர அதற்குப் பின்னரான பின்விளைவுகள் குறித்து கரிசனை கொள்வோர் யாருமிலர்.
நிலுவைப் பணத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்புடையதாக இ.தொ.கா. முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக கொழுந்து பறிக்கும்படி பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு தொழிற்சங்கங்கள் கூறும் பதில் என்ன?
இன்னும் சில தோட்டக்கம்பனிகள் குறைவான வேலைநாட்களையே வழங்குகின்றன. இது குறித்து தொழிற்சங்கங்கங்களுக்கு தெரியுமா?
தேயிலை காணிகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் முறை பற்றி பேசப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கிறது?
இது ஒருபுறம் இருக்கட்டும்.
நாட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் குழுக்கள் அமைத்து விசாரணை அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
ஆனால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் பின்னணி என்ன?
நாட்டின் வருமானத்தில் பிரதான வகிபாகம் கொண்டுள்ள தொழிலாளர்களின் நலனில் ஜனாதிபதிக்கு ஏன் அக்கறை இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்பட்டாலும் முதலாளிமார் நாட்டுக்கு ஈட்டித்தரும் செலாவணி குறித்தே அதிகம் கவனம் எடுக்கப்படுகிறது. இத்தனை நூற்றாண்டு காலம் உழைத்து உழைத்து அதே மண்ணுக்கு உரமாகிப் போகும் தியாகிகள் குறித்து சாதாரண மனிதனின் மனிதாபிமானத்துடான பார்வை அதிகாரம் மிக்கவர்களுக்கு தெரியாது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இதனை கதைத்து பிரயோசனம் கிடையாது. ஆதலால் இதற்கு சமூக ரீதியாக சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம் குறித்து அக்கறையுடையவர்கள் ஒன்றுதிரளும் பட்சத்தில் சம்பள விவகாரத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மாற்றத்துக்காக உழைக்கும் இளைஞர்கள் பேதங்களை மறந்து இந்த விடயத்தில் திறந்த கலந்துரைரயாடல்களை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக காத்திரமான சிந்தனைகளை உருவாக்கி செயற்படுதலே இன்றைய காலத்தின் தேவையாகும்.
வெறும் சம்பளம் என்று பார்க்காமல் அது எமது மக்களின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணி என்று நோக்கப்பட்டு ஒரு படையணி உருவாகுமானால் அத்தனை தடைகளையும் உடைப்பது சிரமம் கிடையாது.
-இராமானுஜம் நிர்ஷன்-
நன்றி சூரியகாந்தி - 14.02.2017
0 comments:
Post a Comment