Todays Date:

'வீர இளைஞர்களின் மகாத்மா'



12.01.2009 – சுவாமி விவேகானந்தரின் 146 ஆவது ஜனனதினமாகும்.

(பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும் - சுவாமி விவேகானந்தர்)

“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் வீரவரலாறு மிகச்சுவையானது. அவர் பட்ட கஷ்டங்கள் நேர்ந்த இன்னல்கள் எல்லாவற்றையும் உடைத்தெரிந்து மின்னிமிளிர்ந்து புதிய பாதைக்கு வழிகாட்டிய பெருந்துறவி.
எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் 146 ஆவது ஜனன தினம் நாளை அனுட்டிக்கப்படுகிறது.

நரேந்திரன் என்ற இளமைக்கால பெயர்கொண்ட சுவாமி 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்தார். சிறுபராயம் முதலே பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய நரேந்திரனிடம் காணப்பட்ட பிரகாசமான கண்கள் மகான் ஆகப்போவதை முன்னதாகவே சுட்டுவதாய் அமைந்திருந்தன.

கடவுள் எப்படிப்பட்டவர்? எப்படியிருப்பார்? எப்படிக்காட்சி தருவார்? போன்ற கேள்விகள் நரேந்திரனிடம் இயல்பாகவே காணப்பட்டன. காலப்போக்கில் இந்தக் கேள்விகளுக்கு விடைகண்ட பிறகுதான் மறுவேலை என்ற நிலைக்கு நரேந்திரன் மாறிவிட்டார்.
அப்போது சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேந்திரன் கடவுளைப் பற்றி அறிவதற்காக அவரிடம் செல்கிறார். நரேந்திரனைக் கண்டவுடனேயே முன்பலகாலம் நட்பிருந்ததுபோல பேசிய இராமகிருஷ்ணர், ‘உனக்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். ஏன் தாமதமாக வருகிறாய்? என்னோடு வா’ என அணைத்துக்கொள்கிறார். இராமகிருஷ்ணரின் தீர்க்கதரிசனத்தில் நரேந்திரனைப் பற்றி அவர் அறிந்துகொண்டார்.

அதன் பின்னர் கடவுளைப் பற்றி இராகிருஷ்ணர் கூறிய பல விடயங்கள் நரேந்திரனை சிந்திக்க வைத்தன. சில விடயங்களை நரேந்திரன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். எனினும் செயல்பாட்டு hPதியான குருவின் பாடத்தில் இறைவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் நரேந்திரன் சுவாமி இராமகிருஷ்ணரின் முதற்சீடராவதுடன் விவேகானந்தர் என்ற திருநாமத்தையும் பெறுகிறார்.

‘எனது மரணத்தின் பின்னர் எதைப்பற்றியும் கவலைப்படாது உலக மக்களின் விடிவுக்காகவும் இறையுணர்வின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பாடுபடுவதற்கு நீயே பொருத்தமானவன்’ என்ற தனது குருவின் வேதவாக்கிற்கிணங்க எல்லாவற்றையும் துறந்து தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வீறுகொண்டு சேவைசெய்யத் துணிகிறார் விவேகானந்தர்.

மகத்தான இறையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு. அதனை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் தத்துவ நோக்கம். வெறும் புத்தகங்களை படித்துக்கொண்டு கற்பனாவுலகத்தில் வாழ்வதில் அந்த இறையுணர்வு கிடைத்துவிடப்போவதில்லை. அந்த மகத்துவமான உணர்வு உணரப்படவேண்டிய ஒன்று. அவ்வாறு உணரப்பட்டவுடன் மனித சேவையே மனதில் முன்னிற்கும் என்ற கோட்பாட்டை அதிகம் வலியுறுத்திய விவேகானந்தர் இந்திய இளைஞர்களை தனது அறப்போராட்டத்தில் இணைவதற்கு அழைத்தார்.

பாரத நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க, வெறும் கமண்டலத்துடன் மட்டும் புறப்பட்டு பல்வேறு சேவைகளை செய்யத்தொடங்கினார். குறிப்பாக, மக்கள் சோம்பேறிகளாக இருப்பதையும் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதையும் உணர்ந்து அதற்கேற்றாற்போல் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செய்தார். ஆன்மிகம் சார்ந்த மேடைப்பேச்சுகளால் கவரப்பட்ட மக்கள் முற்றிலுமாய் மாறியதில் வெற்றிகண்டார் வீரத்துறவி.
இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து மக்களைப்பற்றி அறிந்துகொண்ட சுவாமி, தனது பயணத்தின் முடிவில் கன்னியாகுமரி சென்று கடல்நடுவே அமைந்த பாறை ஒன்றின் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்தார். பாரதத்தின் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் குறித்து தியானித்ததாக பின்னர் தான் எழுதிய நு}லில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

அன்னை சாரதையிடம் ஆசிபெற்று 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சிகாகோவில் இடம்பெற்ற சர்வமத மகாசபையில் இந்தியப் பிரதிநிதி என்ற வகையில் சுவாமி கலந்துகொண்டார். அங்கு ஆவர் ஆற்றிய உரையின் ஆரம்பமும் உரையும் அனைவரையும் ஏகமாக கவர்ந்திழுத்தது. மதத்தின் பெருமையையும் தாய்நாட்டுக்கான தனிமனிதனின் கடப்பாட்டையும் சமூகத்தின்மீதான சேவை நிலையையும் அங்கு தனது சிம்மக்குரலில் அமெரிக்காவில் பரப்பினார்.

சிகாகோவில் அவர் நிகழ்த்திய உரை பெரும் பிரசித்தி பெற்றதாகும். “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்” என்று சற்றும் பயமின்றி அவர் பேசினார்.

“விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்” என மதம்சார் கடப்பாட்டையும் விளக்கினார்.

இன்னும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கியிருந்து வேதாந்தம் பற்றிய பரப்புரைகளில் ஈடுபட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் கொழும்பிலும் தனது வீர உரையை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று உலகமெங்கிலும் கிளைவிரித்துப் பரப்பி சமுக சேவைகளில் முன்னிற்கும் இராமகிருஷ்ண மடங்களின் முதற்கர்த்தா சுவாமி விவேகானந்தரே. கல்கத்தாவில் மக்கள் சேவைக்கென தனது குருவின் பெயரால் இவர் உருவாக்கிய இராமகிருஷ்ண மடம் பின்னர் சேவைவிஸ்தரித்து இன்றும் மக்கள் சேவையில் ஈடுபடுகின்றமை நாம் அறிந்தவிடயம்.
‘எழுமின். விழிமின். கருதிய கருமம் கைகூடும்வரை அயராது உழைமின்’ என்ற விவேகானந்தரின் மகாவாக்கியம் இன்றும் இளைஞர்களின் வீரவாக்கியமாக உள்ளது.

இறைபணியுடன் தேசப்பற்றையும் ஊட்டிய சுவாமி 1902 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி முத்திப்பேறு பெற்றார். மிகக்கடுமையான உழைப்பினால் நோய்வாய்ப்பட்டமையே இவருடை இறப்புக்குக் காரணமாகும்.

வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகளேயாயினும் இந்த வீரத்துரவியின் ஆற்றல்மிகுந்த சமுதாயப் பணிகள் மிகப்பரந்தன. சுவாமியின் ஜனன தினத்தில் அவரது வழிமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் வழிநடப்பதே நாம் அவருக்கு செய்யும் கௌரவ மரியாதையாகும்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனையிலிருந்து சில:

• செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

• உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

• நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

• உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

• ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

-இராமானுஜம் நிர்ஷன்

நன்றி - வீரகேசரி வார வெளியீடு 11.01.2009

(சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தையொட்டி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு வீர இளைஞர்கள் தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. வீர சத்தியப்பிரமாணம், சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுடன் அறநெறி பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஆசிரியர்களுக்கு வீர இளைஞர் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முடியுமானால் கலந்துகொள்ளுங்கள்.

4 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி.

-அமலன் -அட்டன்.

Anonymous said...

என்னைப்பொறுத்த வரை அறநெறிப்பாடசாலை என்று இந்துத் தீவிரவாதம் தான் வளர்க்கப்படுகிறது சிறிலங்காவில். இவ்வாறு இளைஞர்களை மதம் சார்பாக வெறிகொள்ளச்செய்வதால் எவ்வித பயனுமில்லை.

Anonymous said...

இதுபோன்ற விடயங்களால் இளைஞர்களிடையே இந்து மததீவிரவாதம் தான் வளர்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழ் உணர்வோ பற்றோ கிடையாது. மாறாக அதற்கு எதிரான செயற்பாடே நடைபெறுகிறது.

kuma36 said...

//நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!//

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்