Todays Date:

காலம் கடந்தும் வாழும் 'காதல்' எனும் மந்திரச்சொல்..!

அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத்தூண்டும் ஆழத்தோடான புனிதமான உறவு காதல்.

இந்தக் காதலுக்கு மகுடம் சூட்டும் நாளாக மேலைநாட்டுக் கலாசாரத்தில் உருவானது தான் காதலர் தினம். ஒவ்வொரு வருட பெப்ரவரி 14 ஆம் திகதியும் கொண்டாடப்படும் காதலர் தினம் கீழைத்தேச இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்துவருகிறது. வியாபார நோக்கில் மேலைத்தேயர்களின் சுயதந்திரத்துக்காக உருவாக்கிய தினம் என்றும் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது என்றும் குறிப்பிட்ட சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் காதல் என்பதை கறுப்புக்கண்ணோட்டத்தில் பாராமல் ஆழமான அன்பின் அடித்தளமாக நோக்குபவர்கள் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
காதலர் தினம் உருவான விதம் பலவிதமாக கூறப்படுகிறது. செவி வழியிலான கதைகள் அதிகம் பேசப்படுவதுடன் ரோமானிய பாதிரியாரின் கதை எழுத்துருவில் உள்ளதாக கூறப்படுகிறது.

கி.பி. 270 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் ரோமானியாவை ஆண்ட சக்கரவர்த்தி அங்கு நடைபெறும் திருமணங்களுக்குத் தடைவிதித்திருந்தான். ஆண்கள் பெண்களைப் பார்த்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதனை மீறியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுவந்தது. ஆண்கள் காதலிப்பதால், மணம் செய்வதால் இராணுவத்தில் சேர்வதில்லை என்றும், இது ரோமானிய இராணுவத்தை பலப்படுத்துவதற்கான திட்டம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வலண்டைன் என்ற பாதிரியார், சக்கரவர்த்தியின் கட்டளையையும் மீறி பலருக்குத் திருமணம் செய்துவைத்தார். காதலர்களை சேர்த்துவைத்ததால் பாதிரியார் மீது அந்த மக்கள் அதிக அன்பு கொண்டிருந்தனர். இதனை அறிந்துகொண்ட சக்கரவர்த்தி சிறைத்தண்டனை வழங்கியதாகவும் பெப்ரவரி 14 ஆம் நாள் அவரை கல்லால் அடித்து சித்திரவதை செய்து கொன்றதாகவும் சொல்லபபடுவதுடன் காதலர்களின் அன்பை மதித்தமையால் வலண்டைன் பாதிரியார் இறந்த தினம் பின்னாளில் வலண்டைன் எனும் காதலர் தினமாக அது அறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் காதல் என்பதற்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை நாமறிவோம். காதல் என்ற விடயத்தைப் பற்றிக் கதைத்தாலே பெற்றோரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்பது காலத்தால் மாற்றமடைந்த ஒன்றாகும். கலாசராத்தோடு ஒன்றி வாழ்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு தவறான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது.

பொருத்தமான துணையை பொருத்தமான மறு துணை அடைவதில் தவறில்லை. அவ்வாறு தேர்ந்தெடுப்பதில் தான் பிரச்சினை இருக்கிறது. பள்ளிப்பருவ காதல், பஸ்தரிப்பிடக் காதல், முன்வீட்டுக்காதல், மொட்டை மாடிக்காதல்… என நினைத்த மாத்திரத்தில் காதல்கொண்டு புணர்ந்து காணாமல்போவதற்குப் பெயர் காதல் அல்ல. அன்பின் புனிதத்துவம் கெடாமல் காலம் உணர்ந்து காத்திரமான உறவாக வளர்ந்து புரிந்துணர்வு விட்டுக்கொடுப்புடன் மிளிரும் காதல் பெற்றோருக்கும் கட்டுப்படும் என்பதில் ஐயமில்லை.

தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம் முதல் ஐம்பெருங்காப்பியங்கள் அடங்களாக இலக்கியங்கள் இதிகாசங்கள் காதலையும் காதலின் உணர்நிலையை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. ‘காலத்தின் கண்ணாடி இலக்கியம்’ என்பார்கள் அவ்வாறின், காதல் பழங்காலம்தொட்டு மனித உள்ளங்களில் நின்று நிறைகின்றமை தெரிகிறது.

ஆக, காதலிப்பது தவறா? காதல்கொள்வது தவறா? அல்லது காதல் தவறா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாணவேண்டிவருகிறது. காதல் தவறு என்பது எங்கினும் குறிப்பிடப்படவில்லை. அது தவறு என்று சொல்வதற்கும் இல்லை. திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போன்று முகம்காணாத ஒருவரை இலேசாக உரசிச்செல்லும்போது கண்ணும் கண்ணும் பார்த்துக்கொண்டு மறுநாள் காமத்தில் மூழ்கிவிடுவது தவறான கண்ணோட்டடாகும்.
வெறுமனே பார்த்தல், பழகுதலில், பேசுதல் மாத்திரமன்றி ஒருவருக்கொருவரின் புரிந்துணர்விலும் விட்டுக்கொடுப்பிலும் காதலின் அடித்தளம் அமைகிறது. இது திருமணத்தின் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். திருமணத்தின் முன்னர் தான் காதல் என்றும் காதலின் இலட்சியம் திருமணம் தான் என்பது பல இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது. உண்மையான காதல் மரணித்தும் கூட வாழ்கிறது. ஏனென்றால் உயிரில், உணர்வுகளில் உயிரோட்டமாய் மாறி மனதின் அத்தனை மையங்களையும் அன்பால் கட்டுறச்செய்து சுவாசம் போன்று தொடரும் காதல் மரணித்த பின்னும் மணம் கொள்கிறது.

ஒவ்வொரு இளைஞனுக்கும் இலட்சியம் உண்டு. அந்த இலட்சியத்துக்காக பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கிடையில் உருவாகும் காதல் அவர்களுடைய உயர்ந்த இலட்சியத்தை பாதிக்குமாக இருந்தால் அல்லது அந்த இலட்சியத்துக்கு முழுத்தடையாக இருக்குமென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காதல் செய்யும்போது தம்மை காவியங்களின் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நினைத்து யதார்த்தத்தை மறந்து களிக்கும் காதலர்கள் எத்தனை பேர் தமது இலட்சியம் பற்றிச் சிந்திக்கிறார்கள்?
மற்றும் காதலர்களின் வழியில் பெற்றோரை எதிரிகளாக பார்ப்பதும் பெற்றோர் காதலை நஞ்சென்று நோக்குவதும் பற்றி பார்த்தல் வேண்டும்.

குழந்தை பிரசவமானதும் தாயானவள் அந்தக் குழந்தையை பற்றியும் அந்தக் குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் கனவு காண்கிறாள். தந்தையின் கடமை குறித்தும் உணர்கிறார்கள். இந்நிலையில் பிள்ளை வளர்ந்ததும் காதல் கொள்வதால் தவறான வழிக்கு இட்டுச்செல்லப்படுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதுவே பின்னாளில் எதிர்ப்பாக மாறுகிறது. திரைப்படங்களில் காதலையும் காதலர்களையும் ரசிக்கும் பெற்றோர் நிஜ வாழ்க்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனினும் ஆழமான அன்பினை வெளிப்படுத்துவதாக அமைந்து பெற்றோர் கண்ட கனவு களையாத விதத்தில் தேடப்பட்ட துணையை பெற்றோர் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதே நேரம், பெற்றோரின் மனநிலை பாதிக்கப்படாத விதத்தில் தமது காதல் துணையை தேடிக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இவ்வளவு காலம் குறையின்றி, பேணிப்பாதுகாத்த பெற்றோரின் மனம் காதலால் நோகடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
மேல்நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது காதலர் தினம் என்கிறோம். இதில் நல்லவற்றை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் என்ன? வெறும் விளம்பரங்கள், பரிசுப்பரிமாற்றங்களை விட தாம் கொண்டுள்ளது உண்மையான காதலா? அதன் நோக்கம் என்ன? அதனால் இலட்சியம் பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி சுயமதிப்பீடு செய்யும் நாளாக இதனைக் கொள்ளலாம் அல்லவா?

ஆம். காதலின் அழகு மனக்கண்ணுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஊடல்கூட குதூகலமான இன்பத்தை தருகிறது. இனிமையான பொழுதுகளைத் தருகிறது. வாழ்க்கையை ரசிக்கத் தூண்டுகிறது. உழைப்பில் ஈடுபடுத்துகிறது.

இதயத்தின் ஆணிவேர் வரை சென்று ஒவ்வொரு நமிடங்களையும் ரசனை நிறைந்த ரம்மியமான பொழுதுகளையாய் கழியச்செய்யும் காதலின் மகத்துவம் உணர்ந்து புரிதலோடு தொடர்வோம்.
காதலர் தினம் இன்பம் நிறைந்ததாகட்டும்.

அருகருகே வரையப்பட்டாலும்
சேர முடியாத சித்திரங்களாய்
நாம்

அத்திபாரமாய் இருக்கிறது
காதல்
அனைத்தையும் தாங்கிக்கொள்ள
இருக்கிறாய்
நீ

நாம்
என்பதை ஏற்றுக்கொள்ளும் வரை
காலத்தோடு பயணிப்போம்

காதல்
காலம் கடந்தும் வாழும்

விரிவாக படிக்க ……..