Todays Date:

அந்த நாள்...!



அதிகாலை மல்லிகையை
பறித்துவந்து அதில் வழிந்த
சொட்டுப் பனித்துளியை
நுனிவிரலில் ஏந்தி
இனிக்கிறது தேன் என்று சொன்ன
அந்த நாள்…


ரயில் பாதையில்நான்
ஓடி விழுந்தபோது
உன் கைக்குட்டையில்எச்சில் தடவி
ஒத்தடம் கொடுத்த
அந்த நாள்…


கரப்பானுக்கு பயந்து
கூரையில் ஏறி
தவறி விழுந்ததாய்
நீ கண்ட கனவை
நள்ளிரவில் தொலைபேசியில் கூறி
என் கனவைகலைத்த நாள்…..

யாரோ ஒருவன்
வீதியில் இறந்துகிடக்கஅருகில்
அவன் மனைவிஅழுவதைப்பார்த்து
என்னைக்கட்டிப்பிடித்து
எப்போதும் என்னுடன் இருப்பாயா என
ஏக்கத்துடன் கேட்ட நாள்…

மாமாவுடன் பேசியபொழுது
இடையில் என்பெயரைக் கூறி
நீ தடுமாறித் தவித்ததைஅதே பயத்துடன்
மழலை மொழியில்கூறிய
அந்த நாள்…

நகம்கடிக்கும் பழக்கத்தைவிடச்சொல்லி
நீ விரல்கடித்துக்கொண்டு
அழுதுத் துடித்த
அந்த நாள்…

எப்போதோ நாம்ஒன்றாய் பயணித்த
பயணச்சீட்டைபத்திரப்படுத்தி
அடுத்தவருடம் அதே தினத்தில்
முத்தம்கொடுத்தாயே
அந்த நாள்…

இவை அத்தனையும்॥
ஏன் இன்னும் எத்தனையோநினைவுகளை
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்…

யாரோ வைத்த கண்ணிவெடியில் - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிதறிப்போனதைத் தவிர…।

-ஆர்.நிர்ஷன

2 comments:

ஹேமா said...

காதல் கவிதையென்று சந்தோஷமாய் படித்துக்கொண்டிருக்க,கண்களைக் கலங்க வைத்துவிட்டீர்களே!

Mathu said...

மிகவும் நன்றாக இருக்கிறது கவிதை. ஆரம்பத்தில் இனிப்பாகவும் கடைசியில் எதிர்பாராமல் கசப்பாகவும்...மொத்தத்தில் கலக்கல்!