Todays Date:

மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (யாழில் ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக்குரல்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது.

சிறு தூறல்களைக் கூட தாங்கிக்கொள் ளாத குடிசைகள், மணலில் விழுந்த இனிப் பையும் விட்டுவைக்க மறுக்கும் பள்ளிக்குச் செல்லாத சிறுவர் கூட்டம், அரை வயிறும் அன்றாட தொழிலும் எனக் காலம் கழிக் கும் பெற்றோர் என நகர்கிறது அவர்களின் வாழ்க்கை.

அந்த கிராமத் துக்கு அருகில் இனந் தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து கேட் பார் யாருமில்லை என்றும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் எமக்குக் கூறினார்.

அங்கு நாம் சென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் கறுப்புப் புள்ளியை அடை யாளம் காட்டுவதாக இருந்தன.
கிராமத்தை அண்மித்தபோது இராணு வத்தினர் சிலர் 10 முதல் 14 வயது நிரம் பிய சிறுவர்களிடம் ஏதோ விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.

அந்தச் சிறுவர் கள் எங்கிருந்தோ பசுமாடு ஒன்றை திருடி வந்துள்ளனர். அந்தச் சிறார்கள் மாடு வெட்டுவதற்காக ஒரு குழுவினரால் பயன் படுத்தப்படுவதாக   இராணுவத்தினர் எமக்குக் கூறினர்.

மாடு வெட்டுவதற்கு சிறுவர்கள் பயன் படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட் டிய இடம் கிராமத்துக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த கட்டடம்.
நூற்றுக்கணக்கான காகங்கள் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வட்டமிட்டுக்  கொண்டி ருந்தன. இறைச்சிக்காக நாய்கள்கூட்டம் சண்டையிடும் காட்சியையும் காணக் கூடியதாக இருந்தது.


இனந்தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படும் இடம் எனக் கூறப்பட்டது அந்த இடம்தான் என நாம் ஊகித்துக்கொண்டோம்.
அந்தக் கட்டடம் மாடுகள் வெட்டுவதற்காக நகரசøபியனரால் அமைத்துக்கொடுக்கப்பட்டது என கிராமத் து மக்கள் கூறினார்கள்.    கயிறுகள்,  கத்திகள் தண்ணீர்த் தொட்டி என அனைத்துமே அதற்கான அடையாளங்களைக் காட்டின.

இதேநேரம், எமக்கு உதவியாக வந்த அந்தக் கிராமத்துக் குடும்பஸ்தர் கூறிய தகவல்கள் உண்மை நிலையை எடுத்துக்கூறின.

ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 69 வயதான அந்தக் குடும்பஸ்தர் அங்கு நிஜமாகவே என்ன நடக்கிறது என்பதைக் கூறினார்.


"இந்தக் கிராமத்தில உள்ள நிறையப் பேர் நகரசபையிலதான் வேலை செய் யினம். எங்களுக்கு காசு தேவை என்றத சாதகமாகப் பயன்படுத்தும் பலர் இங்க விபச்சாரம் நடப்பதை சொல்ல வேண்டாம் எண்டு சொல்லி பணம் தருவாங்க.

நாங்க ஏழைகள் எண்டும் எமக்குக் காசு தேவை யெண்டும் அவங்களுக்கு நல்லாத் தெரி யும்.
இரவானதும் பொம்பிளைகளின்ற நடமாட்டமாகவே இருக்கும்.

இப்படியிருக் கும் திறந்த வெளியில் (கையை காட்டுகிறார்) உறவு வச்சுக் கொள்ளுவினம்.

கிராமத்து ஆட்கள் யாராவது பார்த்திட்டா பணம் கொடுத்திட்டு போயிடுவினம். சிலர் தாம் "ஆமி' என்று சொல்லுவினம். உண்மை எதுவெண்டு எமக்குத் தெரியாதுதானே?.

ஒருநாள் இங்க 2 பேர் வந்தினம். சிங்களத்தில பேசிச்சினம். இங்க உள்ள குடிசைக்குள்ள புகுந்து ஒரு பெண்ணை வரச்சொல்லி பலவந்தமா கூப்பிட்டாங்க. கிராமத்து மக்கள் எல்லாம் கூடினதும் அங்கிருந்து போயிட்டாங்கள்.

இந்த பில்டிங்ல மாடு வெட்டுறது உண்மதான். சின்னப் பொடியன்களுக்கும் நல்ல பழக்கம் உண்டு. அதவிட இந்த விஷயம் தான் அதிகமா நடக்குது. எங் களுக்கு அரசியல்ல யாரையும் தெரியாது. வெளியில சொல்லவும் பயமா கிடக்குது.
இது இவ்வளவும் நான் சொன்னேன் எண்டு தெரிஞ்சா அடுத்த முற நீங்க வரும்போது நான் இருப்பேனோ தெரியேல" என அடுக்கடுக்காச் சொல்லி முடித்தார்.

அந்த கட்டடத்தைச் சுற்றிப் பார்த்ததில் ஆங்காங்கே உள்ளாடைகள் வீசப்பட்டும் கழிவுப்பொருட்களோடு“ துர்நாற்றமும் வீசிக்கொண்டிருந்தது.
அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த் தலைமைத்துவங்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இவ்வாறான ஏழை மக்களின் உரிமை களுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் குரல்கொடுக்க அப்பகுதி தலைமைத்துவங்கள் முன்வரவில்லை என்பதே கிராமத்து மக்களின் குற்றச்சாட்டு.

தாங்கள் ஏழைகள், தங்களின் குரலை மதிப்பார் யாருமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை அங்குள்ள கிராமத்து மக்கள் நீக்கிக்கொள்ள வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை.

அதேநேரம், நீண்டகாலமாக அப்பகுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும் எங்கிருந்தோ பெண்கள் அழைத்துவரப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.

அந்தக் கட்டடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாயின் அது இராணுவத்தினருக்குத் தெரியாமல் உள்ளதா என்பதும் ஒருபுறம் கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆரோக்கியமான உடலாயினும் சிறியதொரு நச்சுமுள் ஆயுள்வரை ஆரோக்கியத்தைக் கெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மரணத்துக்கு இட்டுச்செல்வதைப்போல இந்தப் பிரச்சினையும் சமுதாயத்தின் போக்கை மறுதிசையில் மாற்றிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது.

இதுகுறித்து சாவகச்சேரி மாநகரச பையினரும் பொலிஸாரும்   உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியமும் கட்டாயமானதுமாகும்“.அத்துடன்“ பகிரங்கமாக செய்யப்படும் தவறுகள் சுட்டிக்காட்டப்படாவிடின் அப்பகுதி மக்களின் எதிர்காலம் இருள் நிறைந்ததாகவே இருக்கும் என்பது கண்கூடு.
இந்தக் கிராமத்து மக்களின் நலன்கருதி உரிய தரப்பினர் சரியான தீர்வினை முன்வைக்க வேண்டியது இன்றைய காலத்தின் அத்தியாவசியத் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா VIII

ஆர்ப்பரிப்பான வார்த்தைகள் எதுவுமின்றி மெல்ல மெல்ல எமது உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஒளியிடையே மேகங்களும் அப்படித்தான் நடைபோட்டுக்கொண்டிருந்தன.

அவளுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் தூங்கிப்போனேன்.

அதிகாலையிலும் அவளது அழைப்பு

“என்ன இன்னும் நித்திரையா”

“ஆமாம். தேவி என்னை இறுக அணைத்துக்கொண்டதால் எழ முடியவில்லை”

“என்ன? யார் அந்த தேவி?” (வார்த்தையில் கோபம் தெரிந்தது)

“ம்ம்ம்…அவள் பெயரைச் சொன்னால் கோபிக்கக் கூடாது”

“கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்”

“நித்ரா தேவி”

மெல்லச் சிணுங்கிக் கொண்டாள்.

சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய பொழுது.

அடிக்கடி அவளைச் சந்திக்காமலும் இடையிடையே பேசி இன்னல்தராமலும் நாட்கள் கழிந்தன.

அவளிடமிருந்து நிறைய நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

புத்தகத்துக்கு ஒத்தகருத்து நூல் என சிறுவயதில் படித்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் பக்குவப் பாதைக்குத் திரும்பியவுடன் அதன் உள் அர்த்தங்களைப் புரிந்துகொண்டேன்.

நல்லவிடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான் கூடாத விடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான். ஆனால் நல்ல விடயங்களை மாத்திரம் சொல்பவை நூல்கள்.

அவள் நல்ல விடயங்களை எனக்குச் சொல்லித்தந்தாள்.

ஆசானுக்கு ஒத்த கருத்து குரு என ஆரம்பகாலங்களில் கற்றிருக்கிறேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அதிலும் உள் அர்த்தம் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.

ஆசான் என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என நல்வழி காட்டுபவர். குரு என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்துகாட்டுபவர்.

ஒருவகையில் எனக்கு அவள் குருவாக இருந்தாள்.

எனது பயணம் சரியானதா? இலட்சியத்துக்கான பாதையிலிருந்து விலகியிருக்கிறேனா? யாருக்குத் துன்பம் விளைவித்தேன்? என்ன நல்லது செய்திருக்கிறேன்? என்றெல்லாம் நான் அடிக்கடி தனிமையில் யோசிப்பதுண்டு.

(ஒவ்வொரு நாள் நித்திரைக்கு முன்பும் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்னுடைய குரு எனக்குப் போதித்திருக்கிறார். நான் தினமும் செய்வதில்லை)

அப்படிச் சிந்திக்கையில் ப்ரியாவுடனான உறவு நிரந்தரமாக அமையாது என என் ஆழ்மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.

ஒரு பட்சம் முழுவதும் அவளுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும் என எண்ணினேன்.

(பதினைந்து இமைத்தல்கள் அல்லது பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை – காஷ்டைகள் முப்பது கொண்டது ஒரு கலை – கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம் - முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை – முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் - நாள் பதினைந்து கொண்டது ஒரு பட்சம்)

அவளிடமிருந்து விலகியிருந்த நாட்கள் நான் வாழ்க்கையில் மீட்டுப்பார்க்க விரும்பாதவை.
ஓர் இராஜ யானை தனது வலது முன்னங்காலால் என் இதயத்தை மிதிப்பது போல அடிக்கடி துடிப்பு.

பல்லாயிரம் ஊசிகளால் என் ஒவ்வொரு கலங்களும் துளையிடப்படுவதாய் உணர்வு.

ஆழமாயும் அகலமாயும் இதயம் முழுவதும் இடம்பிடித்து காதலின் அத்தனை அர்த்தங்களையும் என்னுள் விதைத்தவளின் நினைவுகளை ஒரு பட்ச காலத்தில் எப்படிப் புதைப்பது?

இமைக் கூடங்களில் சிறையிருக்கும் ஓரப்பார்வையையும் புன்முறுவலையும் நினைத்தமாத்திரத்தில் எங்கே விடுவிப்பது?

காதுமடல்களில் அடிக்கடி ஒலிக்கும் நளினக்குரலை எப்படி ஒடுக்குவது?

ஆம்..! காலம் பதில்சொல்லும் எனக் காத்திருந்தபோது உண்மையாகவே நாம் பிரிய நேரிட்டது.

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா VII

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் கலந்தனவே”

இது குறுந்தொகைப் பாடல்.

நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நீயும் நானும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றையொன்று பிரிக்க முடியாததுபோல, நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்துவிட்டனவே என்கிறது அதன்பொருள்.

உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்த வரிகள் இவை.

மலர்ந்த முகமும் தலைசாய்த்ததான ஓரப்பார்வையும் பிடிமானத்தை மேலும் அதிகரித்தன. ஏதேதோ பேசினோம் - பகிர்ந்துகொண்டோம். ஆயினும் முழுமையாக முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொள்வதற்கு மனம்துடித்ததேயன்றி இலாவகமாய் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

சுவைசொட்டும் பள்ளிக்காலங்களையும் விட்டு விலகாத பாழ்ய நினைவுகளையும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டதில் முழுத் திருப்தி.

படித்தவள் - பெருந்தன்மையில்லை
பண்பானவள் - பொறாமைகளில்லை
அன்பானவள் - ஆடம்பரங்களில்லை

சாந்தமான பார்வைகளால் சங்கேதங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

கடிகார முள் தடைபட்டாலும் நேரத்தை விஞ்ச முடியாத துர்பாக்கியசாலிகளாய் நிறைய எதிர்பார்ப்புகளோடும் - நிறைவான பொழுதுகளைக் கழித்த திருப்தியோடும் விடைபெற்றுக்கொண்டோம்.

பெண்ணுக்குத் தையல் என்றொரு மறுகருத்துண்டு. பிரிந்த உறவுகளை இணைத்தல், உடைந்துபோன மனதை ஒத்தடமாய் மாற்றியமைத்தல் போன்றவற்றை அன்போடு செய்விப்பதால் இந்தப்பெயருண்டு என எங்கோ படித்த ஞாபகம்.

மெய்தான்.

தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து பல்திசைகளுக்குச் செல்லும் அலைகள்போல ஆற்றாமை எனும் இயலாமையால் சிதறிப்போன மனதோடு வந்த எனக்கு ஆறுதலாய் அவளும் அந்தச் சந்திப்பும் மாறியிருந்தது.

காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?

வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?

இவை அன்றிரவு என் பாமர உள்ளம் உதிர்த்த வரிகள்.

எப்போதும் இணையமுடியாது எனத் தெரிந்தும் குரங்கு மனது எப்படியெல்லாம் அலைபாய்கிறது? வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்றா?

நிலையாமை பற்றிக் கற்றறிந்தும் இந்த விடயத்தில் பக்குவம் என்பக்கம் வராமைக்குக் காரணம் என்ன?

இப்படியும் நான் சிந்திக்கையில் அதையும் தாண்டி என் ஜீவனின் ஆனந்த நரம்புகளில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது ப்ரியாவின் பிஞ்சுக் குரல்.

என்னைத் தாண்டிய மாற்றுச்சூழலுக்குள் மீண்டும் லயித்துப்போகிறேன்…. அதன்பின்வந்த ஜாமங்கள் எப்படிக் கழிந்ததென்பதை வெளிச்சொல்ல எத்தனிக்கையில் ஓர் அசட்டு வெட்கம் கட்டிப்போடுகிறது.

அமைதியாய் இருந்த என்னுடைய தொலைபேசிக் குழந்தை இரவு 11 மணிக்கு அழுதது. அவள் இலக்கத்தைப்பார்த்து இயல்பாய் உதடுகள் புன்முறுவலைப்பிரசவிக்க “ஹெலோ” என்றேன். 30 செக்கன் மௌனத்தின் பிறகு “கனவுபோல் இருக்கிறது” என ஆரம்பித்தாள்…

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..

காலம் கடந்தும் வாழும் 'காதல்' எனும் மந்திரச்சொல்..!

அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத்தூண்டும் ஆழத்தோடான புனிதமான உறவு காதல்.

இந்தக் காதலுக்கு மகுடம் சூட்டும் நாளாக மேலைநாட்டுக் கலாசாரத்தில் உருவானது தான் காதலர் தினம். ஒவ்வொரு வருட பெப்ரவரி 14 ஆம் திகதியும் கொண்டாடப்படும் காதலர் தினம் கீழைத்தேச இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்துவருகிறது. வியாபார நோக்கில் மேலைத்தேயர்களின் சுயதந்திரத்துக்காக உருவாக்கிய தினம் என்றும் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது என்றும் குறிப்பிட்ட சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் காதல் என்பதை கறுப்புக்கண்ணோட்டத்தில் பாராமல் ஆழமான அன்பின் அடித்தளமாக நோக்குபவர்கள் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
காதலர் தினம் உருவான விதம் பலவிதமாக கூறப்படுகிறது. செவி வழியிலான கதைகள் அதிகம் பேசப்படுவதுடன் ரோமானிய பாதிரியாரின் கதை எழுத்துருவில் உள்ளதாக கூறப்படுகிறது.

கி.பி. 270 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் ரோமானியாவை ஆண்ட சக்கரவர்த்தி அங்கு நடைபெறும் திருமணங்களுக்குத் தடைவிதித்திருந்தான். ஆண்கள் பெண்களைப் பார்த்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதனை மீறியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுவந்தது. ஆண்கள் காதலிப்பதால், மணம் செய்வதால் இராணுவத்தில் சேர்வதில்லை என்றும், இது ரோமானிய இராணுவத்தை பலப்படுத்துவதற்கான திட்டம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வலண்டைன் என்ற பாதிரியார், சக்கரவர்த்தியின் கட்டளையையும் மீறி பலருக்குத் திருமணம் செய்துவைத்தார். காதலர்களை சேர்த்துவைத்ததால் பாதிரியார் மீது அந்த மக்கள் அதிக அன்பு கொண்டிருந்தனர். இதனை அறிந்துகொண்ட சக்கரவர்த்தி சிறைத்தண்டனை வழங்கியதாகவும் பெப்ரவரி 14 ஆம் நாள் அவரை கல்லால் அடித்து சித்திரவதை செய்து கொன்றதாகவும் சொல்லபபடுவதுடன் காதலர்களின் அன்பை மதித்தமையால் வலண்டைன் பாதிரியார் இறந்த தினம் பின்னாளில் வலண்டைன் எனும் காதலர் தினமாக அது அறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் காதல் என்பதற்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை நாமறிவோம். காதல் என்ற விடயத்தைப் பற்றிக் கதைத்தாலே பெற்றோரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்பது காலத்தால் மாற்றமடைந்த ஒன்றாகும். கலாசராத்தோடு ஒன்றி வாழ்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு தவறான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது.

பொருத்தமான துணையை பொருத்தமான மறு துணை அடைவதில் தவறில்லை. அவ்வாறு தேர்ந்தெடுப்பதில் தான் பிரச்சினை இருக்கிறது. பள்ளிப்பருவ காதல், பஸ்தரிப்பிடக் காதல், முன்வீட்டுக்காதல், மொட்டை மாடிக்காதல்… என நினைத்த மாத்திரத்தில் காதல்கொண்டு புணர்ந்து காணாமல்போவதற்குப் பெயர் காதல் அல்ல. அன்பின் புனிதத்துவம் கெடாமல் காலம் உணர்ந்து காத்திரமான உறவாக வளர்ந்து புரிந்துணர்வு விட்டுக்கொடுப்புடன் மிளிரும் காதல் பெற்றோருக்கும் கட்டுப்படும் என்பதில் ஐயமில்லை.

தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம் முதல் ஐம்பெருங்காப்பியங்கள் அடங்களாக இலக்கியங்கள் இதிகாசங்கள் காதலையும் காதலின் உணர்நிலையை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. ‘காலத்தின் கண்ணாடி இலக்கியம்’ என்பார்கள் அவ்வாறின், காதல் பழங்காலம்தொட்டு மனித உள்ளங்களில் நின்று நிறைகின்றமை தெரிகிறது.

ஆக, காதலிப்பது தவறா? காதல்கொள்வது தவறா? அல்லது காதல் தவறா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாணவேண்டிவருகிறது. காதல் தவறு என்பது எங்கினும் குறிப்பிடப்படவில்லை. அது தவறு என்று சொல்வதற்கும் இல்லை. திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போன்று முகம்காணாத ஒருவரை இலேசாக உரசிச்செல்லும்போது கண்ணும் கண்ணும் பார்த்துக்கொண்டு மறுநாள் காமத்தில் மூழ்கிவிடுவது தவறான கண்ணோட்டடாகும்.
வெறுமனே பார்த்தல், பழகுதலில், பேசுதல் மாத்திரமன்றி ஒருவருக்கொருவரின் புரிந்துணர்விலும் விட்டுக்கொடுப்பிலும் காதலின் அடித்தளம் அமைகிறது. இது திருமணத்தின் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். திருமணத்தின் முன்னர் தான் காதல் என்றும் காதலின் இலட்சியம் திருமணம் தான் என்பது பல இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது. உண்மையான காதல் மரணித்தும் கூட வாழ்கிறது. ஏனென்றால் உயிரில், உணர்வுகளில் உயிரோட்டமாய் மாறி மனதின் அத்தனை மையங்களையும் அன்பால் கட்டுறச்செய்து சுவாசம் போன்று தொடரும் காதல் மரணித்த பின்னும் மணம் கொள்கிறது.

ஒவ்வொரு இளைஞனுக்கும் இலட்சியம் உண்டு. அந்த இலட்சியத்துக்காக பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கிடையில் உருவாகும் காதல் அவர்களுடைய உயர்ந்த இலட்சியத்தை பாதிக்குமாக இருந்தால் அல்லது அந்த இலட்சியத்துக்கு முழுத்தடையாக இருக்குமென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காதல் செய்யும்போது தம்மை காவியங்களின் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நினைத்து யதார்த்தத்தை மறந்து களிக்கும் காதலர்கள் எத்தனை பேர் தமது இலட்சியம் பற்றிச் சிந்திக்கிறார்கள்?
மற்றும் காதலர்களின் வழியில் பெற்றோரை எதிரிகளாக பார்ப்பதும் பெற்றோர் காதலை நஞ்சென்று நோக்குவதும் பற்றி பார்த்தல் வேண்டும்.

குழந்தை பிரசவமானதும் தாயானவள் அந்தக் குழந்தையை பற்றியும் அந்தக் குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் கனவு காண்கிறாள். தந்தையின் கடமை குறித்தும் உணர்கிறார்கள். இந்நிலையில் பிள்ளை வளர்ந்ததும் காதல் கொள்வதால் தவறான வழிக்கு இட்டுச்செல்லப்படுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதுவே பின்னாளில் எதிர்ப்பாக மாறுகிறது. திரைப்படங்களில் காதலையும் காதலர்களையும் ரசிக்கும் பெற்றோர் நிஜ வாழ்க்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனினும் ஆழமான அன்பினை வெளிப்படுத்துவதாக அமைந்து பெற்றோர் கண்ட கனவு களையாத விதத்தில் தேடப்பட்ட துணையை பெற்றோர் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதே நேரம், பெற்றோரின் மனநிலை பாதிக்கப்படாத விதத்தில் தமது காதல் துணையை தேடிக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இவ்வளவு காலம் குறையின்றி, பேணிப்பாதுகாத்த பெற்றோரின் மனம் காதலால் நோகடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
மேல்நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது காதலர் தினம் என்கிறோம். இதில் நல்லவற்றை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் என்ன? வெறும் விளம்பரங்கள், பரிசுப்பரிமாற்றங்களை விட தாம் கொண்டுள்ளது உண்மையான காதலா? அதன் நோக்கம் என்ன? அதனால் இலட்சியம் பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி சுயமதிப்பீடு செய்யும் நாளாக இதனைக் கொள்ளலாம் அல்லவா?

ஆம். காதலின் அழகு மனக்கண்ணுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஊடல்கூட குதூகலமான இன்பத்தை தருகிறது. இனிமையான பொழுதுகளைத் தருகிறது. வாழ்க்கையை ரசிக்கத் தூண்டுகிறது. உழைப்பில் ஈடுபடுத்துகிறது.

இதயத்தின் ஆணிவேர் வரை சென்று ஒவ்வொரு நமிடங்களையும் ரசனை நிறைந்த ரம்மியமான பொழுதுகளையாய் கழியச்செய்யும் காதலின் மகத்துவம் உணர்ந்து புரிதலோடு தொடர்வோம்.
காதலர் தினம் இன்பம் நிறைந்ததாகட்டும்.

அருகருகே வரையப்பட்டாலும்
சேர முடியாத சித்திரங்களாய்
நாம்

அத்திபாரமாய் இருக்கிறது
காதல்
அனைத்தையும் தாங்கிக்கொள்ள
இருக்கிறாய்
நீ

நாம்
என்பதை ஏற்றுக்கொள்ளும் வரை
காலத்தோடு பயணிப்போம்

காதல்
காலம் கடந்தும் வாழும்

விரிவாக படிக்க ……..

உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு

அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.

அடுத்ததாக அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி யார் கொலை செய்தார்கள்?

அப்போது தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கு திருகோணமலை செய்தியாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் துணிவாக செய்திகளை அவர் தந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவரிடம் தொடர்புகொண்டு நடந்தவற்றை விபரிக்குமாறு கேட்டோம்.

“திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் இந்த மாணவர் குழாம் மாலை வேளையில் கூடிக் களித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர் அவர்கள் மீது கைக்குண்டை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பிறகு அங்கு வந்த கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்” என்றார் சுகிர்தராஜன்.

உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைத்ததுடன் நடந்தவற்றை தெளிவாக எழுதியிருந்தார்.

உண்மைகள் வெளிவந்ததால் இந்தச் சம்பவம் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹர்த்தால், சோக தினம் என அடுத்தடுத்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் அதே மாதம் 24 ஆம் திகதி எமக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. “சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்”.

நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திறமையான ஊடகவியலாளர்கள் பலரை தமிழ்ச் சமூகம் இழந்திருக்கிறது. அதனால் சமூகம் அடையவிருந்த எழுச்சியில் தொய்வு ஏற்பட்டது என்று சொல்வதில் தவறில்லை.

இலங்கை மண் இழந்த ஊடகவியலாளர்களில் சுகிர்தராஜன் என்ற திறமைசாலியை ஊடகச் சமூகம் எளிதில் மறந்துவிடாது.


பெயருக்காகவும் புகழுக்காகவும் ஊடகத்தொழில் செய்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் தான்சார்ந்த சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும், இன்னல்படும் உறவுகளுக்குக் கைகொடுத்து உண்மையை உள்ளவாறே உரைக்க வேண்டும் எனக் கொள்கையோடு வாழ்பவர்கள் இன்றும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவ்வாறு தீர்க்கமான கொள்கையுடைய சுகிர்தராஜனின் இழப்பால் திருகோணமலை மண்ணின் பல்வேறு உண்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் மறைத்திருக்கின்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் அவரது படுகொலையின் பின்னர் ஏனைய ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவரத் தயங்கினார்கள். சுகிர்தராஜனைப் போல இளவயதில் மரணத்தை எதிர்நோக்க பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

வார்த்தையை வார்த்தையால் எதிர்நோக்க வேண்டும். பலவீனத்தை பலத்தால் எதிர்நோக்குதல் தவறு என அவரது கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிட்டதுண்டு.

சுகிர்தராஜனைப்போன்ற ஊடகவியலாளர்கள் அரிதாகவே சமூகத்தில் இனங்காணப்படுகிறார்கள்.

சுகிர்தராஜனின் வெளிப்படையானதும் நியாயமானதுமான எழுத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத விஷமிகளால், பேனா முனையால் எதிர்கொள்ள முடியாத தீய சக்திகளால் அவர் ஆயுதமுனையில் கொல்லப்பட்டார்.

தனது 37 ஆவது வயதில் குடும்பம், பிள்ளைகள் பரிதவிக்க உயிர்நீத்தமையும், உறவினர்கள் கதறியழுதமையும் கொலைகாரர்களை எந்தவிதத்திலும் பாதித்திராது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

அந்தச் சோகம் மறைந்துபோகட்டும் ஜனநாய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் கொலையுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தத்தானே போகிறது என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில் 18 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேரின் கொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்?

சம்பந்தப்பட்டவர்கள் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்ல முன்வருவதில்லை. விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறியே காலம்கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதேநேரம், உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்படவில்லை.

காலம் பதில்சொல்லும் என ஆறுதல்கொண்டு கசப்பான உண்மைகளை மறந்துவிடவும் முடியாமல் சுகிர்தராஜன் பற்றிச் சிந்திக்கையில் எதிர்காலத்தின் மீதான ஏக்கப்பார்வையில் ஜனநாயகம் நிறம்மாறித்தான் தெரிகிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

விரிவாக படிக்க ……..