Todays Date:

காதல் ஓவியம்








(அழகாக வடிவமைப்புச் செய்துதந்த தம்பி பிரசன்னாவுக்கு நன்றி)

விரிவாக படிக்க ……..

“கொழும்புச் சாமியார்”

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொண்டுவரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆசாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

ஒரு பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் பெரிதாகப் பிரபலமில்லாத ஆனால் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது.
உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி…..
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?
சமப்ரப….
நிர்விக்னம்
இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ.
குருமே தேவ
நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ
சர்வ கார்யேஷ் ஷர்வதா”

சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?
எனக் கேட்கத் தோன்றும்.

இளம் பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக்கொண்டிருக்கும் போது நாம் எம்மாத்திரம் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை.வீட்டிலும் நியாயமில்லை. எனக் கோயிலுக்கு செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் தான் என்ன?

விரிவாக படிக்க ……..

“மண்ணுக்குள் இருக்கும் என்னை அகழ்ந்து கோயில் எழுப்புங்கள்”

இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோருக்கு இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மிகப் பழைமையான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னும் அழியாமல் இருப்பது இறை சக்தி என்றே கணிப்பிட முடியும்.

திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை “கொனா கோவிலய(நந்திக் கோயில்)” என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்கு சான்றாக விளங்குகிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.

இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

இந் நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளதுடன் அவருடைய மகனை வேறு மதத்துக்கு மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலை பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக இன்றுவரை அந்தக் குடும்பத்தினர் கோயிலை பராமரிக்கின்றனர்.

போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.

1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி சலலிஹினி சந்தேசய எனும் காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.
இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு நிலையத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்திருக்கிறார்கள். அந்த ஆலயத்தில் கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கதிர்காமக் கந்தனுக்கு எடுக்கும் பெருவிழாவாக பல்வேறு விழாக்கள் இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் 1980 களில் பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிகால எழுத்தக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்களின் தீர்த்தமாக அந்தக் குளம் இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அதன் பின்னர் இந்த ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இந்த ஆயத்துக்கு அந்த குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.

தற்போதும் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி உள்ளிட்ட ஏனைய அகழ்வுகள் பக்தியுடன் ஆலயத்தில் பேணப்படுகின்றன.


எழுத்தில் ஆதாரபூர்வமாக எதுவும் காணப்படாத போதிலும் அகழ்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகள் இந்த ஆலயத்தின் பழைமையை எடுத்துக்காட்டுகின்றன. பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் காரைநகரைச் சேர்ந்த திருமதி கனகசபை கோயில் திருப்பணிகளை முன்னின்று செய்துவருகிறார்.


ஆலய தலவிருட்சம்

கண்டெடுக்கப்பட்ட அகழ்வுகள்

கண்டெடுக்கப்பட்ட ஆவுடை
நந்தி

சோர்த்துக்கேயரின் தாக்குதல் சித்திரமாக...

கட்டப்பட்டுவரும் ஆலயம்

ஆலயத்தின் தொன்மைத் தன்மை சிதைக்கப்படாதவண்ணம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் இந்த ஆலயத்தின் வரலாறு சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்
(தங்கை துர்காவின் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவிட்டுள்ளேன்)

விரிவாக படிக்க ……..

"பாலுறவில் உண்மை வேண்டும்"

பிரின்சி மங்களிகா
எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் வலையில் விழுந்த அப்பாவிப் பெண். போதிய விழிப்புணர்வுகள் இன்றி வேறெவருக்கும் இந்த நோய் தொற்றிவிடக் கூடாது என அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஒரு சமூக சேவகி.

அதற்கென தனியான வீடொன்றையும் வாடகைக்கு பெற்றுள்ளார். எயிட்ஸ் நோயாளர்களுக்கு உகந்த ஆலோசனைகளை வழங்கிவரும் மங்களிகாவை அந்த வாடகை வீட்டில் சந்தித்தேன்.

இந்த நோய் பற்றிய தெளிவு சமுதாயத்தினருக்குத் தேவை என்பதால் பாதிக்கப்பட்ட பலரிடம் தகவல்களை பெற்றுவருவதாகவும் எனது தொழில் பற்றியும் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

மங்களிகா தான் சார்ந்த விடயங்களை இவ்வாறு விளக்குகிறார்.




நான் பிரின்சி மங்களிகா. ராகமையில் இருக்கிறேன். எனக்கு 49 வயதாகிறது. எனக்கு இரண்டு பெண் பிள்கைள் இருக்கிறார்கள். எனது கணவர் 10 வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.

எனது கணவர் எச்ஐவியினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

அவரது இறப்பிற்குப் பின்னர் நான் பட்ட வேதனைகளை ஒருசில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து ஒதுக்கி வைத்தனர். ஆசிரியர்கள், நண்பர்கள் யாருமே எனது பிள்ளைகளிடம் நெருங்கி வருவதில்லை. எனது பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்ற அச்சத்தில் அப்பகுதியிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை.

இதைத் தாங்க முடியாமல் எனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்தேன். அன்றிரவு நாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது எமது வீட்டுக்கு அப்பகுதி மக்கள் தீ வைத்தனர். எம்மை அங்கிருந்து அனுப்புவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

அவ்வாறான பிரச்சினைகளையும் சமாளித்துக்கொண்டேன்.

அதன்பின்னர் எனக்கும் வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கூறினார்கள். நான் பரிசோதனை செய்தபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

எனக்கும் அந்த நோய் தொற்றியிருந்தது.

எனது கணவர் ஜெர்மனியில் தொழில்புரிந்தார். அங்கு அவருக்கு இருந்த கூடாத பாலியல் தொடர்புகளால் இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது.

கணவன்,மனைவி இருவரில் ஒருவர் மட்டும் உண்மையாக இருந்து எதையும் சாதிக்க முடியாது. ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருவருமே உண்மையாக இருக்கவேண்டும்.

எனது விடயத்தில் நான் தவறு செய்யவில்லை. எனது கணவர் செய்த தவறுக்கு நானும் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.


கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்கள் பலர் என்னிடம் வந்து ஆலோசனை கேட்கிறார்கள். அவர்கள் தமது இளவயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

என்ன செய்வது? கலாசார மாற்றமும் இதற்குக் காரணம்.

விபசாரம் செய்பவர்களுக்கு மாத்திரமே எயிட்ஸ் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அது தவறானது. கணவர் தொழிலுக்கு சென்ற பின்னர் மாற்று நபர்களிடம் இன்பத்தை அனுபவிக்கும் பெண்கள் பலருக்கு தாம் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது.

அதேபோல் தொழிலகங்களில் வேறு பெண்களுடன் தொடர்பினை வைத்திருக்கும் ஆண்கள் பலருக்கும் இந்த விடயம் தெரியாது.

இதனால் பாதிக்கப்பட்ட எத்தனையோ சிறுவர்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

நான் இந்த சமூகத்திடம் கேட்டுக்கொள்வதும் இதுதான். சிற்றின்பத்தை அனுபவிப்பதற்க முயற்சிக்கிறோம். அதனால் ஏற்படும் இவ்வாறான பின்விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம். ஆதலால் மிகக் கவனமான,பாதுகாப்பான உடலுறவு தேவை

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

சில அரசியல்வாதிகளுக்குத் தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அளவுக்கு அதிகமாகவே உண்டு. இதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் - செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

உண்மையைப் பொய்யாக்குவார்கள்; பொய்யை உண்மையாக்குவார்கள்.... இப்படி எத்தனை எத்தனையோ சித்து வேலைகள்...!

இவர்களிடையே தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அடிக்கடி மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு.

அவ்வாறானவர்களில் இப்படியும் வித்தியாசமான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சரி. விடயத்துக்கு வருவோம்.

'லங்காதீப' பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் மேல்மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

தன்னைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அரசியல்வாதியின் அபிப்ராயம். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். பெரிதாக எந்தக் காயமும் இல்லாமல் தப்பிவிட்டார்.

அந்தச் சம்பவத்தை நேரில்வந்து படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையே என்ற கோபத்தில் தான் அந்த ஊடகவியலாளரை அவர் தாக்கியுள்ளார்.

இப்படியும் சில சுயநலவாத விஷமிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்பது பிரதேசவாசிகளின் ஆதங்கம்.

"நான் எப்படியோ தப்பித்து விட்டேன். இவரிடம் சிக்கித் தவிக்கப்போகும் பிரதேச மக்களின் எதிர்காலம் பற்றித் தான் எனக்கு யோசனையாக இருக்கிறது" என்கிறார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

-----------------------------------------------------------------

ஜனாதிபதித் தேர்தலும் ஐந்து கிலோ அரிசியும்....!

ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்பை அண்டிய சில பகுதிகளில் அரிசி கொடுத்து வாக்குக் கேட்கும் நபர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஊறுகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சிலர் வீடு வீடாகச் சென்று ஐந்து கிலோ அரிசி கொடுத்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கடந்த 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் 21 ஆம் திகதிமுதல் இப்படியொரு மறைமுகப் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.

பிரதான வேட்பாளர் ஒருவரின் சின்னத்தைக் கூறி அந்தச் சின்னம்தான் உங்களுக்கு அரிசி தருகிறது என்கிறார்களாம் அந்த நபர்கள்.

இரண்டு நாட்களாக அப்பகுதியிலுள்ளவர்களுக்கு இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்கஇ அரிசி கொடுக்கும் செய்தி மேலும் பல பகுதிகளுக்குப் பரவியதால் குடும்பப் பெண்கள் பலர் தொழிலுக்குச் செல்லாமல் காத்திருந்ததாகவும் தகவல் கிடைத்தது.

முடிவு அறிவிக்கப்பட்டதும் கொடுத்த அரிசியை திரும்பவும் வாங்கிக்கொள்ள அவர்கள் வந்தாலும் வரலாம் என்றது மற்றுமொரு வட்டாரம்.

'அரிசி' க்கு பலன் கிடைக்காமலில்லை.

எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தால் கொடுத்த அரிசியை பெற்றுக்கொள்ளப்போவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒருசிலர் மிரட்டிவருவதாக கூறப்படுகிறது.

அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா!

-----------------------------------------------------------------

மகா சிவராத்திரியும் மகா சல்லாபமும்!

மகா சிவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. வழமைபோல ஆலயங்களில் இரவிரவாக சல்லாபம் செய்வதற்கு இளைஞர்கள் பலர் தயாராகி வருகிறார்கள்.

"மச்சான்... சிவராத்திரி வருதாமே" என்றார் நண்பரொருவர்.

"வரவில்லை. அது நிர்ணயிக்கப்பட்டதுதான். ஏன் என்ன விஷயத்துக்காக" என்றேன் நான்.

"திகதியில ஏதோ பிரச்சினை இருக்குபோல"

"மார்ச் 13 தான் சரியான நாள். என்ன செய்யனும்"

"இல்ல டா. ரெண்டு துண்டுகள (நம்ம நாட்டுல தாய்க்குலத்துக்கு சொல்லுற வார்த்தை) செட் பண்ணியிருக்கேன். ஒன்ன கப்பித்தாவத்த கோயிலுக்கு அனுப்பப் போறேன். மற்றத பொன்னம்பலவாணேஸ்வரத்துக்கு அனுப்பப் போறேன். சரிய டைம் செட் பண்ணிக்கனும். அதான் கேட்டேன்"

இப்படியொரு கூட்டம் இன்னும் அலையுது. புனிதமான நாளில் புனிதத்தைக் கெடுக்க எத்தனை ஆசாமிகள் இப்படிக் கிளம்பியிருக்காங்களோ?

-----------------------------------------------------------------

ஊடக தர்மம்?

இலங்கையிலுள்ள பிரபலமான ஊடக நிறுவனம் அது. அடிக்கடி ஊடக தர்மம் பற்றியும் சமநிலைவாதம் பற்றியும் சமுதாய அங்கீகாரம், நடுவுநிலைமை பற்றியும் எடுத்துரைத்து சமுதாயத்தை விழிப்புணர்வூட்டிக்கொண்டிருக்கும் நிறுவனம்.

அங்கு ஒரு பிரிவிலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றைய பிரிவுக்கு செல்ல முடியாது. ஒரே நிறுவனம் தான். ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லை போல.

விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார் நபர் ஒருவர். அங்கு நண்பர்களால் மற்றொருவர் அறிமுகப்படுத்தப்பட்டதும்," நான் இந்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன் எனச் சொன்னாராம். அதற்குப் பதிலளித்த மற்றைய நபர் அடடா... நானும் அங்கே தான் என்றாராம்.

ஒரே வீட்டில் பிரிவினைவாதத்துடன் எத்தனை குடும்பங்கள். மற்றைய பிரிவுகளைச் சேர்ந்தோர் எதிரிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர்.

தன்னுடைய பிரிவின் தலைவர் விரும்பாத ஒரு நபருடன் அந்தப் பிரிவிலுள்ள எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம். அப்படியானால் வேலைக்கு ஆப்பு தான்!

நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு இது நல்ல சந்தர்ப்பம் தானே? அதனால் வாய்மூடி கூத்துகளை பார்த்துக்கொண்டிருக்கிறது. பாவம் இந்த ஊழியர்கள்.

இதுதான் சமநிலை வாதமோ?

விரிவாக படிக்க ……..

காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள்



செல்லத் தோட்டத்தின் அரச மரச் சந்தியென்றால் பகலில்கூட யாரும் நிற்கப் பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை தண்டிக்கும் மலைச் சாமியின் குடியிடம் அது. ஒவ்வொரு புதுவருடத்திலும் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் மலைச்சாமிக்கு தேயிலை மாலை அணிவித்து குறைதீர்க்க வணங்குவது தோட்ட மக்களின் வழமை.

நேரம் அதிகாலை 2 மணி. மலைச் சாமியின் வாள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தது. உறங்கிக்கொண்டிருக்கும் தேயிலைச்செடிகளுக்கிடையில் சலசலத்து ஓடும் ஓடையின் சத்தம் தவிர எங்குமே மயான அமைதி. மலையிடையில் வரி கீறியதாய் தோட்டத்துக்கு வரும் மண்பாதை உயிர்கொண்டு சத்தமிடுகிறதோ? இல்லை. து}ரத்தே ஒரு வாகனம் விரைவாக வந்துகொண்டிருக்கிறது.

செல்லத்தோட்டம் பற்றிச்சொல்லியாக வேண்டும். குறைகள் எதுவுமின்றி செழிப்புடன் இருந்ததால் செல்வத்தோட்டம் என மக்கள் இட்ட பெயர்தான் பின்னர் பேச்சு வழக்கில் செல்லத்தோட்டமானது. இப்போதெல்லாம் சரியாக கொழுந்து வளர்வதில்லை, சம்பளப்பிரச்சினை, போராட்டம் என சுமைகளுக்கிடையே சுமைதாங்கிகளாய் வாழும் தோட்ட மக்கள் வாடிய முகத்துடனேயே காணப்படுகிறார்கள். வறுமைக்கு எங்கே போய் நிவாரணம் தேடுவது? நாளைய சமயலுக்கும் குழந்தையின் படிப்புக்கும் யாரிடம் கையேந்துவது? என்றெல்லாம் எண்ணவோட்டங்கள் மூளை நரம்புகளைப் பிண்ணிப் பிணைகையில் அதைவிட பிணி ஏது?

உழைக்கும் கைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், இன்றும் தேயிலைக் கிள்ளியே காம்பாய் மாறிய தம் கைகளைப் பார்த்தே விழித்தெழுகிறார்கள்.

உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு என்ன சேதி சொல்ல வாகனம் வந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஐந்து நிமிட இடைநேரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்டது. உள்ளேயிருந்து இறங்கிய இருவர் வாகனத்தின் பின் கதவைத் திறந்து சகோதர மொழியில் பேசியவாறே பெட்டியொன்றை சிரமத்துடன் இறக்கிக் கீழே வைத்தனர். வாயை துணியால் மூடிய ஒரு பெண் உருவம் மலைச்சாமிக்கருகே சென்று மண்டியிட்டுக்கொண்டது.

இரண்டு உருவங்கள் மீண்டும் வாகனத்தில் ஏற வாகனம் உறுமிக்கொண்டு புறப்படத்தாயாரானது. அந்த வெளிச்சத்தில் மலைச்சாமியின் உருவம் தெளிவாகத் தெரிய அருகில் மண்டியிட்டுக்கொண்டிருந்த பெண் பார்வதிதான் என்பது கண்ணுக்குப் பட்டது. பார்வதியின் கண்களில் அணல்பறக்கும் வேகம் தெரிந்தது. தலைவிரிகோலமாய் மலைச்சாமிக்கு முன் மண்டியிட்டிருந்த அவள் வாகனம் புறப்படத்தயாரான போது மண்ணை அள்ளி தலையில் வீசிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.

“ஆசயா வளத்த என் பிள்ளைய பிணமா கொண்டு வந்து போட்டுட்டு போறானுங்களே…
ஐயோ…
கேட்க யாருமே இல்லையா?

மலைச்சாமியே…. என் மகள இப்படிப்பார்க்கவா உனக்கு கொழுந்து மாலை போட்டேன்?
யாருமே இல்லையா? யாராவது வாங்களே…”

மரண ஓலமாய் பார்வதியின் குரல் ஒலிக்க மலையிடுக்கெங்கும் அது எதிரொலித்து மௌனம் கரைத்தது. உயிரை உறையவைக்கும் அழுகைக் குரலுக்கு சற்றேனும் செவிசாய்க்காது திரும்பிச்சென்றது அந்த வாகனம்.

அந்த வெளிச்சத்தில் மின்னியது சவப்பெட்டி.

“போ…
என் மகளைக் கொலை செய்த பாவம் உன்னையெல்லாம் சும்மாவிடாது”

பார்வதியின் கண்ணீர் நிறைந்த கைக்குட்டையை வாகனத்தை நோக்கி வெறித்தனமாக வீசியெறிந்தாள்.

நடுங்கும் குளிரில் முனகியவாறே மெழுகுதிரி ஏந்திய சில உருவங்கள் லயத்திலிருந்து படியிறங்கி வந்துகொண்டிருக்கின்றன. தொடர்ந்தும் குழுகுழுவாக ஆண்களும் பெண்களும் இணைந்து வருகின்றனர். அவர்களில் பார்வதியின் குரல்கேட்டு பதறியடித்துக்கொண்டு வரும் அவள் கணவர் பெரியசாமியும் ஒருவர்.

அவர்களைப் பார்த்த பார்வதியின் அழுகை மேலிட்டது. சவப்பெட்டிக்கருகில் சென்று கதறிக் கதறி அழுகிறாள்.

“சுமதிய அனுப்ப வேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா? அரக்கனுங்களெல்லாம் சேர்ந்து புள்ளைய கொன்டுட்டாங்க.
இப்போ யாரு என் மகள திரும்பத் தருவாங்க?

கணவனைக் கட்டியணைத்ததோடு மயங்கி விழுகிறாள் பார்வதி.

என்ன நடந்ததென்றே தெரியாமல் விழிகளில் நீர் நிறைய சவப்பெட்டியை நெருங்குகிறார் பெரியசாமி. அவர் சவப்பெட்டியைத் திறந்ததும் அரசமரச் சந்தியே அழுகையில் நனைகிறது.

ஆம்! செல்லத்தோட்டத்தின் செல்லப்பிள்ளை என அனைவராலும் ஆதரிக்கப்பட்ட சுமதிதான் பிணமாக இருக்கிறாள். குழந்தைச் சிரிப்பு மாறாதவண்ணம் நீலநிறத்தில் காட்சியளிக்கிறது அவள் முகம். சுமதிக்கு என்ன நடந்தது? கேட்க முடியாத கேள்வியின் அடையாளமாக அனைவரும் விழிபிதுங்கி நிற்க சுமதியின் ஒன்றுமறியா கடைத்தம்பி சவப்பெட்டியைத் தடவிக்கொண்டிருந்தான்.

பெரியசாமி, பார்வதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் தான் சுமதி. பெரியசாமிக்கு நெஞ்சு வருத்தம் இருந்ததால் குடும்பச் சுமை முழுவதும் பார்வதியின் வசம்தான். எத்தனை வேதனைகள் என்றாலும் இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பி கடைக்குட்டியை பிள்ளைமடுவத்தில் சேர்த்து வேலைக்கும் சென்று வந்து சமைத்து, சோறுகொடுத்து குடும்பத்தை கண்ணெனக் காத்துவந்தாள் பார்வதி. மலைச்சாமியின் மண்விபூதி எப்போதும் பார்வதியை இலட்சணமாகக் காட்டும்.

தோட்டத்துக் குழந்தைகளில் சுமதியின் மீது அனைவருமே அதிக பாசம் வைத்திருந்தார்கள். பண்புடனனான நல்ல பழக்கமும் சிரித்த முகத்துடன் பேசுவதுமே இதற்குக் காரணம். பட்டம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு லயன் அறை ஒவ்வொன்றாக சென்று தனது நண்பர் கூட்டத்தை அழைத்து மேல்கணக்கு மலைக்கு சென்று விளையாடுவதும் அம்மாவுக்கு பயந்து ஆறு மணிக்கே ஐயா வீட்டுக்கு அந்தி வகுப்பு செல்வதும் என துடிதுடிப்பாக இருப்பாள் சுமதி.

குழந்தைகள் வளர வறுமையும் கதவைத்தட்டியது.

“பெரியசாமி அண்ணே… உள்ளயா இருக்கீங்க?”

“ஆ… வாங்க தரகர் தம்பி. என்ன இந்தப்பக்கம்? நீங்க வேற தோட்டத்துக்கு போறதா கேள்விப்பட்டேன்”

“ஆமா அண்ணே. நம்மள நம்புறவங்ககிட்ட தானே வாழ முடியும். இப்போதெல்லாம் தொழிலும் ஜமாய்க்குதில்ல. வீட்டில சும்மா இருக்கிறதுக்கு உங்கள பார்க்கலாமேனு வந்தேன்”

பெரியசாமிக்கும் தரகருக்கும் பேச்சு நீண்டுகொண்டு சென்றது.

சிட்டாய் அங்கு விரைந்துவந்த சுமதி தந்தைக்கு தேநீர் கொடுத்துவிட்டு பறந்துசென்றாள்.

அப்போதுதான் சுமதி பற்றிய கதை அங்கு ஆரம்பமானது.

“உங்களுக்கும் சுகமில்ல. பார்வதிக்கு எத்தனை நாளைக்கு தான் குடும்ப பாரத்த சுமக்க முடியும்? சுமதிக்கு இப்ப சரியான வயசு. கொழும்பில நல்ல வீடா பார்த்து, வேலைக்கு விட்டா, அங்கேயே படிச்ச மாதிரியும் இருக்கும், குடும்ப செலவுக்கு காசு வந்தமாதிரியும் இருக்கும்”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் தரகர். வாரத்தில் ஒரு முறையேனும் கசிப்பு குடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டுக்கொண்டிருந்த பெரியசாமிக்கு அது சரியாகப் பட்டது. வஞ்சகப் பேச்சில் முழுமையாக மதிமயங்கிய அவர் இதுபற்றி பார்வதியிடம் பேச குடும்பத்தில் சண்டையே வலுத்தது.

பார்வதிக்கு நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரிக்க கணவரின் வற்புறுத்தலுக்கு இசைந்து தன் ஆசை மகளை கொழும்புக்கு அனுப்பத் தீர்மானிக்கிறாள்.

அந்த வீட்டிலிருந்துகொண்டே கொழும்புப் பாடசாலையில் படிக்க வைப்பதாகவும் முதல் மாத சம்பளம் தனக்கு வேண்டும் எனவும் ஆசைகாட்டி, பேரம்பேசி சுமதியை அழைத்துச்செல்கிறார் தரகர்.

சுமதிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மலைச்சாமியிடம் மன்றாடி தனது குறையை ஒப்புவித்துவிட்டு வீடு திரும்பிய பார்வதிக்கு சுமதியின் நினைவாகவே மூன்று மாதம் கழிகிறது. தலைக்கு மேல் பிரச்சினையென்றாலும் ஒரே தலையணையில் பிள்ளைகளுடன் படுத்துறங்கிய பொழுதுகளில் மனக்குது}கலம் நிறைந்து இன்முகத்தோடான விடியலை இனியொருநாள் அனுபவிக்கக் காத்திருக்கிறாள்.

நான்காவது மாதம் தன் மகளைப் பார்க்க தரகருடன் கொழும்புக்கு செல்கிறாள் பார்வதி. இவ்வளவு பெரிய நகரத்திலா என் மகள் படிக்கிறாள்? வேலை செய்கிறாள் என ஆச்சரிய மகிழ்ச்சியில் செல்லும் பார்வதிக்கு வேதனைச்செய்தி தான் காத்திருக்கிறது.

பலவிதங்களில் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறாள் சுமதி. காலையில் வீட்டுப் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, பாத்திரம் தேய்ப்பது. சமயல் உதவி என ஏகப்பட்ட வேலைகள். இரவில் உரிமையாளருக்கு கால்பிடித்துவிடுவது முதல் ஏராளமான பாலியல் துன்புறுத்தல்கள். இவை அத்தனையையும் சொல்லி பார்வதியின் காலைப்பிடித்து அழுத குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை?

ஒரு வேளை சோறென்றாலும் அள்ளி அணைத்து மடியில் கிடத்தி வளர்த்த மகள் காலனின் வதைக்குள்ளாவது காலத்தின் தண்டனையா? என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டாலும் அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. கொழும்பின் எந்த வீதியும் அவளுக்குத் தெரியாது. கையில் பணம் இல்லை. எவ்வாறு அழைத்துச்செல்வது?

வழியொன்றும் அறியாமல் மகளைத் தனியே விட்டுவிட்டு வீட்டார் கொடுத்த நாலாயிரம் ரூபாவுடன் ஊருக்கு வருகிறாள் பார்வதி.

உணவில்லை. உறக்கமில்லை. மலைக்குச்சென்று கொழுந்து பறிக்கையில் தன் மகளின் மானம் பறிக்கப்பட்ட ஞாபகம். யாரிடம் முறையிடுவது? எப்படி உதவி கேட்பது. கைகொடுக்க கல்வியறிவும் இல்லை. ஊராரிடம் சொல்லி உதவி கேட்கவும் தயங்குகிறது மனம்.

இவ்வாறு ஆறு மாதம் கடந்த பின்னர்தான் திடீர் தந்தி பார்வதியின் கரம் கிட்டியது. கொழும்பின் தனியார் மருத்துவமனையில் மகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவசரமாக வருமாறும் தந்தி சொல்லியது.

சாமி படத்துக்குக் கீழே சேர்த்துவைத்திருந்த பணத்துடன் தரகரையும் அழைத்துக்கொண்டு பார்வதி கொழும்புக்கு செல்கிறாள். அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமதிக்கு பேச்சு வரவில்லை. வார்த்தைக்குப் பதிலாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தேயிலை மலையெங்கும் பட்டம் விட்டு அம்மாவின் பெயரைக்கூறி அது எதிரொலிக்கும் சத்தம் கேட்டு மகிழும் பிஞ்சு, கட்டிலுக்குள் அடங்கியிருந்தாள்.

சுமதி தான் இருந்த வீட்டின் ஒன்பதாம் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் வீட்டார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அங்கிருந்த இருவர் தகவல் கூறினர். கொல்லும் கோபத்தில் வீட்டு உரிமையாளரை கேட்டபோது அவர்கள் திருமண வைபவம் ஒன்றுக்காக சென்றுவிட்டாதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“அ…ம்….மா….”

சுமதி ஏதோ சொல்ல முற்படுகிறாளா? இல்லை அம்மா என்ற சொல்லில் ஆறுதல் தேடுகிறாளா தெரியவில்லை. கருவிழிகள் மேலும் கீழும் சென்று ஏதோ பாஷை சொல்வது மட்டும் புரிகிறது. ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் விடுதலையாகிறாள் சுமதி.

பார்வதியின் அலறல் ஒலியில் நிறைகிறது அறை. இருந்தும் என்ன பயன்? காற்றோடு கலந்துவிட்ட உயிரை எந்தக் குரல்கொடுத்து அழைக்க முடியும்? அவள் சொல்ல முற்பட்ட கண்ணீர் வரிகளை எந்தக் கண்கொண்டு பார்க்க முடியும்?

ஏதோ ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஏமாற்றப்படுகிறோம் என்பது மட்டும் பார்வதியின் சிற்றறிவுக்குத் தெரிகிறது. மாயமாகிவிட்ட தரகருடன் பாரியதொரு பித்தலாட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பததையும் அறிகிறாள். இருந்தும் தன் கையெழுத்தையே தன்னால் எழுத முடியாத பார்வதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்குத் தெரிந்த ஒரே நீதிபதி மலைச்சாமி தான்.

துடிக்கத் துடிக்க கண்கள் அகற்றப்பட்டு அங்கங்கள் அனைத்துமே கூர்க் கோடரியால் வெட்டிச் சிதைப்பது போன்ற உணர்வு பார்வதிக்கு. தன்னால் தனக்கே ஆறுதல் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியசாலியாய் பொம்மை போல ஆகுகிறாள்.

இந்நிலையில் தான் விடிபொழுதில் ஓர் அஸ்தமனச் செய்தி செல்லத்தோட்டத்துக்கு மரண ஓலமாய்க் கேட்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத குறுங்காலத்தில் சுமதியின் சுட்டித்தனங்களும், நிரந்தரப்பிரிவும் தோட்டத்தையே துவர்க்கம் செய்தது.

பொழுதுவிடிந்தது. பார்வதிக்கு இன்னும் விடியவில்லை. மகளின் பெயரை முனுமுனுத்தவாறே தன்னிலை மறந்திருக்கிறாள். இவ்வேளை மீண்டும் ஒரு வாகனம். என்ன செய்தி வரப்போகிறதோ என மரண வீட்டிலும் மக்களின் எதிர்பார்ப்பு.

அதேபோல் மலைச்சாமிக்கு எதிரே நிறுத்தப்பட்ட கார் ஒன்றிலிருந்து மூவர் இறங்குகின்றனர். சுமதி வேலை செய்த வீட்டின் உரிமையாளர், அவர் மனைவியுடன் பொலிஸ் அதிகாரிபோல் தோற்றம் தந்த ஒருவரும் வருகிறார். சுமதியைப் பார்க்கவில்லை. சுமதியின் தாயாரைப் பார்க்க வேண்டும் என குரல்கொடுக்கிறார் பெரியவர்.

கலங்கிய மனதுடன் பழைய நினைவுகளிலிருந்து மீளாத பார்வதி கைத்தாங்கலாக கீழே அழைத்துவரப்படுகிறாள். வந்தவர்கள் ஏதோ சொல்கின்றனர். பார்வதி, பேரலையொன்றில் தாக்கப்பட்டவளாய் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சில நிமிடங்களின் பின்னர் பார்வதியின் கையில் ஒரு பையை கொடுத்துவிட்டு வந்தவர்களுடன் மறைகிறது கார்.

மறுவார்த்தை பேச சக்தியில்லாதவளாய் இருந்த பார்வதிக்கு பையில் இருந்த பதினையாயிரம் பணமும் தெரியவில்லை. அப்போதும் மலைச்சாமி மௌனம் காத்துக்கொண்டிருந்தது.

- இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

காட்டுக்குள் ஓர் அதிசயம்!

இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.

சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது.

“ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்” என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.

யானை உருக்கொண்ட ஆல மரம் என்றதும் எமது எதிர்பார்ப்பு அதிகமானது.

நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது கவனமாக செல்லும்படியும் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள்.

உயர்ந்த மலை. அதிகாலைப் பொழுதில் சில்லென்ற காற்றோடு பனி படர்ந்து உள்ளத்தையும் நனைக்கிறது. காட்டுக்குள் கரடுமுரடான பாதையில் வெகுதூரம் நடந்த பின்னர் தெரிகிறது அந்த ஆலமரம்.

ஆம்! அந்தப் பெரியவர் சொன்ன ஆலமரமாகத் தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம். ஆனாலும் அந்த இடத்திற்குச் செல்வதற்கு பாதை இருக்கவில்லை.

பாதை எங்கே எனத் தேடியபோதுதான் மலைப்பாறைக்கு உச்சியில் சிறியதாய் ஓர் ஆலமரம் இருப்பதும் ஓங்கியுயர்ந்த தென்னைமரத்தோடு கீழே கடவுள் சிலைகள் இருப்பதற்கான அடையாளம் இருப்பதையும் கண்டோம்.

கோயிலுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் பழைமையை எடுத்துக்காட்டின.

பாதையை அமைத்துக்கொண்டு செல்வோம் என உறுதிகொண்டு ஆலமரத்தை நோக்கிய எமது நடையை ஆரம்பித்தோம்.

என்ன அதிசம்? ஆலமரத்தின் ஒரு கிளை யானைத் தந்தத்தைப் போலவே காட்சியளிக்கிறது. மற்றொரு கிளையும் அவ்வாறுதான். யானையின் கண்களைப் போலவே இயற்கை படைப்பின் அடையாளங்கள் விளங்கின.

பரந்த உலகில் எல்லைகளற்ற அதிசயங்களோடும் அழகோடும் மனித சக்திக்கு அப்பாற்பட்டிருக்கும் இயற்கையில் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறதா என வியப்புச் சிந்தனை துளிர்ந்தது.

அங்கிருந்து சாதாரண தூரத்தில் தான் அந்தக் கோயில் இருந்தது. எனினும் முட்செடிகளுக்குள்ளே நடக்கவேண்டிய கட்டாயம்.

சுரி, ஆகட்டும் என எண்ணிக்கொண்டு கோயிலை நோக்கி சென்றோம். முற்றுமுழுதாக பரந்ததொரு பாறையின் மீதிருக்கிறது கோயில். மிக மிக பழைமையான படிக்கட்டுகள் உடைந்த நிலையில் எம்மை வரவேற்றன. பாதணிகளை அகற்றிக்கொண்டு நாம் மேலே சென்ற போது, தூரத்தே தெரிந்த மலைகள் அனைத்தும் மிக அருகில் தெரிவது போலிருந்தது.

மென்மையான காற்று அமைதி கலந்து வீசியது. அது ஆழ்மனதின் மையங்களை தொட்டுச்செல்வதாய் ஓர் உணர்வு. கவனிப்பாரன்றி பாழடைந்த நிலைமையில் மிகச்சிறிய இலிங்கச் சிலையோடு இன்னும் சில இந்துத் தெய்வச் சிலைகள் இருந்தன.

யாரோ பற்றவைத்துவிட்டுப்போன ஊதுவர்த்தியும் சில காட்டுப்பூக்களும் வாசனை வழங்கிக்கொண்டிருந்தன.

நாமும் கடவுளை வணங்கிவிட்டு இந்த ஆலயம் பற்றி மேலதிக தகவல்களை யாரிடம் பெறலாம் என எண்ணிக்கொண்டிருந்தவேளை தூரத்தே ஒரு பெரியவர் களைப்போடு நடந்துவந்துகொண்டிருந்தார்.

“என்னோட பெயர் தேவராஜ். வயசு 68ஆகிறது. நான் சின்னவயசில இருந்து இங்கதான் இருக்கேன். காட்டுப் பக்கத்தில தான் என்னோட வீடு இருக்குது. 1800 வருஷத்திலிருந்து இந்தக் கோயில் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாரு.

நல்ல சக்தியுள்ள கோயிலுங்க. இப்போ யாருமே கவனிக்கிறதில்ல. கங்கொடையில உள்ள சின்னப் பிள்ளைங்க இங்க வந்து விளையாடுவாங்க. அந்த ஆல மரத்த பார்த்தீங்களா? அத பார்த்தாலே உங்களுக்கு இந்தக் கோயிலோட அதிசயம் விளங்கியிருக்கும்.

காட்டுக்குள்ள ஆறு ஒன்னு இருக்குது. அதுக்கு மூலிகை ஆறு னு பெயர். சிங்கராஜ காட்டுக்குள்ள மூலிகை கலந்து வருது. அதுதான் இந்தக் கோயிலோட தீர்த்தம். இன்னும் ஒரு கிலோ மீற்றர் நடந்திங்கன்னா அதையும் பார்த்து குளிச்சிட்டு வரலாம். நோய் தீர்க்கக் கூடிய ஆறு அது” என்று சொல்லிக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்.





இது வேடுவர்களின் வழிபாட்டிடமாக இருந்திருக்கலாம் என நாம் பேசிக்கொண்டோம். உண்மை எதுவென்று நாம் சந்தித்த எவருக்கும் தெரியவில்லை.

ஆம்! உண்மையில் அந்த ஆறு அதிக சலசலப்பின்றி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நாம் குளித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு வந்து சற்று நேரம் அந்த இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் இறக்குவானையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

எழுத்தில் வராத ஆவணப்படுத்தப்படாத தொன்மையின் சான்றாக விளங்கக் கூடிய எத்தனையோ ஆலயங்கள் இவ்வாறு காட்டுப்பகுதியில் இருக்கலாம். அவை தொடர்பான தகவல்களை திரட்டிப் பெறவேண்டியது அவசியமாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நட்சத்திர வாரமும் நட்சத்திரப் பொழுதுகளும்

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கங்கள்,
சந்தோசமான நட்சத்திர வாரத்தில் நட்சத்திர நாளில் நட்சத்திரப் பொழுதொன்றில் மீண்டும் சந்திப்பதில் நிறைவடைகிறேன். இரவுபகல் பாராத வேலைகள் என்பதால் அடிக்கடி பதிவுலகை எட்டிப்பார்க்க முடிவதில்லை. எனினும் தொடர்பை அறுத்திடவில்லை.

இந்தவார நட்சத்திரமாக தெரிவுசெய்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நட்சத்திர அழைப்பு வந்தபோதும் காலத்தின் கட்டாயம் கருதி நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று திகதி மாற்றித் தந்தமைக்கு மீண்டும் நன்றி.

இனியென்ன, களம் கிடைத்திருக்கிறது. கலக்கல் தான்.

இதுவரை எனக்குத் தந்த ஒத்துழைப்புகளை இனியும் எமது பதிவுலகத்தார் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த நட்சத்திரப் பொழுதுக்கு விடைகொடுக்கிறேன்.

இனி கழியப்போகும் ஒவ்வொரு பொழுதுகளும் எனக்கு நட்சத்திரப் பொழுதுகளே!

அன்புடன்
இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா IV

அன்று காலை 7.30. அவளைச் சந்திப்பேன் என சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. எதிரே வந்துகொண்டிருந்தாள்.

எப்போதோ பார்த்த ஞாபகம். அவள்தானா என்ற சந்தேகம். நேரே வந்தவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலாய் என்னைக் கடந்துபோனாள்.

ஆமாம்.
ப்ரியாதான். ப்ரியாவே தான். வருடங்கள் பல கடந்ததால் என்னைச் சரியாய் நினைவில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வெகுநேரம் எடுக்கவில்லை.

ஒரு தொலைபேசி அழைப்பினூடாக அவள் தான் என்பதை அறிந்துகொண்டேன்.

எனக்குள் உள்ள மொத்த அன்பையும் சேர்த்து ஆரோகணித்திருந்த ப்ரியாவைக் கண்டதில் உள்ளம் கொள்ளை இன்பத்தில் மிதக்கத் தொடங்கியது.

அவளைப் பார்த்த தேவ கணங்களில் இமைக்க மறந்துபோன கண்களுக்குள் ஆழமாய் ஊன்றிவிட்ட ஆனந்தம் உச்சங்கால் வரை ஆணிவேராய் அகழ்ந்துபோனதாய் உணர்வு.

அன்றைய நிசப்தமற்ற இரவில் வானத்துக்குக் கைவிரித்து சத்தமாய் நிலவுக்கு செய்தி சொல்லவேண்டும் போலிருந்தது. முதலிரண்டு ஜாமங்கள் முழுவதும் காலைப்பொழுதில் என்னைக் கபலீகரப்படுத்தியவளின் ஆக்கிரமிப்பும் ஆட்படுத்தல்களும்…



நான் எங்கோ இழுத்துச்செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அங்கு வண்ணத்துப் பூச்சிகள் குடில் அமைத்து எனக்கு இடம்கொடுக்க அதில் மல்லிகை மஞ்சத்துப் படுக்கை.

எங்கோ கலந்துவிட்ட குழல் இசையோடு இளந் தென்றலின் உரசல், இடையிடையே என்பெயரை அழுத்தமாய் உச்சரிக்கும் உன் குரல்…

ஜன்னல் வெளியெங்கும் நட்சத்திர பயணம் அந்த மெல்லிய குரலுக்கு அவையும் அடங்கிப்போயின போலும்!

திடீரென வண்ணத்துப் பூச்சிகள் குடில் களைத்துப் பறக்கின்றன. அங்கே வெண் தேவதைகளுக்கு மத்தியில் …
விழிகளிலிருந்து விடுவிக்கப்படாத உன் உருவம்!

ஆம்!
கற்பனை தான்.

அவள் நினைவுகளால் இயல்பாகவே தாழிட்டுக்கொண்ட இமைக்கதவுகளை மெல்லத் திறக்கிறேன்.

“ப்ரியா,
பள்ளிக் காலத்தில் பலருடன் நீ பேசிக்கொண்டிருப்பாய். நான் எனக்குள் உன்னை நிரப்பிக்கொண்டிருப்பேன்.

உனக்கும் எனக்குமான சங்கேதங்களையும் தாண்டி வளர்ந்தது காதல். அறிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லவும் விரும்பவில்லை.

இரகசியங்களோடு துளிர்ந்த காதல் மரணத்தின் இறுதி மூச்சோடு மாண்டுபோகட்டும்.”

வெளியில் சொல்லமுடியாமல் மனதுக்குள் உதிர்ந்துபோன வசனங்கள் இவை.

சந்திப்பேன்.
நிச்சயமாக சந்திப்பேன்.

வெற்றுக் காகிதப் பைக்குள் காரணமே தெரியாமல் தங்கியிருக்கும் காற்று போல் ஏதோ ஒன்று எனக்குள் இருக்கிறது. காட்சிப்படுத்தல்களுக்குள் அடங்காத உருவமோ உருவகமோ படுத்த முடியாமல் இருப்பதை அவளிடம் ஒப்புவிப்பேன்.

அனுமானிக்க முடியாதளவு அன்புவைத்து அனுமதி கேட்காமல் உன்னை என்னுள் தங்க வைத்தமைக்காக நீ தூற்றப்போகும் அந்த நாளுக்காக காத்திருப்பேன்.

உன் தூற்றுதல்களையும் நான் சேமித்துவைத்து நினைத்துக் கரைந்துபோவேனோ என அப்போதும் என்மனம் சொல்லியது.

நிஜங்களை அறுத்துவிட முடியும். எங்கே போடுவது? மீண்டும் மனதுக்குள்ளா?

(தொடர்ந்தும் பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..