Todays Date:

உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு

அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.

அடுத்ததாக அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி யார் கொலை செய்தார்கள்?

அப்போது தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கு திருகோணமலை செய்தியாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் துணிவாக செய்திகளை அவர் தந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவரிடம் தொடர்புகொண்டு நடந்தவற்றை விபரிக்குமாறு கேட்டோம்.

“திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் இந்த மாணவர் குழாம் மாலை வேளையில் கூடிக் களித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர் அவர்கள் மீது கைக்குண்டை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பிறகு அங்கு வந்த கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்” என்றார் சுகிர்தராஜன்.

உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைத்ததுடன் நடந்தவற்றை தெளிவாக எழுதியிருந்தார்.

உண்மைகள் வெளிவந்ததால் இந்தச் சம்பவம் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹர்த்தால், சோக தினம் என அடுத்தடுத்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் அதே மாதம் 24 ஆம் திகதி எமக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. “சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்”.

நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திறமையான ஊடகவியலாளர்கள் பலரை தமிழ்ச் சமூகம் இழந்திருக்கிறது. அதனால் சமூகம் அடையவிருந்த எழுச்சியில் தொய்வு ஏற்பட்டது என்று சொல்வதில் தவறில்லை.

இலங்கை மண் இழந்த ஊடகவியலாளர்களில் சுகிர்தராஜன் என்ற திறமைசாலியை ஊடகச் சமூகம் எளிதில் மறந்துவிடாது.


பெயருக்காகவும் புகழுக்காகவும் ஊடகத்தொழில் செய்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் தான்சார்ந்த சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும், இன்னல்படும் உறவுகளுக்குக் கைகொடுத்து உண்மையை உள்ளவாறே உரைக்க வேண்டும் எனக் கொள்கையோடு வாழ்பவர்கள் இன்றும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவ்வாறு தீர்க்கமான கொள்கையுடைய சுகிர்தராஜனின் இழப்பால் திருகோணமலை மண்ணின் பல்வேறு உண்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் மறைத்திருக்கின்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் அவரது படுகொலையின் பின்னர் ஏனைய ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவரத் தயங்கினார்கள். சுகிர்தராஜனைப் போல இளவயதில் மரணத்தை எதிர்நோக்க பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

வார்த்தையை வார்த்தையால் எதிர்நோக்க வேண்டும். பலவீனத்தை பலத்தால் எதிர்நோக்குதல் தவறு என அவரது கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிட்டதுண்டு.

சுகிர்தராஜனைப்போன்ற ஊடகவியலாளர்கள் அரிதாகவே சமூகத்தில் இனங்காணப்படுகிறார்கள்.

சுகிர்தராஜனின் வெளிப்படையானதும் நியாயமானதுமான எழுத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத விஷமிகளால், பேனா முனையால் எதிர்கொள்ள முடியாத தீய சக்திகளால் அவர் ஆயுதமுனையில் கொல்லப்பட்டார்.

தனது 37 ஆவது வயதில் குடும்பம், பிள்ளைகள் பரிதவிக்க உயிர்நீத்தமையும், உறவினர்கள் கதறியழுதமையும் கொலைகாரர்களை எந்தவிதத்திலும் பாதித்திராது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

அந்தச் சோகம் மறைந்துபோகட்டும் ஜனநாய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் கொலையுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தத்தானே போகிறது என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில் 18 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேரின் கொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்?

சம்பந்தப்பட்டவர்கள் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்ல முன்வருவதில்லை. விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறியே காலம்கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதேநேரம், உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்படவில்லை.

காலம் பதில்சொல்லும் என ஆறுதல்கொண்டு கசப்பான உண்மைகளை மறந்துவிடவும் முடியாமல் சுகிர்தராஜன் பற்றிச் சிந்திக்கையில் எதிர்காலத்தின் மீதான ஏக்கப்பார்வையில் ஜனநாயகம் நிறம்மாறித்தான் தெரிகிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..