Todays Date: 4/8/125
Todays Time: 9:12 P.M.

இனி எனக்கு தனியுலகம்!

வான்மழைக்குப் பதிலாக பெரும்பாறைகள் விழுந்து என்னைப் பதம்பார்ப்பதுபோல உணர்வு. வலிகளைத் தாங்கித் தாங்கிப் பழகிப்போன எனக்கு இதுவொன்றும் புதிதல்ல.
எனினும் இந்த வலி வித்தியாசமானது.
கண்களை மூடிக்கொள்கிறேன் -
மௌனம் பரந்திருக்கும் இதயத்தில் ஏதோ இனம்புரியாதவொரு அழுத்தம் முழு உடம்பையும் பயமுறுத்துகிறது.
இரத்தம் ஓடும் இடமெல்லாம் அக்கினிப் பாய்ச்சல் போன்று சுடுகிறது.
நான் எதிர்பார்ப்புகளைத் தொலைத்து இரண்டு நாட்களாயிற்று! என் முழுமையான அன்பை கைவிட்டு பல மணிநேரங்களாயிற்று! என் காதல் இப்போது என்னிடத்தில் இல்லை! என் கற்பனைகள் என்னை ஏளனமாய் பார்க்கின்றன!
நான் எப்போதும் தனிமையாக இருந்ததில்லை. அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டு பள்ளிப்பருவ மாணவனைப்போல சந்தோஷமாய் சுற்றித்திரிந்திக்கிருறேன்.
நிழலைப்போல தொடர்ந்தவள் - நம்பிக்கை தந்தவள்- வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியவளை ஆற்று மணலில் கீறிவிட்டு வந்திருக்கிறேன்.
அந்தச் சித்திரமும் அழிந்து இரண்டு நாட்களாயிருக்கும்!
கீழே விழுந்தால் ஏற்படும் வலிக்கும் மனதில் ரணத்தினால் ஏற்படும் வலிக்கும் வித்தியாசம் உண்டு.
நான் இரண்டாவது வலியால் தவிக்கிறேன். இதற்கு காலம் பதில் சொல்லாது. சொல்லவும் முடியாது.
எந்த வலிக்கும் ஒத்தடமாய் இருந்த அவள் அன்பு, அவள் குரல், அந்தச் சிரிப்பொலியை இனி மீட்டுப்பார்க்க முடியுமே தவிர கேட்டு ஆறுதல் கொள்ள முடியாது.
இது மிக தீர்க்கமான பொழுது - என் தனிமையில் அதுவும் கண்களை மூடிக்கொண்டு என் இதயத்தைப் பார்க்கும் தருணம்!
அவள் நினைவுகளால் நிரப்பப்பட்ட இதயம் துடித்துக்கொண்டிருக்கிறதே தவிர இயக்கத்தில் இல்லை.
பொய்யானதை நாம் எப்போதும் நம்புவதில்லை. இந்த உடம்பும் ஒரு பொய்தானே? உடல் கூட உயிர் என்ற ஒன்றோடு எத்தனை காலம் தான் இருக்கும்? அதற்குக் கூட பிரிவு உண்டுதானே?
எல்லாம் மாயை.
அவளைப்போல நானும் இனி மாயையை நம்பப்போவதில்லை.
பிரிவுக்கான அத்தாட்சிப் பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கு நல்லதொரு சான்றிதழ் எனக்கு கிடைத்தாகிவிட்டது.
நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்புக்கும் அரவணைப்புக்கும் இருப்புக்கும் இடம் கிடையாது- இடம் இருக்காது.
அவளையே சுற்றிச்சுற்றி வந்த என் இதயம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறது.
எத்தனையோ வலிகளைச் சுமந்துகொண்டிருக்கும் இதயத்துக்கு ஓய்வுகொடுக்க நானும் ஆசைப்படுகிறேன்.
பழையபடி என் தனிமையோடு பயணிக்கிறேன்..!
இனி எனக்கு தனியுலகம்.
யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் எதுவும் கேட்கப்போவதில்லை. கட்டளைகள் - தண்டனைகள் இனியில்லை.
எங்கோ ஒரு சமூகம் என் சேவைக்காக காத்திருக்கிறது. என் கடமையை நான் செய்யத் துணிகிறேன்.
நான் பொய்யானவன் இல்லை என்பதை அவள் அறிந்துகொள்ள சில காலம் எடுக்கலாம். அது கைகூடி வரும்போது. என் வாழ்க்கை காலாவதியாகியிருக்கும்.
இது - என் எழுத்தின் திறமைய காட்டுவதற்கான, போலியான கடிதம் அல்ல.
என்னைச் சொல்வதற்கான பதிவு மாத்திரமே.
இங்கு யாரும் குற்றவாளிகள் அல்லர்.
இந்தப் பதிவில் யாரும் விளிக்கப்படவில்லை. ஆதலால் பதிலை எதிர்பார்க்கவும் இல்லை

0 comments: