Todays Date:

நிவேதப்ரியா VIII

ஆர்ப்பரிப்பான வார்த்தைகள் எதுவுமின்றி மெல்ல மெல்ல எமது உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஒளியிடையே மேகங்களும் அப்படித்தான் நடைபோட்டுக்கொண்டிருந்தன.

அவளுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் தூங்கிப்போனேன்.

அதிகாலையிலும் அவளது அழைப்பு

“என்ன இன்னும் நித்திரையா”

“ஆமாம். தேவி என்னை இறுக அணைத்துக்கொண்டதால் எழ முடியவில்லை”

“என்ன? யார் அந்த தேவி?” (வார்த்தையில் கோபம் தெரிந்தது)

“ம்ம்ம்…அவள் பெயரைச் சொன்னால் கோபிக்கக் கூடாது”

“கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்”

“நித்ரா தேவி”

மெல்லச் சிணுங்கிக் கொண்டாள்.

சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய பொழுது.

அடிக்கடி அவளைச் சந்திக்காமலும் இடையிடையே பேசி இன்னல்தராமலும் நாட்கள் கழிந்தன.

அவளிடமிருந்து நிறைய நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

புத்தகத்துக்கு ஒத்தகருத்து நூல் என சிறுவயதில் படித்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் பக்குவப் பாதைக்குத் திரும்பியவுடன் அதன் உள் அர்த்தங்களைப் புரிந்துகொண்டேன்.

நல்லவிடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான் கூடாத விடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான். ஆனால் நல்ல விடயங்களை மாத்திரம் சொல்பவை நூல்கள்.

அவள் நல்ல விடயங்களை எனக்குச் சொல்லித்தந்தாள்.

ஆசானுக்கு ஒத்த கருத்து குரு என ஆரம்பகாலங்களில் கற்றிருக்கிறேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அதிலும் உள் அர்த்தம் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.

ஆசான் என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என நல்வழி காட்டுபவர். குரு என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்துகாட்டுபவர்.

ஒருவகையில் எனக்கு அவள் குருவாக இருந்தாள்.

எனது பயணம் சரியானதா? இலட்சியத்துக்கான பாதையிலிருந்து விலகியிருக்கிறேனா? யாருக்குத் துன்பம் விளைவித்தேன்? என்ன நல்லது செய்திருக்கிறேன்? என்றெல்லாம் நான் அடிக்கடி தனிமையில் யோசிப்பதுண்டு.

(ஒவ்வொரு நாள் நித்திரைக்கு முன்பும் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்னுடைய குரு எனக்குப் போதித்திருக்கிறார். நான் தினமும் செய்வதில்லை)

அப்படிச் சிந்திக்கையில் ப்ரியாவுடனான உறவு நிரந்தரமாக அமையாது என என் ஆழ்மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.

ஒரு பட்சம் முழுவதும் அவளுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும் என எண்ணினேன்.

(பதினைந்து இமைத்தல்கள் அல்லது பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை – காஷ்டைகள் முப்பது கொண்டது ஒரு கலை – கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம் - முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை – முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் - நாள் பதினைந்து கொண்டது ஒரு பட்சம்)

அவளிடமிருந்து விலகியிருந்த நாட்கள் நான் வாழ்க்கையில் மீட்டுப்பார்க்க விரும்பாதவை.




ஓர் இராஜ யானை தனது வலது முன்னங்காலால் என் இதயத்தை மிதிப்பது போல அடிக்கடி துடிப்பு.

பல்லாயிரம் ஊசிகளால் என் ஒவ்வொரு கலங்களும் துளையிடப்படுவதாய் உணர்வு.

ஆழமாயும் அகலமாயும் இதயம் முழுவதும் இடம்பிடித்து காதலின் அத்தனை அர்த்தங்களையும் என்னுள் விதைத்தவளின் நினைவுகளை ஒரு பட்ச காலத்தில் எப்படிப் புதைப்பது?

இமைக் கூடங்களில் சிறையிருக்கும் ஓரப்பார்வையையும் புன்முறுவலையும் நினைத்தமாத்திரத்தில் எங்கே விடுவிப்பது?

காதுமடல்களில் அடிக்கடி ஒலிக்கும் நளினக்குரலை எப்படி ஒடுக்குவது?

ஆம்..! காலம் பதில்சொல்லும் எனக் காத்திருந்தபோது உண்மையாகவே நாம் பிரிய நேரிட்டது.

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..

நிவேதப்ரியா VII

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் கலந்தனவே”

இது குறுந்தொகைப் பாடல்.

நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நீயும் நானும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றையொன்று பிரிக்க முடியாததுபோல, நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்துவிட்டனவே என்கிறது அதன்பொருள்.

உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்த வரிகள் இவை.

மலர்ந்த முகமும் தலைசாய்த்ததான ஓரப்பார்வையும் பிடிமானத்தை மேலும் அதிகரித்தன. ஏதேதோ பேசினோம் - பகிர்ந்துகொண்டோம். ஆயினும் முழுமையாக முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொள்வதற்கு மனம்துடித்ததேயன்றி இலாவகமாய் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

சுவைசொட்டும் பள்ளிக்காலங்களையும் விட்டு விலகாத பாழ்ய நினைவுகளையும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டதில் முழுத் திருப்தி.

படித்தவள் - பெருந்தன்மையில்லை
பண்பானவள் - பொறாமைகளில்லை
அன்பானவள் - ஆடம்பரங்களில்லை

சாந்தமான பார்வைகளால் சங்கேதங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

கடிகார முள் தடைபட்டாலும் நேரத்தை விஞ்ச முடியாத துர்பாக்கியசாலிகளாய் நிறைய எதிர்பார்ப்புகளோடும் - நிறைவான பொழுதுகளைக் கழித்த திருப்தியோடும் விடைபெற்றுக்கொண்டோம்.

பெண்ணுக்குத் தையல் என்றொரு மறுகருத்துண்டு. பிரிந்த உறவுகளை இணைத்தல், உடைந்துபோன மனதை ஒத்தடமாய் மாற்றியமைத்தல் போன்றவற்றை அன்போடு செய்விப்பதால் இந்தப்பெயருண்டு என எங்கோ படித்த ஞாபகம்.

மெய்தான்.

தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து பல்திசைகளுக்குச் செல்லும் அலைகள்போல ஆற்றாமை எனும் இயலாமையால் சிதறிப்போன மனதோடு வந்த எனக்கு ஆறுதலாய் அவளும் அந்தச் சந்திப்பும் மாறியிருந்தது.

காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?

வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?

இவை அன்றிரவு என் பாமர உள்ளம் உதிர்த்த வரிகள்.





எப்போதும் இணையமுடியாது எனத் தெரிந்தும் குரங்கு மனது எப்படியெல்லாம் அலைபாய்கிறது? வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்றா?

நிலையாமை பற்றிக் கற்றறிந்தும் இந்த விடயத்தில் பக்குவம் என்பக்கம் வராமைக்குக் காரணம் என்ன?

இப்படியும் நான் சிந்திக்கையில் அதையும் தாண்டி என் ஜீவனின் ஆனந்த நரம்புகளில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது ப்ரியாவின் பிஞ்சுக் குரல்.

என்னைத் தாண்டிய மாற்றுச்சூழலுக்குள் மீண்டும் லயித்துப்போகிறேன்…. அதன்பின்வந்த ஜாமங்கள் எப்படிக் கழிந்ததென்பதை வெளிச்சொல்ல எத்தனிக்கையில் ஓர் அசட்டு வெட்கம் கட்டிப்போடுகிறது.

அமைதியாய் இருந்த என்னுடைய தொலைபேசிக் குழந்தை இரவு 11 மணிக்கு அழுதது. அவள் இலக்கத்தைப்பார்த்து இயல்பாய் உதடுகள் புன்முறுவலைப்பிரசவிக்க “ஹெலோ” என்றேன். 30 செக்கன் மௌனத்தின் பிறகு “கனவுபோல் இருக்கிறது” என ஆரம்பித்தாள்…

(தொடர்ந்து பேசுவேன்…)

விரிவாக படிக்க ……..